Header Ads



தேர்தலை நடத்த நிதியில்லை என்கிறது அரசாங்கம், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டளை


தேர்தல் நடத்துவதற்கு நிதி இல்லை என பாகிஸ்தான் அரசாங்கம் கூறி வரும் நிலையில், அந்நாட்டின் நான்கு மாகாணங்களில் இரண்டில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது. 

  

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் உத்தரவை தலைமை நீதிபதி Umar Ata Bandial உள்ளிட்ட ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் பிறப்பித்துள்ளது. 


நாட்டின் 214 மில்லியன் மக்கள்தொகையில் 110 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட மிகப்பெரிய மாகாணமாக பஞ்சாப் உள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா 35 மில்லியன் மக்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாகாணமாகும்.


பெப்ரவரி 21 ஆம் திகதி ஜனாதிபதி ஆரிஃப் அல்வி (Arif Alvi) தேர்தலுக்கான திகதியை நிர்ணயித்தார். எனினும் தேர்தலுக்கு நிதி வழங்க நிதி அமைச்சு மறுத்ததைத் தொடர்ந்து,  பாதுகாப்பு அமைச்சு தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது.


ஆளும் கட்சி அரசியல்வாதிகள், ஜனாதிபதியின் நடவடிக்கையை கண்டித்து தனித்தனி அறிக்கைகளை வௌியிட்டிருந்தனர். 

 

இரண்டு மாகாணங்களிலும் தேர்தல் நடத்த 15 பில்லியன் பாகிஸ்தான் ரூபா (57 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) தேவைப்படும் என பாகிஸ்தானின் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. 


பாகிஸ்தானிய அரசாங்கம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் உள்ளது. சீனா மற்றும் உலகளாவிய கடன் வழங்குநர்களின் கடன் பொறியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில், அந்நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி, பிணை எடுப்பைக் கோரியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொருளாதார ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசியல் ஸ்திரமின்மையும் தோன்றியுள்ளது.  

 

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி மற்றும் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) கட்சி ஆகியவற்றுக்கு இடையில் அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. 


முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான் அரசியல்வாதியாக மாறி, 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவருக்கு பதில் ஷெரிப் பிரதமரானார். 


தற்போதைய ஜனாதிபதி ஆரிஃப் அல்வி, இம்ரான் கானின் PTI கட்சியின் மூத்த தலைவராவார். பாகிஸ்தானின் ஆளுகை முறையின் கீழ், ஆயுதப்படைகளின் கட்டளையை உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட  அரச தலைவராக ஜனாதிபதி இருக்கிறார். அதே நேரத்தில் பிரதமர் அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராக உள்ளார்.


இம்ரான் கான் இரண்டு மாகாணத் தேர்தல்களிலும் வெற்றி பெற முயற்சிக்கிறார். பிரதமர் ஷெரிப்பின் கட்சி தேசிய அளவில் அதிகாரத்தில் இருக்க, மாகாண தேர்தல்களை தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ முயற்சிப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது. 


இரண்டு மாகாணங்களும் முன்னர் இம்ரான் கானின் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்தன. பஞ்சாப் மாகாண சட்டமன்றம் ஜனவரி 14, 2023 அன்று கலைக்கப்பட்டது. மேலும் கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்றம் ஜனவரி 18, 2023 அன்று கலைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.