Header Ads



காக்கை, மொட்டு, யானை கள்ள கூட்டணிக்கு மன்னிப்பே கிடையாது - எதிர்கட்சித் தலைவர்


 ஆரம்பத்தில் ராஜபக்சர்கள் மட்டும் நாட்டை அழித்த போதாக்குறைக்கு யானை, காகம், மொட்டு ஆகிய 3 தரப்புகளும் ஒன்று சேர்ந்து நாட்டை நாசமாக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தக் கூட்டை தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் மேலும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மக்கள் போராட்டத்தால் நிதியமைச்சரும், பிரதமரும்,ஜனாதிபதியும் பதவி விலகினாலும், பின்னர், தங்களுக்கு விசுவாசமான 134 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் இணைத்துக் கொண்டு ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதியை நியமித்துக் கொண்டனர் எனவும்,இதனால் மக்களின் அபிலாஷைகள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், இவ்வாறான நிலையில், மின் கட்டணம், வரிச்சுமை, எரிவாயு, உரம்,எரிபொருளின் விலைகள் என்பன அபரிமிதமாக அதிகரிப்பதாகவும், இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இந்த தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


70-77 காலகட்டத்தைப் போன்று நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியிலும் ராஜபக்சர்கள் சுகபோக  வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும்,நாட்டில் 220 இலட்சம் மக்களும் 42 இலட்சம் பாடசாலை மாணவர்களும் படும் துன்பங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்களை ஒடுக்கும் காக்கை-மொட்டு-யானை கள்ள அரசாங்கக் கூட்டணிக்கு முற்றிலும் மன்னிப்பே கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.


எனவே இந்த தேவைப்படாத அரசாங்கத்தை மார்ச் 09 ஆம் திகதிக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும்,ஐக்கிய  மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யுமாறும்,புதிய தொலைநோக்குடனும் புதிய வேலைத்திட்டத்துடனும் முன்னோக்கிச் செல்ல ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.


பண்டாரவளை நகரில் இடம்பெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.