Header Adsதுப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட, அதானி குறித்த விலகாத மர்மம்


இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கெளதம் அதானி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.


அதானியின் சாம்ராஜ்ஜியம் பற்றிய ஹிண்டன்பர்க்கின் அறிக்கை ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இப்போது வரை பார்க்க முடிகிறது. உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த கெளதம் அதானி தற்போது 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி தற்போது இந்தப் பட்டியலில் கெளதம் அதானியைவிட பல இடங்கள் முன்னிலைக்குச் சென்றுவிட்டார்.


இது அதானிக்குப் பெரும் அடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில், இந்திய தனியார் சேனல் ஒன்றுடனான உரையாடலில் கெளதம் அதானி, தான் மிகவும் மோசமான அனுபவத்தைச் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றி கூறினார்.


"ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இதுபோன்ற தருணங்கள் ஏற்படும். அவற்றை மறந்துவிடுவதுதான் நல்லது" என்றும் அவர் குறிப்பிட்டார்.


அதானி குறிப்பிடும் இரண்டு சம்பவங்களில் ஒன்று, 2008 நவம்பர் 26ஆம் தேதி நடந்த மும்பை தாக்குதல். அப்போது அவர் மரணத்தை மிக அருகில் இருந்து பார்த்தார். இந்தத் தாக்குதல் நடந்தபோது அதானி தாஜ் ஹோட்டலில் இருந்தார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.


இரண்டாவது சந்தர்ப்பம் மிகவும் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. 1998ஆம் ஆண்டு அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். கடத்தலுக்குப் பிறகு அவரை விடுவிக்க 15 கோடி ரூபாய் பிணைத்தொகை கோரப்பட்டது.


கடத்தல் எப்படி நடந்தது

1998 ஜனவரி 1ஆம் தேதி மாலை கௌதம் அதானி ஆமதாபாத்தில் உள்ள கர்ணாவதி கிளப்பில் இருந்து தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாந்திலால் பட்டேலுடன் காரில் முகமதுபுரா சாலையை நோக்கிச் செல்லவிருந்தார்.


"கர்ணாவதி கிளப்பில் இருந்து வெளியே வரும்போது கௌதம் அதானி கடத்தப்பட்டார். அப்போது ஆமதாபாத்தில் கர்ணாவதி கிளப் மிகப்பெரிய கிளப்பாக இருந்தது," என்று குஜராத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜ் கோஸ்வாமி தெரிவித்தார்.


"அவருடைய காருக்கு முன்னால் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதானி தனது காரை நிறுத்த வேண்டியதாயிற்று. அப்போது அருகில் இருந்த மாருதி வேனில் இருந்து ஆறு பேர் வெளியே வந்து கௌதம் அதானி, சாந்திலால் பட்டேல் இருவரையும் துப்பாக்கி முனையில் வேனுக்குள் உட்கார வைத்தனர்."


கடத்தலுக்குப் பிறகு இருவரும் ஒரு தெரியாத இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


கடத்தல் சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. அதானி சனிக்கிழமையன்று பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக ஆமதாபாத்தில் உள்ள சர்கேஜ் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.


அதானி எப்படி வெளியே வந்தார் என்பது பற்றிய கதைகள்

"இந்தக் கடத்தல் நடந்த முறை, பப்லு ஸ்ரீவஸ்தவா கும்பலின் நன்கு அறியப்பட்ட முறை. இந்தக் கடத்தலும் பப்லு ஸ்ரீவஸ்தவாவால் திட்டமிடப்பட்டது," என்று உத்தர பிரதேச கேடரின் ஐபிஎஸ் அதிகாரியும் உத்திர பிரதேச சிறப்பு அலுவல் படையின் நிறுவனர்களில் ஒருவருமான ராஜேஷ் பாண்டே பிபிசியிடம் கூறினார்.


"கௌதம் அதானி காவல்துறையால் மீட்கப்பட்டாரா, அவர் சொந்தமாகத் தப்பித்தாரா அல்லது அவரை விடுவிக்கப் பணம் கொடுக்கப்பட்டதா எனப் பலவிதமான பேச்சுகள் உள்ளன. ஆனால் அவர் எப்படி தப்பினார் என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை," என்று பத்திரிக்கையாளர் ராஜ் கோஸ்வாமி கூறினார்.


"இந்த விவகாரத்தில் கௌதம் அதானியை காப்பாற்ற, கடத்தல்காரர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பிணைத்தொகை கொடுக்கப்பட்டது," என்று ராஜேஷ் பாண்டே தெரிவித்தார். இந்தத் தொகை துபாயில் உள்ள இர்ஃபான் கோகாவிடம் அளிக்கப்பட்டது. இர்ஃபான் கோகா, கடத்தல் பிணை தொகையை வசூலிப்பதற்காக பப்லு ஸ்ரீவஸ்தவாவின் கும்பலில் இருந்தவர்.


பல கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் தொடர்பாக பரேலி சிறையில் அடைக்கப்பட்ட பப்லு ஸ்ரீவஸ்தவா தன்னிடம் இதைத் தெரிவித்தாக ராஜேஷ் பாண்டே கூறுகிறார். அன்றைய காலகட்டத்தில் சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு ஹவாலா ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது என்கிறார் அவர்.


"கெளதம் அதானி ஆமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டார். இந்தக் கடத்தலால் மிகவும் பயந்துபோன அதானி இந்த வழக்கில் சாட்சி சொல்ல வரவில்லை. எனவே ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்தக் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்," என்று ராஜேஷ் பாண்டே தெரிவித்தார்.


குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்

கௌதம் அதானியை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்கள் 15 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர். இந்த வழக்கில் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2018ஆம் ஆண்டின் இறுதியில் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.


கௌதம் அதானி கடத்தல் வழக்கில் 2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், முன்னாள் கேங்க்ஸ்டர் ஃபசல் உர் ரஹ்மான் என்கிற ஃபஸ்லு மற்றும் போகிலால் தர்ஜி என்ற மாமா ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.


ஃபசல் உர் ரஹ்மான் பிகாரை சேர்ந்தவர். அவர் 2006இல் நேபாள எல்லையில் இருந்து கைது செய்யப்பட்டார். அதேநேரத்தில் போகிலால் தர்ஜி கடத்தல் நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2012இல் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டார்.


ஆனால் நீதிமன்ற விசாரணையின்போது, கடத்தல்காரர்களை அடையாளம் காட்ட அதானி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் சாட்சியமளிக்கக்கூட நீதிமன்றத்திற்கு வரவில்லை.


சாட்சியங்கள் இல்லாததால் முக்கிய குற்றவாளிகள் இருவரும் 2018ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களும் இதே அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.


பப்லு ஸ்ரீவஸ்தவா 1995 இல் சிங்கப்பூரில் இருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அலகாபாத் அருகே உள்ள இந்த நைனி சிறையில் அடைக்கப்பட்டார் என்கிறார் ராஜேஷ் பாண்டே.


கௌதம் அதானியை கடத்தியதும் பப்லு ஸ்ரீவஸ்தவா கும்பல்தான் என்பது UPSTF விசாரணையில் தெரிய வந்தது. பப்லு ஸ்ரீவஸ்தவா சிறையில் இருந்துகொண்டே தனது கும்பலை நடத்தி வந்தார்.


கடத்தலின் மூளையாக பப்லு ஸ்ரீவஸ்தவா கருதப்பட்டார். அவரது உத்தரவின் பேரில் நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர்களின் கடத்தல் நடந்தது. பிணைத்தொகையாக பெரும்பணம் பெறப்பட்டது என்று ராஜேஷ் பாண்டே கூறினார்.


"கௌதம் அதானி வியாழக்கிழமை கடத்தப்பட்டதாக பப்லு ஸ்ரீவஸ்தவா என்னிடம் கூறினார். கடத்தலுக்குப் பிறகு பிணைத்தொகை பற்றிய பேச்சுவார்த்தை தொடர்ந்தது. நாளை வரை வங்கி மூடப்பட்டிருக்கும். வங்கி திறக்காமல் 15 கோடி ரூபாயைத் தன்னால் கொடுக்க முடியாது என்று அதானி சனிக்கிழமையன்று கடத்தல்காரர்களிடம் கூறினார். என்னைத் தேடி இன்று மாலைக்குள் போலீஸ் நிச்சயம் இங்கு வந்து சேரும் என்றும் அதானி கூறினார். அதே போல உண்மையிலேயே போலீஸார் அங்கு வந்துவிட்டார்கள்," என்று ராஜேஷ் பாண்டே குறிப்பிட்டார்.


இருப்பினும் இந்தக் கூற்றுகள் குறித்த கௌதம் அதானியின் தரப்பு உறுதிப்படுத்தல் பிபிசியிடம் இல்லை.


கௌதம் அதானி முதல் மற்றவர்கள் வரையிலான பல கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பற்றி, தான் பேசியிருப்பதாகவும் ஆனால் இதுவரை யாரும் இதுபற்றி கேள்வி கேட்கவில்லை என்றும் ராஜேஷ் பாண்டே கூறுகிறார்.


இது செவிவழிச் செய்தி அல்ல, கௌதம் அதானியை கடத்திய பப்லு ஸ்ரீவஸ்தவாவுடன் தான் நேரடியாகப் பேசியதாக ராஜேஷ் பாண்டே கூறினார்.


1998க்குள் கௌதம் அதானி குஜராத்தின் பெரிய தொழிலதிபராக மாறியிருந்தார். மூத்த சகோதரரின் பிளாஸ்டிக் வணிகத்தில் இணைந்ததன் மூலம் 1988 முதல் 1992க்குள் கௌதம் அதானியின் இறக்குமதி வணிகம் 100 டன்களில் இருந்து பல மடங்கு உயர்ந்து 40 ஆயிரம் டன்களாக ஆனது.


விரைவிலேயே அதானி ஏற்றுமதியிலும் கால் பதித்தார். மிக விரைவில் அவர் ஒரு பெரிய ஏற்றுமதியாளராக ஆனார். அவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளையும் ஏற்றுமதி செய்தார். பின்னர் முந்த்ரா துறைமுகத்துடன் இணைந்த பிறகு அதானியின் வணிகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட்டது.


கடத்தல் நடந்த நேரத்தில் அதானி தேசிய அளவில் மிகவும் பிரபலமான தொழிலதிபராக இருக்கவில்லை. எனவே அவர் கடத்தப்பட்ட கதை பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது என்று ராஜேஷ் பாண்டே குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.