Header Ads



பிரபாகரன் உயிரோடுள்ளார் என்பது உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


பிரபாகரனின் உறவினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பின் ஊடாக விரைவில் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கப் பெறும் என கூறினார்.


''தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் சம்பந்தமாக, பழ.நெடுமாறன் ஐயா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கின்றார். இது 2009ம் ஆண்டு மே 18ஆம் தேதிக்கு பின்னர் இலங்கை அரசு தலைவர் பிரபாகரனின் உடல் என ஒரு உடலை காட்டிய போது, அது அவருடைய உடல் அல்ல, முடிந்தால், மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பிக்குமாறு சவால் விடுத்திருந்தேன். அவர்கள் அதற்கு முன்வரவில்லை. பரிசோதனை முடிவடைந்ததாக சொன்னார்கள். ஆனால் அது போலியானது. தலைவர் பிரபாகரனின் உடலை புதைத்து விட்டோம் என ஒரு தரப்பும், எரித்து விட்டோம் என கூறினார்கள். பிரபாகரனின் தயார் மற்றும் தந்தை ஆகியோர் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தலைவர் பிரபாகரனின் தந்தையார் இறந்து அவரது உடல் என்னிடம் கையளிக்கப்பட்டது. தகன கிரியைகள் நடைபெற்றன.


தாயார் என்னுடைய பொறுப்பில் இருந்து இறந்ததை தொடர்ந்து, அவருடைய உடலும் தகனம் செய்யப்பட்டன. அவர்களுடைய அஸ்தியை தலைவர் பழ.நெடுமாறன் ஐயாவிடமும், தலைவர் வைகோவிடமும், தலைவர் சீமானிடமும் அனுப்பி வைத்தேன். என்னிடமும் இருக்கின்றது.


இந்த சூழ்நிலையிலேயே டீ.என்.ஏ பரிசோதனையை இலங்கை அரசு இன்று வரை செய்யவில்லை. ஆகவே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சந்தேகம் தொடர்ந்தும் இருக்கின்றது. அவருடைய மரண சான்றிதழை கூட இலங்கை அரசாங்கம் இன்னும் பதிவு செய்யவில்லை. நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை மாத்திரம் தாக்கல் செய்தார்கள்.


இந்த பின்னணியில் பழ.நெடுமாறன் ஐயா இந்த செய்தியை சொல்லியிருக்கின்றார் என்றால், எனக்கு தெரியாமல் இருக்கலாம். அனால், அவருக்கு தெரிந்திருக்கின்றது என்பதற்காக எனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. இந்த அறிவிப்பானது, உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும். தலைவர் பிரபாகரனுடையது என காட்டப்பட்ட உடல் அவருடையது அல்லவென்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்," என்கிறார்.

No comments

Powered by Blogger.