Header Ads



உலகெங்கும் 10 இலட்சம் குர்ஆன் பிரதிகளை, வினியோகிக்க சவூதி மன்னர் உத்தரவு


எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பத்து இலட்சம்  குர்ஆன் பிரதிகளை உலகின் பல பாகங்களிலுமுள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் மதஸ்தாபனங்களுக்கு இலவசமாக விநியோகிக்க இரு புனிதஸ்தலங்களின் சேவகரான மன்னர் ஸல்மான் சென்ற ஞாயிற்றுக்கிழமை 5.3.2023 அன்று உத்தரவிட்டார்.


இக்குர்ஆன் பிரதிகள் ஸவுதி அரேபியாவினால் உலக முஸ்லிம்களின் தேவையைக் கருத்திற் கொண்டு அவர்களின் எல்லா இடங்களிலும் தடையின்றி குர்ஆன் பிரதிகளும் அது தொடர்பான நூற்களும் கிடைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட மன்னர் பஹ்த் குர்ஆன் அச்சகத்தினால் அச்சிடப்பட்டவைகளாகும். குறித்த நிறுவனம் மன்னர் பஹ்தினால் உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகவும் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி குர்ஆன் மற்றும் தர்ஜுமா, தப்ஸீர், அதனுடன் தொடர்புடைய பிற கலைகள் தொடர்பிலான நூற்களை அச்சிட்டு ஹஜ்ஜாஜிகள் மற்றும் ரமழானில் உம்ரா செய்ய செல்வோர் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் அந்நிறுவனத்தை பார்வையிடுவோருக்கு இலவசமாக வழங்கிவருகின்றது.


 மிகுந்த பொருட் செலவில் பார்வையாலர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தில் பல மதிப்பீட்டு சபைகள் அமைக்கப்பட்டு மிகவும் நுனுக்கமான அடிப்படையில் சரிபார்க்கப்பட்டே முஸ்லிம்களின் புனித மறை அச்சிடப்படுகின்றது. உலகின் 76 மொழிகளில் குர்ஆன் தர்ஜுமா இந்நிறுவனத்தினால் அச்சிடப்படுகின்றது. சிறியது பெரியது, ஜுஸ்கள் என்று அனைத்து வகையிலும் அல்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு இலவசமாகவே விநியோகிக்கப்படுகின்றன. 


மன்னர் ஸல்மானின் உத்தரவின் பேரில் குர்ஆன் பிரதிகளை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பயனாளிகளுக்கு குர்ஆன் பிரதிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் அவசரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மதீனா மன்னர் பஹ்த் குர்ஆன் அச்சகத்தின் மேற்பார்வையாளர் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் அப்துல் லதீப் ஆலுஷ்ஷெய்க் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


மேலும் இஸ்லாத்தின் நடுநிலைக்கருத்துக்களை மக்கள் மயப்படுத்தல் தீவிரவாதத்தை இல்லாமல் செய்தல் வெறுப்புணர்வை அளித்தல் போன்ற ஸவுதியின் உயர்வான திட்டங்களின் ஒரு அங்கமாக செய்யப்படும் இப்பணிக்காக அமைச்சர் மன்னர் ஸல்மான் அவர்களுக்கும் பட்டத்து இலவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததோடு பிரார்த்தனைகளையும் உரித்தாக்கினார்.

No comments

Powered by Blogger.