Header Adsசறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல் கீப்பராக’ வளர்ந்த இளைஞன்


செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து, ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று.


அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம்.


வில்லாவின் பாடிமூர் ஹீத் பயிற்சி மைதானத்தில் உள்ள அதே லாக்கர் இப்போது உலகக்கோப்பை, கோபா அமெரிக்கா ஆகியவற்றில் வென்ற பதக்கங்களால் நிரம்பியுள்ளது. மேலும் கத்தாரில் சிறந்த கோல் கீப்பராக இருந்ததற்காக கோல்டன் க்ளோவ் கோப்பை வழங்கப்பட்ட பிறகு, மார்டினெஸ் 2022 ஃபிஃபா விருதுகளில் தான் விரும்பிய தனிப்பட்ட முறையிலான பாராட்டையும் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபாவின் சிறந்த கோல் கீப்பர் விருதை அவர் பெற்றார்.


வில்லாவில் நீண்ட காலமாக கோல் கீப்பிங் பயிற்சியாளராக இருக்கும் நீல் கட்லருடன் எமி மார்டினெஸ் மேற்கொண்ட பயணம் மிகவும் சிறப்பானது. நீல் கட்லர் அவரது நெருங்கிய நண்பராகவும் அதிகாரப்பூர்வமற்ற உளவியலாளராகவும் இருந்தார்.


“பிரீமியர் லீக்கில் நம்பர் 2 கீப்பராக இருந்து இவ்வளவு குறுகிய காலத்தில் உலகக் கோப்பையை வெல்வது தனித்துவமான விஷயம். ஆனால், எமி தனது ஆசை, பணி நெறிமுறை ஆகியவற்றில் இவ்வளவு விரைவான வளர்ச்சியை அடைந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன,” என்று கட்லர் பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.


“அவர் விரும்பிய இடத்திற்குச் செல்வதற்கு என்ன வேண்டும் என்றாலும் அதைச் செய்யும் அவரது மன உறுதி மிகவும் பெரியது. அவரது தீரா ஆர்வம் மிகவும் தெளிவாக இருந்தது. அதனால்தான் அவரை முதலில் வில்லாவிற்கு அழைத்துச் செல்ல நான் மிகவும் கடினமாக முயன்றேன்.


அக்டோபர் மாத இறுதியில் கட்லர் வில்லாவை விட்டு வெளியேறினார். அப்போது புதிய தலைவராக யுனாய் எமிரி நியமிக்கப்பட்டார். அவருடன் கோல் கீப்பர் ஸ்பெஷலிஸ்ட் ஜாவி கார்சியா உட்பட அவரது சொந்த பயிற்சி ஊழியர்களை அழைத்து வந்தார். கார்சியா, ஆர்செனலில் மார்டினெஸுடன் பணிபுரிந்தவர்.


ஆனால், கட்லர்-மார்டினெஸ் நெருக்கம் அதற்குப் பின்னரும் தொடர்ந்தது. மார்டினெஸ் கட்லரின் வெளியேற்றத்திற்கு ஓர் உணர்ச்சிகரமான சமூக ஊடக பதிவில் பதிலளித்தார். அதில் அவர் கட்லரை “சிறந்த பயிற்சியாளர்” என்று வர்ணித்தார். மேலும் அவரது உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு லூசைல் மைதானத்தில் இருந்து கட்லருக்கு ஃபோன் செய்தார்.


“இறுதிப் போட்டிக்குப் பிறகு எமிக்காக நான் முதலில் மன நிம்மதியை உணர்ந்தேன். நம்ப முடியாத அளவுக்குப் பெருமையாக இருந்தது. ஏனெனில் அவர் தனது முழு வாழ்க்கையையும் அந்தத் தருணத்திற்காக அர்ப்பணித்திருந்தார் என்பதை நான் அறிவேன்,” என்று கூறுகிறார் கட்லர்.


“பிரான்ஸுக்கு எதிரான பெனால்டி ஷூட்-அவுட்டின்போது மக்கள் அவரை விமர்சித்தனர். பிறகு அவர் கோல்டன் க்ளோவ் கோப்பையுடன் கொண்டாடியபோது ‘முட்டாள்’ என்று கூறினார்கள். ஆனால், எமியை நான் வேறுவிதமாக அறிவேன்.


அவர் உண்மையில் மிகவும் அனுதாபம் கொண்டவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக எதையும் செய்பவர், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புபவர். வில்லாவில் அவர் எப்போதும் பார்பிக்யூ ஏற்பாடு செய்து, அணியையும் அவர்களது குடும்பத்தினரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வார். ஏனென்றால் அதுதான் அவருக்கு முக்கியம்,” எனக் கூறுகிறார் கட்லர்.


“எமி அந்த உலகக் கோப்பையை அடைவதற்காகவும் அதை வெல்வதற்காகவும் அனைத்தையும் கொடுத்தார்,” எனக் கூறிய கட்லர், “அவர் தனது சொந்த ஊட்டச்சத்து நிபுணர், யோகா, பிலாடிஸ் ஆசிரியரைப் பெற்றுள்ளார். அடுத்த ஆட்டத்திற்காகத் தயாராக வேண்டி அவர் நள்ளிரவில் நீச்சல் அடிப்பதை நான் அறிவேன்.


அவர் இங்கு வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதை நீங்கள் உணர்ந்தால், அவர் விரும்பும் வழியில் கொண்டாடட்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஏனென்றால், அவர் கடந்து வந்த ஒவ்வொரு படியிலும் அந்தத் தகுதியை அவர் சம்பாதித்துள்ளார்.


எமிரேட்ஸ் மைதானத்தில் இறுதி சீசனின் முடிவில், 2019-20 கோவிட் காலகட்டத்தில், கன்னர்ஸ் முதல் அணியில் தேர்வாகியிருந்த பெர்ன்ட் லெனோ காயமடைந்தபோது மார்டினெஸுக்கு வாய்ப்பு கிடைத்து அவரது சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது.


செல்சீக்கு எதிரான FA கோப்பையின் இறுதிப்போட்டி வெற்றி உட்பட தொடர்ச்சியாக 11 போட்டிகளில் அவர் ஆடினார். ஆனால் மற்ற இடங்களில் வழக்கமான முதல்-அணி கால்பந்து போட்டிகளைத் தேட அவர் முடிவு செய்தார். கட்லர் அவரையே கவனித்துக் கொண்டிருந்தார்.


“எங்களிடம் கோல் கீப்பர்களின் பட்டியல் இருந்தது. நான், ஜோஹன் லாங்கே (ஆஸ்டன் வில்லா விளையாட்டு இயக்குநர்) மற்றும் சாரணர் துறைக்கு இடையே நிறைய சந்திப்புகள் நடந்தன.


“அவர்களுடைய பட்டியலில் எமி எங்கோ கீழே இருந்தார். ஏனெனில் ஐரோப்பா முழுவதும் உள்ள மற்ற கோல் கீப்பர்களுடன் ஒப்பிடும்போது அவர் பல போட்டிகளில் விளையாடவே இல்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் நான் ஒரு கோல் கீப்பரின் பாணி மற்றும் ஃபார்மை எப்படிப் பார்க்கிறேன் என்பதைக் கருத்தில் கொண்டு எனது யோசனைகளை ஏற்றுக்கொண்டனர்.


முதல்தர அணிக்கான கால்பந்து போட்டியில் அதிகம் விளையாடாத ஒரு கோல் கீப்பருக்கு 18 மில்லியன் யூரோ செலவழிக்க மக்களை நம்ப வைக்கும் முயற்சி எளிதானதல்ல. ஆனால், நான் அதைச் செய்தேன். நான் ஒரு பவர்பாயின்ட் விளக்கக் காட்சியை உருவாக்கினேன். அவர் கொண்டு வரும் திறமை, அவருடைய குணநலன்கள் உட்பட அனைத்தையும் விளக்கினேன்.


பிறகு எமிக்கு கிளப் குறித்தும், நான் இங்கு என்ன செய்கிறேன், நாம் எப்படி ஒன்றாகச் சாதிக்கலாம் என்றும் அவரிடம் தொலைபேசியில் பல உரையாடல்களை மேற்கொண்டேன். எமியை சிறப்பானவராக ஆக்க எதையும் செய்வேன் என்பது அவருக்குத் தெரியும். அதே அணுகுமுறையை அவரும் என்னிடம் கொண்டிருந்தார்.


எங்களுக்குள் இருந்த அந்தத் தொடர்பை அவரும் உடனடியாக உணர்ந்தார். ‘அவ்வளவுதான். நான் வில்லாவுக்கு வருகிறேன்’ என்றார். வேறு சில கிளப்புகளும் அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றன. ஆனால், அவர் வாக்கு தவறாதவராக இருந்தார்.”


மார்டினெஸ் தனது முதல் ஏழு பிரீமியர் லீக் ஆட்டங்களில் நான்கு போட்டிகளில் எதிரணியை ஒரு கோல்கூட அடிக்கவிடாமல் தடுத்ததன் மூலம் ஆஸ்டன் வில்லாவில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார்.


இருப்பினும் சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடியாக வேண்டும் என்பது அவரது இலக்குப் பட்டியலில் இருந்தது. “அவர் ஆஸ்டன் வில்லாவிற்கு வந்தபோது அவருக்கு நிறைய இலக்குகள் இருந்தன. தினமும் அவர் தனது லாக்கரை திறக்கும்போது, அந்தப் பட்டியலில் சிலவற்றை டிக் செய்வோம்,” எனக் கூறுகிறார் கட்லர்.


“முதல் ஆண்டில், அந்த இலக்குகளில் ஒன்றான அர்ஜென்டினாவுக்கான நம்பர் 1 கோல் கீப்பர் என்ற இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்கை அவர் அடைந்தார். ஜூன் 2021இல் அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது அது அவருக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.


அவர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என நினைப்பார். கோல்களைத் தடுப்பது, குறுக்கே புகுந்து பந்தை சேகரிப்பது, துல்லியமாக பாஸ் செய்து முடிப்பது என்று அனைத்திலும் புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொள்வார். கோபா அமெரிக்கா போட்டிகளில் ஆறு ஆட்டங்களில் நான்கில் எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்திருந்தார்.


சில நேரங்களில் ஓர் உளவியலாளராக இருந்து, அவரை உணர்ச்சிரீதியாக அணுகி, அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது எனது வேலையாக இருந்தது. எதிரணியை கோல் அடிக்கவிடாமல் முற்றிலுமாகத் தடுப்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். தடுக்கச் சாத்தியமே இல்லாத கோல்களைக்கூட தடுத்தாக வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆகவே, அது நடக்காத நேரங்களில் அந்தத் தோல்வியை எப்படிச் சமாளிப்பது என்பதையும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.


2022 உலகக்கோப்பையில் விளையாடுவது மாடினெஸின் இலக்குப் பட்டியலில் இருந்தது. அதையும் அவர் டிக் செய்தார்.


அதோடு இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியில் அவர் ஒரு முக்கியப் பங்கு கொண்டிருந்தார். பெனால்டி ஷூட் அவுட்டில் தனது சேட்டைகளால் பிரான்சின் பெனால்டி ஷாட் அடிக்கும் வீரர்களை வெற்றிகரமாக நிர்மூலமாக்கினார்.


மார்டினெஸ் எப்படி மிகவும் வலுவான, வெற்றி பெறவேண்டுமென்ற மனநிலையை வளர்த்துக்கொண்டார் என்பதற்கு இது கூடுதல் ஆதாரமாக இருப்பதாக கட்லர் பார்க்கிறார்.


அதேவேளையில் அந்த நடத்தை பலரால் விமர்சிக்கவும் பட்டது. அதில் தனது பங்கும் இருப்பதாக கட்லர் ஒப்புக்கொள்கிறார். “இது உண்மையில் என் தவறு. ஏனெனில் அவரது ஆளுமை, இருப்பை அதுபோன்ற சூழ்நிலைகளுக்குக் கொண்டு வருவதற்காக நாங்கள் நீண்டகாலம் பணியாற்றினோம்.


அவர் விரக்தியைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது ஓட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர் நம்பிக்கையுடன், ஆணவத்தின் எல்லையைத் தொடும்வரை சென்று தனது முழு ஆர்வத்தையும் காட்ட வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். அது இருக்கக்கூடிய சூழ்நிலையின்மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.”


“பெனால்டி ஷாட்களில்தான் கோல் கீப்பர்களுக்கு எதிரான புள்ளி விவரங்கள் அதிகமாக அடுக்கி வைக்கப்படுகின்றன. பெனால்டி ஷாட் அடிப்பவர் ஸ்கோர் செய்வது எளிதில் சாத்தியம். ஆகவே அவரை கோல் அடிக்கவிடாமல் செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டியது அவசியம்.


செப்டம்பர் 2021இல் ஆஸ்டன் வில்லா, மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் விளையாடியபோதுதான், மனரீதியாக ஒரு வீரரை பலவீனப்படுத்தும் முயற்சியில் நாங்கள் முதன்முறையாகக் கவனம் செலுத்தினோம். இது ஒரு வீரரை நன்கு அறிந்துகொள்வதைப் பொறுத்தது. பிறகு அவரது மனதுக்குள் நுழைவதற்கு அதிக நேரம் எடுக்காது.”


“இப்போது எமியின் லாக்கரில் இருக்கும் அசல் இலக்குப் பட்டியலில் டிக் செய்யப்படாத இலக்குகள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதற்காக வெற்றி பெற வேண்டுமென்ற தனது உந்துதலை மார்டினெஸ் இழந்துவிட்டார் என்று அர்த்தமில்லை.


முதலில் அவருடைய இலக்குகளில் விளையாட வேண்டும் என்பது இருந்தது. இப்போது வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பது இலக்காகிவிட்டது. எமியிடம் இருக்கும் முக்கியமான அம்சம், அவரது பசி. அவர் எவ்வளவு சிறந்த கால்பந்து வீரர் ஆனாலும் அதை இழக்கமாட்டார்.”


“அவரிடம் கால்பந்து போட்டிகளில் கொடுக்க இன்னும் நிறைய இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் முதலிடத்தில் இருக்கப் போகிறார்.”

No comments

Powered by Blogger.