Header Ads



மக்கள் எப்படி கஸ்டங்களை அனுபவித்தாலும், ராஜபக்ஸக்களைப் பாதுகாப்பதே தனது கடமை என ரணில் செயற்படுகிறார்.


- ஹஸ்பர் -


ராஜபக்ஸக்கள் செய்த ஊழலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் தலையில் கட்டி இந்த அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருகின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


கிண்ணியாவில்  இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,


ராஜபக்ஸக்கள் ஆட்சி பீடமேறியது முதல் நாட்டில் கமிசன் செயற்பாடுகள் அதிகரித்தன. ஊழல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பொருத்தமற்ற பொருளாதார நடைமுறைகளை அவர்கள் பின்பற்றினர். இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. பொருட்களின் விலை 300 முதல் 500 வீதம் வரை அதிகரித்தன. இன்றும் அதிகரித்து வருகின்றன. எனினும் வருமானத்தில் எந்த அதிகரிப்பும் எற்படுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 


நாட்டின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மிகவும் சந்தோசமாக தைரியமாக நடமாடி வருகின்றார்கள். அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட சகல நட்டங்களையும் இழப்புகளையும் பொதுமக்கள் தலையில் கட்டி இந்த அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருகின்றது. 


ராஜபக்ஸக்கள் காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகளும் அதனால் ஏற்பட்ட பாரிய நிதி இழப்புகளும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  நாட்டிலுள்ள சகலரும் இவற்றை விளங்கியிருக்கின்றனர். 


எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. பொதுமக்கள் எப்படி கஸ்டங்களை அனுபவித்தாலும் ராஜபக்ஸக்களைப் பாதுகாப்பதே தனது கடமை என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார்.


இந்த விடயங்களை பொதுமக்களுக்கு மீள நினைவுபடுத்த விரும்புகின்றேன். நாட்டை பிச்சைக்கார நாடாக்கிய மொட்;டுக்கட்சியினருக்கும் அவர்களுக்கு துணை போனவர்களுக்கும் நமது பொன்னான வாக்குகளை அளிக்கலாமா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.


அதேபோல இவ்வளவு அநியாயங்கள் செய்தவர்களைப் பாதுகாத்து தமது சுகபோகத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்பட்டுவரும் யானைக் கட்சியினருக்கும், அவர்களோடு சேர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கலாமா எனக் கேட்க விரும்புகின்றேன். 


இறைவனால் நமக்கு சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் சிந்திப்போம். ஊழல்வாதிகளுக்கும், அவர்களுக்கு துணை போனவர்களுக்கும் இந்தத் தேர்தல் மூலம் நல்ல பாடம் படிப்பிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.