Header Ads



ஏவுகணைகளினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தகர்க்கப்படுமா..?


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பிடியாணை பிறப்பித்தது தொடக்கம் ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கவலை வெளியிட்டுள்ளது.


ஹேகில் இருக்கும் போர் குற்ற நீதிமன்றத்தின் மீது ஹைப்பர்சொனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கப்போவதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மட்வடேவ் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே சர்வதேச குற்றவில் நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


அதேபோன்று குற்றவியல் நீதிமன்ற வழக்குத்தொடுநர் கரிம் கான் மற்றும் புட்டினுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதிகளுக்கு எதிராக ரஷ்யாவின் விசாரணைக் குழு குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில், “சர்வதேச சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட செயல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான சர்வதேச நடவடிக்கைகளைத் தடுக்கும் இந்த முயற்சிகளுக்கு வருந்துகிறோம்” என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமை பேசிய மெட்வடெவ், “ஹேக் நீதிமன்றத்தின் மீது வடக்குக் கடலில் ரஷ்ய கப்பல் ஒன்றில் இருந்து ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒன்றை வீசுவதை கற்பனை செய்து பார்ப்பது மிக சாத்தியமாக இருக்கும்.


அனைவரும் கடவுள் மற்றும் ரொக்கெட்டுக்கு கீழ் நடக்கின்றனர். வானத்தை கவனமாகப் பாருங்கள்” என்று குறிப்பிட்டார்.


ஆயிரக்கணக்கான உக்ரைனிய சிறுவர்களை சட்டவிரோதமாக வெளியேற்றிய ஒரு போர் குற்றம் தொடர்பிலேயே ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (18) பிடியாணை பிறப்பித்தது.


இந்த பிடியாணையை செயற்படுத்த அந்த நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கும் 123 நாடுகளுக்கும் கடப்பாடு உள்ளது. புட்டின் அந்த நாடுகளுக்கு காலடி வைத்தால் அதனை செயற்படுத்த சட்ட அனுமதி உள்ளது.


ரஷ்யா அல்லது உக்ரைன் இரண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கம் பெறவில்லை.

No comments

Powered by Blogger.