Header Ads



சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கப்போகும் அநுரகுமார - காரணம் என்ன..?


மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேற்கொள்ளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்காததால்தான் அவருக்கு விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டாம் என மற்றைய தரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவருக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.


சவேந்திர சில்வா தொடர்பில் சில விடயங்களில் எமக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் இருந்ததை மதிக்கின்றோம்.


மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தோட்டாக்கள் பயன்படுத்தாமை தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட முயற்சி எடுக்கப்படுமானால் நாம் சவேந்திர சில்வாவின் பக்கம் நிற்போம். ஏனெனில் அன்று அவர் மக்கள் பக்கமே நின்றுள்ளார். இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்துள்ளார் என்றார்.

No comments

Powered by Blogger.