Header Ads



3 பெண்களுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி


ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


"பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை" மற்றும் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்" ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சார்க் நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 “அவள் தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் "பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை" மற்றும் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்" என்பன இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

2023 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால், பெருமை மற்றும் கீர்த்திமிக்க பெண்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன், கலாநிதி சுஜாதா அத்தநாயக்க, கலாசூரி சிரியாணி அமரசேன, அனுலா டி சில்வா மற்றும் ரஷ்மி நிமேஷா குணவர்தன ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை மகளிர் பணியகத்தின் தலையீட்டில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 25 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணி வெற்றியடைய உறுதுணையாக இருந்ததோடு, கடினமான காலங்களில் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள உதவிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம், அமெரிக்க  திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கும் ஜனாதிபதி இங்கு நன்றி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.