Header Ads



குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள ஹிருணிகா


கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நேற்று(28.02.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்துள்ளார்.


முன்னதாக ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவர் ஒருவரை தவிர, கடத்தல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது.


மேலும் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், தெமட்டகொடவில் கடத்தப்பட்ட அமில பிரியங்கரவை அச்சுறுத்தியமை, தாக்கியமை மற்றும் மிரட்டியமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகள் ஒன்பது பேருக்கும் எதிராக சட்டமா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஒன்பதாவது குற்றவாளி என்பதுடன், அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடைக்கு ஹிருணிகாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக முறைப்பாட்டாளர் அமில பிரியங்கர என்ற இளைஞர் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments

Powered by Blogger.