Header Ads



உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரை


உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.


நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. தேவையான அளவில் சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது.


அதேவேளையில், அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. சோடியம் உட்கொள்வதை குறைப்பது தொடர்பான அந்த அமைப்பின் அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வதை 30 சதவீதம் குறைக்கும் தனது இலக்கில் இருந்து உலக நாடுகள் விலகி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சோடியம் அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய், பக்கவாதம் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகளவில் உள்ளது.


அஜினொமோட்டோ போன்றவற்றிலும் சோடியம் உள்ளது. உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் 5 சதவீதம் மட்டுமே சோடியம் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விரிவான, கட்டாய கொள்கைகளை கொண்டுள்ளன.


73 சதவீத உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அறிக்கை காட்டுகிறது.


சோடியம் பயன்பாடு குறைப்பு கொள்கைகள் மூலம் 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.


ஆனால் தற்போது பிரேசில், சிலி, செக் குடியரசு, லித்துவானியா, மலேசியா, மெக்சிகோ, சௌதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே சோடியம் உட்கொள்வதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளின் விரிவான தொகுப்பு உள்ளது.


சர்வதேச அளவில் இறப்பிற்கும் நோய் ஏற்படுவதற்கும் சுகாதாரமற்ற உணவு காரணமாக அமைகிறது. அதிகளவு சோடியத்தை எடுத்துக் கொள்வதும் முக்கிய காரணமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசூஸ் கூறுகிறார்.


"பெரும்பாலான நாடுகள் சோடியம் குறைப்புக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நல பிரச்னை ஆபத்திற்கு தங்கள் மக்களை அவை ஆழ்த்துகின்றன. சோடியம் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும். உணவில் சோடியம் உள்ளடக்கத்திற்கான தங்களின் அளவுகோலை உற்பத்தியாளர்கள் செயல்படுத்த வேண்டும," என்று உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


ஒரு ஆரோக்கியமான நபர் தினசரி 4 கிராம் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.


“ஆனால், தற்போது சராசரியாக 10.8 கிராம் உப்பு மக்களால் தினமும் உட்கொள்ளப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இது இந்தியாவில் 9.8 கிராம் ஆக உள்ளது. இது நமது தினசரி தேவையை விட 2 மடங்கு அதிகம் ஆகும். குழந்தைகளுக்கு வழங்கும் தினசரி உணவில் 2 கிராம் வரை உப்பை சேர்க்கலாம்.


சராசரி நபர் 4 கிராம் உப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் 3 கிராம் உப்பை உணவில் சேர்க்கலாம். ” என்றார். இதேபோல், வயது, அவர்களின் நோயின் தன்மை ஆகியவற்றை பொறுத்தும் உப்பை உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.


நமது உணவில் இரண்டு விதமாக உப்பை சேர்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், “முதலாவதாக, கண்ணுக்கு தெரியும் வகையில் உப்பை பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக கண்ணுக்கு தெரியாத வகையில் உப்பை பயன்படுத்துகிறோம்.


நாம் உட்கொள்ளும் அரிசி, பருப்பு, காய்கறி, கீரை போன்றவற்றிலும் உப்பு உள்ளது. ஆனால் இவற்றில் மிக குறைந்த அளவே உப்பு உள்ளது. இதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய், சோடா பயன்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றிலும் கண்ணுக்கு தெரியாத உப்பு அதிகளவில் உள்ளது.” என்கிறார் அவர்.


உப்பை அதிகம் உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய பிரச்னை ஏற்படும் என்று மட்டுமே பலரும் நினைக்கின்றனர்.


ஆனால், உப்பை அதிகமாக எடுத்துகொண்டால் இதய நோய், பக்கவாதம், வயிற்றில் புற்றுநோய், கிட்னியில் கல், எலும்புகள் வலு இழப்பது, உடல் பருமன் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று மீனாட்சி பஜாஜ் எச்சரிக்கிறார்.


சோடியம் பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்தியா ஏற்கெனவே நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாக மீனாட்சி கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா மஞ்சள் பட்டியலில் உள்ளது. அதாவது, சோடியம் பயன்பாட்டை குறைக்க நாம் ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கி விட்டோம்.


சரியானதை உட்கொள்ளுங்கள் (Eat Right) இயக்கம் மூலம் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைத்து சாப்பிடுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.


பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதை குறைத்து, பருவ காலத்திற்கு ஏற்ற உள்ளூர் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மீனாட்சி அறிவுறுத்துகிறார்.


“உப்புக்கு மாற்றான இஞ்சி, பூண்டு, வெங்காயம், பட்டை, எலுமிச்சை போன்றவற்றை நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம். இவற்றின் மூலம் உணவில் உப்பின் தேவையை குறைக்க முடியும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கடலை, மோனோசோடியம் க்ளூடமைட், இன்ஸ்டண்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.


நமது தினசரி உப்பு தேவையே 4 கிராம்தான். ஒரே ஒரு இன்ஸ்டென்ட் உணவை சாப்பிடுவதன் மூலம் நான் இதனை பெற முடியும். இவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துகொள்வதை குறைப்பது மூலம் பாதி பிரச்னையை சரி செய்துவிடலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.


முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதோ, வெளியில் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டாலோ உணவு வகைகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

No comments

Powered by Blogger.