Header Ads



பல்டி அடிப்பாரா மயந்த..? சபாநாயகருடன் வாதிட்ட ஹக்கீம், அநுரகுமார கூறிய தீர்வு, ஹர்ஷவுக்கு நீதி கிடைக்குமா..??


நாடாளுமன்ற நிதிக்குழுவுக்கான தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவை நியமிப்பதில் சபாநாயகரின் பங்கு குறித்து இன்று -24- நாடாளுமன்றில் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.

ஏற்கனவே இந்தக் குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தலைமை வகித்து வந்தநிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டன.


இதனையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிதிக்குழுவுக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்கட்சிகள், பிரேரித்திருந்த நிலையில், அரசாங்கத்தரப்பு, எதிர்க்கட்சியின் மயந்த திசாநாயக்கவின் பெயரை பிரேரித்தது.


இந்தநிலையில் அதிக வாக்குகள் அடிப்படையில் மயந்த திசாநாயக்க நாடாளுமன்ற நிதிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இது நேற்றைய தினத்தில் நாடாளுமன்றில் வாத விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.


இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், சபாநாயகரே, தொலைபேசியின் ஊடாக அழைத்து குறித்த குழுவின் தலைவராக பொறுப்பேற்க தயாரா என்று மயந்த திசாநாயக்கவிடம் கேட்டதாக குறிப்பிட்டார்.


இதனை மயந்த திசாநாயக்கவே தம்மிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமிடமும் கூறியதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


எனினும் இதனை மறுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, மயந்த திசாநாயக்கவே தம்முடன் தொலைபேசியின் ஊடாக தொடர்கொண்டதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்த பிரச்சினை தற்போதைக்கு முடிந்துவிட்டதாக குறிப்பிட்டார்.


இந்தநிலையில் விடயம் தொடர்பில் விவாதம் தொடர்ந்த நிலையில், மயந்த திசாநாயக்க குறித்த பதவியில் இருந்து விலகி, ஹர்ஷ டி சில்வாவுக்கு இடம்கொடுப்பதே தீர்வாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யோசனை தெரிவித்தார்.


இறுதியாக அனுரகுமார திசாநாயக்கவின் யோசனையே இந்த பிரச்சினைக்கான தீர்வாகும் என்று அவை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை, நாடாளுமன்ற அரசாங்க நிதி பற்றியக்குழு தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தி வரும் நிலையில், பொது நிதிக்குழுவின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை நியமிப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


இந்தநிலையில் புதிய பதவியில் இருந்து விலகுவதில் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அது சபாநாயகரையே சார்ந்துள்ளது என்றும் திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர், குறித்த பதவியில் இருந்து விலகுமாறு விடுத்த கோரிக்கையை திஸாநாயக்க நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.