Header Ads



வர்த்தகரின் மரணம் தொடர்பில், வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


பத்தரமுல்லை - பெலவத்தை பகுதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.


நீச்சல் தடாகத்திற்கு அருகில் இரத்தம் காணப்பட்ட நிலையில், குறித்த வர்த்தகரின் தலைக்கு தாக்குதல் நடத்தி, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், பின்னர் அவரின் சடலம் நீச்சல் தடாகத்திற்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


ஆடைத் தொழிலில் ஈடுபடும் 50 வயதான ரொஷான் வன்னிநாயக்க என்ற வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபர் வெல்லம்பிட்டி – கித்தம்பஹவ பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும், இந்த வர்த்தகர் கடந்த 30ம் திகதி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த வர்த்தகரிடமிருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.


இந்த 4 கடனட்டைகளை பயன்படுத்தி, இந்தோனேஷியா நோக்கி செல்வதற்காக 5 விமான டிக்கட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த கடனட்டைகளை பயன்படுத்தி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 லட்சம் ரூபாவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவத்துடன் பெண்ணொருவருக்கு தொடர்புடையதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.


சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் சீசீடிவி கமராக்கள் இல்லாமையினால், அருகாமையிலுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீசீடிவி மற்றும் தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, குறித்த வர்த்தகரின் கார், நீர்கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த காரை கொண்டு வந்ததாக கூறப்படும் தம்பதியினர், வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.