Header Ads



'அம்மா தூங்குறாங்கனு..' தாயின் சடலத்தோடு 2 நாட்கள் தங்கியிருந்த சிறுவன்!


பெங்களுருவில் 11 வயது சிறுவன் உயிரிழந்த தனது தாய் தூங்கிக்கொண்டு இருப்பதாக நினைத்துகொண்டு அவரது சடலத்துடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் அன்னம்மா (40) என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண், அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.


அவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். வீட்டு வேலை செய்து கிடைக்கும் பணத்தில் தனது மகனை படிக்க வைத்து வந்துள்ளார்.


பிப்ரவரி கடைசியில் சில தினங்களாக அன்னம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதனால் வீட்டு வேலைகளுக்கு செல்லாமல் ஓய்வில் இருந்திருக்கிறார்.


அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் ஓய்வெடுக்கிறார் என நினைத்து, அவரை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளான்.


மேலும், இரண்டு நாட்களாக சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட வெளியே சென்று அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். அதுமட்டுமின்றி, பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து இறந்த தாயின் உடலுக்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளான்.


இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக அம்மா பேசாமல் தூங்கிக்கொண்டிருப்பதாக நண்பர்களிடம் கூறினார்.


அவனது நண்பர்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர், அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ​​​​அன்னம்மா இறந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இதையடுத்து தகவலின் பேரில், பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி, சட்டப்பூர்வ முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தனர்.


சிறுவனிடம் விசாரித்தபோது, அம்மா உடம்பு சரி இல்லாததால், சோர்வில் தூங்குவதாக நினைத்துக்கொண்டதாக கூறியுள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவனை அன்னம்மாவின் சகோதரர் குடும்பத்திடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.


அன்னம்மா (44) உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வரும்வரையில் எதையும் உறுதிபட தெரிவிக்க முடியாது என்பதால், சந்தேக மரணமென்றே காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. அன்னம்மாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர்தான் இறந்ததாக கூறப்படுகிறது.  

No comments

Powered by Blogger.