Header Ads



நரேந்திர மோடி ஒரு கோழை, என்னையும் சிறையில் அடையுங்கள் என்கிறார் பிரியங்கா


ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த சத்யாகிரகப் போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.


அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தத் தகுதி நீக்கத்திற்கு நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சனிக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, அதானி குறித்து தொடர்ச்சியாக தான் பேசிவருவதைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாகவும், அந்தப் பயத்தின் காரணமாகவே தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் மகாத்மா காந்தி நினைவகம் அமைந்துள்ள ராஜ்காட்டில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.


அந்தக் கூட்டத்தில் பிரதமரை கோழை என விமர்சித்த பிரியங்கா காந்தி, என்னைக் கைது செய்து என்னையும் சிறையில் அடையுங்கள் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், ’’என் அப்பா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்டார், உங்கள் அமைச்சர்கள் என் அம்மாவை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தினர். உங்கள் முதலமைச்சர் ஒருவர் தந்தை யாரென்று ராகுல் காந்திக்கு தெரியாது என்றார். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.


தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து பேசிய பிரியங்கா காந்தி, என் அப்பாவின் உடல் மூவர்ணக் கொடி போர்த்தி கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று அவரது குடும்பம் அவமரியாதை செய்யப்பட்டுள்ளது என்றார்.


காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, "உண்மையைப் பேசவிடாமல் யாராவது எங்களைத் தடுத்தால், உரிய முறையில் பதிலளிப்பதற்கான திறன் எங்களிடம் உள்ளது. நாட்டைக் காப்பாற்ற, சுதந்திரத்தைக் காப்பாற்ற, அரசியலமைப்பைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’’ என்றார்.

No comments

Powered by Blogger.