Header Ads



குரோதத்தின் வெளிப்பாடு, காவலுக்குச் சென்றாரா சுமந்திரன்..?


 - Subaideen Risan -


சுமந்திரன் ஐயா, நீங்கள் பஹ்மிதா ஆசிரியை எனும் தனிநபருக்கு எதிராக மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. 


ஷன்முகா பாடசாலை அதிபர் லிங்கேஷ்வரிக்கு சார்பாக மாத்திரம் வாதிடவுமில்லை.


ஒரே மொழிபேசும் மற்றொரு சக சிறுபான்மை இனத்தின் ஆடை முறைமை ஏற்க மறுக்கும் ஒரு குரோதத்தின் வெளிப்பாட்டுக்கு காவல்காக்க சென்றிருக்கிறீர்கள். 


இலங்கை தமிழ் முஸ்லிம் உறவின் வேர்களை வெட்ட நினைக்கும் இந்துத்துவாவின் ஊதுகுழலுக்கு நீங்கள் உரம் சேர்க்க சென்றிருக்குறீர்கள்.


சக கலாசாரத்தை சகிக்கவும், மதிக்கவும் மனமில்லாத ஒரு அதிபரை காப்பாற்ற முயற்சிக்கின்றீர்கள். 


உங்களைப் போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ்த்தலைவர்களே, குறுகிய இனத்துவ வட்டத்திலிருந்து இன்னும் வெளிவரமுடியாத போது பாமரத் தமிழ் சகோதர மக்கள் எம்மாத்திரம்?. 


கலாசார ரீதியில் இலங்கைத் தமிழ் முஸ்லிம் இனங்கள் அதிகமான ஒற்றுமைத் தன்மைகளைக் கொண்டிருந்தும்,  ஒரு நாகரீகமான ஆடை விடையத்திலே சகிப்புத் தன்மை இல்லாத உங்கள் அதிகாரத்திற்குட்பட்டு வாழும் துரதிஷ்ட நிலை எங்களுக்கு வந்தால், நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள் என்ற கேள்வி எம்மிடம் எழுவதும் இயல்பானதும் தவிர்க்க முடியாததும் அல்லவா?.


வடகிழக்கு இணைப்புக் குறித்தான முஸ்லிம் சமூகத்தின் அச்சத்தின் நியாயத்தன்மைக்கு உங்கள் இந்த செயற்பாடும் சாட்சியமாகும்.


ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் தோளோடு தோள் நின்ற முஸ்லிம்களை திட்டமிட்டு ஓரம்கட்டி, பிற்காலத்தில் அவர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த வரலாற்றின் அடிப்படை இதே சகிப்புத்தன்மையின்மைதான். 


ஷண்முகா பாடசாலையில் அரங்கேறியது போன்ற செயற்பாடு முஸ்லிம் பாடசாலை ஒன்றில் ஒரு தமிழ் ஆசிரியைக்கு எதிராக நடந்திருந்தால் நிச்சயமாக முழு முஸ்லிம் சமூகமும் அதனைத் தட்டிக்கேட்க தயங்கியிருக்காது. இங்கு நீதியே முதன்மைப் படுத்தப்படவேண்டியது இனச்சார்பு நிலைப்பாடல்ல.


ஐரோப்பாவில் அகதிகளாக குடியேறி வாழும் நம்மக்களுக்கு எதிராக அந்நாட்டவர்கள் அதிபர் லிங்கேஷ்வரியைப் போல நடக்க முற்பட்டால் எப்படியான விழைவை அது ஏற்படுத்தும்?.  


அதேபோல இங்கு முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகளை முஸ்லிம் கலாசார ஆடைமுறைக்கு நிர்ப்பந்தித்தால் இரு தரப்பு உறவும் எங்கு சென்று முடிவடையும்?. 


ஆக, 


ஒரு மதத்தை, கலாசார்த்தை பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமையை மறுத்து இன முறன்பாட்டை தோற்றுவித்த ஒரு அதிபருக்கு சார்பாக, தன் இனம் என்ற ஒரே காரணத்துக்காக காப்பாற்ற முயற்சிக்கின்றீர்கள். நீதி, நேர்மை என்பவை எல்லாம் இனவாதத்தின் முன்னால் தோற்றுப்போகாது. 

No comments

Powered by Blogger.