Header Ads



கபூரியா விடயத்தில் உடனடியாக ஜனாதிபதியை தலையிடுமாறு, முஸ்லிம்கள் வலியுறுத்த வேண்டும்


- அல்ஷெய்க்  ஏ.ஸீ.எம். இனாயத்துல்லாஹ் -


மர்ஹூம் என்.டி.எச். அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள் தனக்கு இருந்த அறிவு ஞானம், அனுபவத்தின் அடிப்படையில் இயங்கி இந்த மார்க்க நிறுவனத்தையும் அதன் செலவுகளை எதிர்நோக்கும் வகையிலும்  அந்த மார்க்க நிறுவனம்  தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்ற தூய எண்ணத்திலும் அன்னாருக்குச்  சொந்தமான  200 ஏக்கர் காணியையும் அல்லாஹ்வின்  பாதையில்  வக்ப் பண்ணினார்.


 ஆனால் அதைப் பரிபாலனம் செய்தவர்கள் தூரநோக்குடன், நாட்டு நிலைமைகள், சட்டங்களை கருத்தில் கொண்டு செயல்படவில்லை என்பதை அந்த நிறுவனத்துக்கு எதிராக தற்போது  மேற்கொள்ளப்படும்  செயல்பாடுகள் தௌிவாகக் காட்டுகின்றன. 


இற்றைக்கு 37 வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள நான் மஹரகம கபூரிய்யா மதரஸாவுக்குச்  சென்றிருந்தேன். அப்போது அங்குள்ளவர்கள் மதரஸாவையும் அதன் சுற்றுப் புறங்களையும் எனக்குக் காட்டினார்கள். வக்பு செய்யப்பட்ட அந்த 200 ஏக்கர் கதையையும் கூறினார்கள். அந்த காணியையும் பார்த்துவிட்டு வருவோம் என்ற நினைப்பில் அவர்களிடம் கேட்ட போது அதில் பெரும்பகுதியை பலர் சட்டவிரோதமாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் அதற்கு  வேலியே இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியையும் கூறினார்கள். 


அப்போது இருந்த அதிபருடனும் கதைத்தோம். அவரும் அதே கதையைத்தான் திருப்பித் திருப்பி கூறினார். அவர்தான் அனைத்துக்கும் பொறுப்பாக இருக்கின்றார் எனக்கூறியபோது அதற்கு பொறுப்பான பரிபாலன சபை இருக்கின்றதா என நாம் கேட்டோம். அவர்கள் அதிபருடன் டெலிபோனில் கதைத்து தேவையான  போது  அவர்கள் அறிவுறுத்தல்கள் கொடுப்பதாகவும் நிர்வாகம் சுமுகமாக நடைபெறுகின்றது எனவும் கூறினார். 


ஆனால் அந்த மதரஸா எதிர்காலத்தில் பல சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்கும், அதன் இருப்புக்கு அவை நிச்சியம் சவாலாக அமையும் என நாம் எமக்கிடையில்  பேசிக் கொண்டோம். சுமார் 40 வருடங்களின் பின்னர் அந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்கின்றது. அதற்குக் காரணம் அதன் நிர்வாகிகளும்  அதற்குப்  பொறுப்பானவர்களும் தான் என்பது இப்போது தௌிவாக விளங்குகின்றது. 


அதேநேரம்  பேருவலையில்   பாடசாலைக் கல்வி அறிவு இல்லாத ஒரு தனிமனிதனுடைய முயற்சியால் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது எவ்வாறு இயங்குகின்றது என்பதைக் கூட கபூரிய்யா மரதஸாவின் நிர்வாகம் பார்த்திருந்தால் பல விடயங்களையும் அவர்களால் சீர் செய்திருக்கலாம். 


அந்தக்காலத்தில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் ஜாமிஆ நளீமிய்யாவை நிர்மாணிக்க காணி வாங்கியபோது அவர்கள் செய்த முதல் பணி அந்த காணியைச் சுற்றி உறுதியான மதில்கள் சுமார் 5- 6 அடி உயரத்துக்கு அவருடைய சொந்த செலவில் நிர்மாணித்தார்கள். ஜாமிஆவின் கட்டடங்களை நிர்மாணிக்கும் போது அந்த நேரத்தில் அன்னாருக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கற்றவர்கள், அனுபவமிக்க அறிஞர்களின் துணையுடன் பாராளுமன்றத்தில் அப்போது மிக  செல்வாக்குடன் இருந்த  வௌிநாட்டு அமைச்சரான மர்ஹூம் ஏ.ஸீ.எஸ். ஹமீத்  அவர்களின் சொந்த தனியார் சட்டமாக பாராளுமன்றத்தில் ஜாமிஆ நளீமிய்யா தனியார் நிறுவனம் என்பதை சமர்ப்பித்து பாராளுமன்ற அங்கீகாரத்தையும் பெற்றார்கள். 


அந்த மிக நீண்ட தூர சிந்தனையுடன் மர்ஹூம் நளீம் ஹாஜியார் செயல்பட கபூரிய்யா போன்ற நிறுவனங்களின் நிலைமைகளும் காரணமாக இருக்கலாம். அது மட்டுமன்றி ஜாமிஆவையும் பலருடைய அபிப்பிராயப்படி அரச பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையைும் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் அப்போதிருந்த சனாதிபதி பிரேமதாஸ அவர்கள் ஊடாக அந்த கோரிக்கையை வைத்தபோது சனாதிபதி அதற்கு உடன் அங்கீகாரம்  கொடுத்துவிட்டு  மிக முக்கியமான ஒரு விடயத்தை ஹாஜியாரிடம்  தெரிவித்தார்கள். 


அதாவது இதனைச் செய்வதற்கு எனக்குத் தேவை இரண்டு வாரங்கள் மட்டும் தான். ஆனால்  களனியில்  பௌத்தர்களுக்கென இயங்கிய வித்தியாலங்கார பிரவேனாவுக்கு நடந்தது என்ன என உங்களுக்குத் தெரியுமா, அது  பௌத்த பிக்குகளின் கல்விக்கூடமாக இருந்தது. அதைப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேணடும் என பலரும் எனக்கு ஆலோசனை தெரிவிக்க அதனை உடனடியாக பல்கலைகழகமாக மாற்ற வேண்டும் எனக்கூறியபோது அதை நான் செய்தேன். 


இப்போது  அங்கே பெண் பிள்ளைகளும் ஆண்களும் பௌத்த பிக்குகளும் நடந்து கொள்ளும் நடத்தையைப் பார்க்கும் போது இன்னும் மிகக்குறுகிய காலத்தில் பௌத்தம் இந்தநாட்டைவிட்டே ஓடிவிடும். அந்த நிலைமை இந்தநாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்படுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா எனக் கேட்டுவிட்டு ,உங்களுக்கு இரு வாரங்கள் தருகிறேன். நன்றாக ஆலோசனை செய்து என்னிடம் கூறுங்கள். அதனை நான் சிறப்பாக செய்து தருகின்றேன் என மர்ஹும் ஹாஜியாரிடம்  சனாதிபதி பிரேமதாஸ கூறியதாக மர்ஹூம் ஹாஜியார் எங்களிடம்  சொன்னார். 


இப்போது பாருங்கள். அல்லாஹ்வுக்காக மாத்திரம் என்ற தூய எண்ணத்துடன்   எந்த அற்பநோக்கங்களுமின்றி துய்மையாக அந்த உயர்ந்த மனிதர் சிந்தித்தபோது அதிகாரத்திலிருந்த அத்தனை சக்திகளும் அவர்களுக்கு துணையாக இருந்து  அல்லாஹ்வின் மகத்தான் வழிகாட்டுதல் அந்த உயர்ந்த மனிதனுக்கு கிடைத்திருக்கின்றது. இந்த  தூரநோக்கும், ஞானமும் இல்லாமல் ஒரு போதும் சமூக நலனுக்காக  பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. 


அதைத்தான் மற்றொரு தடவை  சவூதி அரேபியாவின் விமானப் படைத் தளபதியை மர்ஹூம் ஹாஜியார் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு அன்னார் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அன்னார் நாடு திரும்பியயோது அந்த விமானப்படைத் தளபதி  நன்றி  செலுத்த நாம்  சென்றபோது அவர்கள் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கூறினார்கள். நளீம் ஹாஜியார் இறையடி சேர்ந்தால் இன்னும் 100 வருடங்களுக்கு அவரைப் போன்ற யாரும் இலங்கைக்கு அவசியமில்லை எனக்கூறியபோது நாம் சற்று கவலைப்பட்டு ஏன் அப்படிக்கூறுகின்றீர்கள் என அவரிடம் வினவினோம். 


அன்னார் கூறினார்கள். ' 100 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்குத் தேவையான அனைத்தையும் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் செய்து விட்டுத்தான் செல்கின்றார். எனவே அதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை' இந்த நுணுக்கமான கருத்து எவ்வளவு உண்மையானது என்பது தற்போது தௌிவாக புரிகிறது. 


எனவே, தற்போது கபூரிய்யா மதரஸாவை அற்பர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சி எவ்வாறு  செய்யப்பட வேணடும் என்பதை நிறுவனத்துடன் செயல்படும் பரிபாலன சபை தூய எண்ணத்துடன் நன்றாக ஆலோசனை செய்து  சனாதிபதியை அணுகி அவர் மூலம் உயர்மட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாத்திரம் அந்த நிறுவனத்தைக் காப்பாற்றும்   செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். 


அதை விடுத்து  எடுக்கும் எந்த  செயல்பாடுகளும் நிலைத்து நிற்காது. அதே நேரம் அரசியல் வாதிகளை குறிப்பாக மாற்றுமத அரசியல் வாதிகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற அங்கீகாரம் பெறமுடிந்தால் மிகவும்  உறுதியாக இருக்கும். ஆனால் அதனைச் சாதிக்கலாம். அதற்கு  பரிபாலன சபை கடும் தியாகமும் அயராத முயற்சிகளும்  செய்ய வேண்டும் அதற்கான கூலியை அல்லாஹ்விடம் மாத்திரம்தான் எதிர்பார்க்க வேண்டும். 


இந்த உறுதியுடன் செயல்பட்டால் அது சாத்தியமாகும். அது தவிர வேறு பதிலீடுகள் இருப்பதாகத்  தெரியவில்லை.

No comments

Powered by Blogger.