Header Ads



நீதிக்கோரி உயர்நீதிமன்றம் செல்வேன் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால் நீதிக்கோரி உயர்நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பெப்ரவரி இறுதி வரை தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில் திறைசேரி விடுவிக்க முடியும்.


எனினும் சில நிதிகளை விடுவித்த நிலையில், மார்ச் 9 தேர்தலுக்காக தாங்கள் கோரிய அனைத்து நிதிகளும் விடுவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


அத்துடன் வேட்;பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையும் இதுவரை செவிசாய்க்கப்படவில்லை என்று புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தேர்தலை நிறுத்த உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பேராணை மனு எதிர்வரும் 23-ம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


இந்தநிலையில் மார்ச் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு செயல்பட்டு வருவதாகவும் எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.


உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புக்கள் பெப்ரவரி 22, 23, 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.


இந்த 3 நாட்களிலும் வாக்களிக்க முடியாத அஞ்சல் வாக்காளர்கள் பெப்ரவரி 28ம் திகதி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வாக்களிக்கலாம்.


இதேவேளை அஞ்சல் மூலவாக்களிப்பை நடாத்துவதற்கான சகல வசதிகளும் நிதிகளும் பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.