Header Ads'அல்லாஹ்' உடன் வியாபாரம் செய்த சலாஹ் அதிய்யாஹ்


பொறியியலாளர் சலா அதிய்யா ஐப்பற்றி  அநேகர் அறிந்திருக்க மாட்டார்கள். சலாஹ் அதிய்யாஹ் என்பவர் எகிப்தினைசேர்ந்த ஒரு அரபு முஸ்லிம். மிகப்பெரும் வியாபாரியாக உலக வரலாற்றிலும் இறைவனின் ஏட்டிலும் தன் பெயரை பதிந்து கொண்டவர். 

2016 ம் ஆண்டு அவர் மரணித்தபோது அவருக்கு வயது 70.அவரின் மரண ஊர்வலத்தில் அண்ணளவாக ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டதாக ஊடகங்கள் பதிவு செய்தன. இன்றைய யுகத்தில் மக்கள் நிறைந்த இறுதிச் சடங்குகளை அரிதாகவே காண்கின்றோம். இந்த இறந்த மனிதர் ஒரு நல்ல மனிதர், சுரண்டல்கள் இல்லாத நற்பண்புகள் கொண்டவர், அவருடைய வேலையினாலும் அறிவாலும் பயனடைந்த இதயங்கள் அவர்பால் அன்பால் நிரம்பி வழிந்தன என்பதை இந்த ஜனாசா ஊர்வலம் புடம்போட்டுக்காடியது. 21 ம் நூற்றாண்டில் ஓர் இறைவிசுவாசி எவ்வளவு தூரம் மக்களின் உள்ளத்தை வென்றிருந்தார் என்பதற்கு  இதுவும் ஒரு சாட்சிதான். அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக.


பொறியியலாளர் சலா அதிய்யா அவர்கள் புதிய ஆடைகளை அரிதாகவே அணிந்தார். அவரின் பாதணியின் அளவு 42 ஆனாலும் எப்போதும் 44 ஐயே அணிந்தார். காரணம் அவரின் அப்பா சலாஹ் அதிய்யா சிறுவனாக இருக்கும்போது மகனின் பாதம் வளரும் அளவிற்கு புதுப்பாதணி வாங்க முடியாமல் தவித்ததினால் இப்படி ஒரு யுக்தியை கையாண்டிருந்தார்.சலாஹ் அதிய்யா எகிப்தில் Dakahlia வில் மிகச்சிறிய நகரமான தப்னா அல் அக்ஷ்ரப் இல் வசித்தார். அவர் இளைஞனாக இருக்கும்போது அவர் உட்பட ஊரில் படித்த இளைஞர்கள் அடங்களாக மக்கள் வறுமையில் உழன்றனர்.


சலாஹ் அதிய்யா விடிவை விரும்பினார். அவர் தனது ஊரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த ஒன்பது விவசாயப்பட்டதாரிகளை அழைத்து அவர்களுக்கும் கை கொடுக்கும் வகையில் ஒரு கோழி வளர்ப்புத்திட்டத்தை ஆரம்பித்தார்.  வெறும் 2000 எகிப்திய பவுண்களை ஆளுக்கு 200 என முதலிட்டு ஆரப்பிக்க திட்டமிட்டாலும் பத்தாவது பங்குதாரராக ஒருவரும் சலாவிற்கு கிடைக்கவில்லை. சலாஹ் அதிய்யா பத்தாவது பங்குதாரராக அல்லாஹ்வை சேர்த்துக்கொள்வதாக அறிவித்தார். 


தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும், வியாபாரத்தை பராமரிப்பதற்கும் அல்லாவை சேர்த்துக்கொண்டாதாக அறிவித்தது மெய்சிலிர்க்கவைத்தது. எல்லோரும் சலாஹ்வின் அறிவிப்பை அங்கிகரித்தார்கள். இலாபத்தில் 10% ஐ அல்லாஹ்விற்கு, பத்தாவது பங்காளருக்கு ஒதுக்க எல்லோரும்  இணங்கி பயணம் தொடங்கியது.


முதலாவது அறுவடை அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக இலாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இரண்டாவது அறுவடை இன்னும் அதிகமாகவே, பத்தாவது பங்குதாரருக்கு இலாபத்தில் 20% அளித்தனர். வருடமுடிவில் அது 50% வரை அதிகரித்தது.


பத்தாவது பங்காளரின் இலாபத்தை எவ்வாறு செலவு செய்தார்கள் என்பதுதான் இக்கதையில் முக்கியமானது.


அவர்கள் அப்பணத்தை சமூக அபிவிருத்திக்காக செலவு செய்ய முடிவெடுத்தார்கள். அக்கிறாமத்தின் தலைவரை சந்தித்து அவரின் அங்கீகாரத்துடன் சிறுவர்களுக்கான ஆரம்ப மத்ரஸா ஒன்றை அமைத்தார்கள். 


முதலில் சிறுவர்களுக்கான இலவச அல்குரான் வகுப்புக்கள் ,அல்குரான் மனனவகுப்புக்களை ஆரம்பித்தனர். அதன்பின்னர் ஆண் பிள்ளைகளுக்கு வேறாகவும் பெண்பிள்ளைகளுக்கு வேறாகவும் கனிக்ஷ்ட கல்வி நிருவனங்களை ஆரம்பித்தார்கள். நாளடைவில் சிரேக்ஷ்ட ஆண் மாணாக்கருக்கும் பின்னர் சிரேக்ஷ்ட மாணவிகளுக்கும் கல்வி நிருவனங்களை ஆரம்பித்தார்கள். 


இது அல்லாமல் வேறு பல பண்ணைகளையும் இக்காலப்பிரிவில் ஆரம்பித்தனர். இதனால் பத்தாவது பங்குதாரருக்கான வருமானம் தொடர்ந்து  அதிகரித்தவண்ணமிருந்தது.


அடுத்து இவ்வூரில் பல்கலைக்கழகக்கல்லூரி ஒன்றை அமைத்துத்தருமாறு அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்கள். ஆனால் கிறாமத்தை தொடர்பு படுத்த சரியான போக்குவரத்து புகையிரத வசதி இல்லாமையினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் சுயமாக ஒரு கல்லூரியையும் புகையிரதச்சேவையயும் தொடங்க அனுமதி கோரியதும் மேலிடம் அனுமதித்தது. எகிப்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிறிய கிறாமத்தில் ஒரு கல்லூரி நாங்கு பீடங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதே வேகத்தில் இவை அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் கிளைகளாக அங்கிகாரம்பெற்றது. நாளடைவில் சலாஹ் அதிய்யா எகிப்தில் பல பகுதிகளிலும் இவ்வாறு அல் அஸ்கரின் கல்லூரிகளை ஆரம்பித்தார்.


முதன்முதலில் தப்னா அல் அக்ஷ்ரப் இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் 1000 ஆண் மாணவர்களுக்கான விடுதிவசதி, 600 மாணவிகளுக்காக விடுதிவசதி என்பன உண்டு,கல்லூரி மாணவர்களுக்கு நாட்டின் எந்தப்பாகத்திற்கும் இலவசமாக பயணம் செய்யக்கூடிய இலவச புகையிரத பயணச்சீட்டு என்பன வழங்கப்படுகின்றன. மக்கள் வீடுகளில் மாணவர்களுக்கு விடுதிவசதியை வழங்க பிரத்தியேக அறைகளை நிர்மாணித்தனர்.


காலப்போக்கில், பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்தது, மேலும் ஒரு தீவனத் தொழிற்சாலை, காலநடைவளர்ப்புப்பண்ணைகள், செறிவூட்டல் மற்றும் கால்நடை தீவனத் தொழிற்சாலை என்பனவும் நிறுவப்பட்டன. விவசாயப் பயிர்களுக்கான வர்த்தக மையம் நிருவப்பட்டு தோடை, உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பன பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஒன்பது இளைஞர்களுடன் அல்லாஹ்வை பங்குதாரனாக்கி ஆரம்பிக்கப்பட்ட வியாபாரம் இன்று மில்லியன்கணக்கான முதலீட்டாளர்களை உள்வாங்குமளவிற்கு வளர்ந்தது.


 இக்கிறாமத்தில் ஏழை மக்களுக்கான நிதியம் ஒன்றையும் இவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள். ஏழைகள் விதவைகள் தொழில் அற்றோருக்காக இந்நிதியம் செயற்படுகின்றது. மரக்கறி வகைகளை உற்பத்தி செய்து வெளியூர்களுக்கு அனுப்புகிறார்கள். 


ஊர் மக்களுக்கு மரக்கறிகளை நன்கொடையாக வழங்குகிறார்கள். ரமழானில் இப்தார் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அனாதைகளுக்கு திருமணச்சடங்குகளை செய்துவைக்கிறார்கள். இப்படி எவ்வளவோ....... ஒரு கோழிப்பண்ணைத்திட்டம் பல நாட்டு மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அல்லாஹ்வின் அருளோடு வீறு நடை போடுகின்றது. 


இதன் அடிப்படை சிந்தனையில் பல நூற்றுக்கணக்கான சமூக மேன்பாட்டுக்கான திட்டங்களை ஏற்படுத்தலாம். தேவைப்படுவது  இறைவிசுவாசமும் பொய் புரட்டல்கள் ஊழல்கள் இல்லாமல் ஒரு ஒழுக்கக்கோவைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒரு நட்பு வட்டம்தான். 


வட்டி கலக்காத தொழிலில் அல்லாஹ் அவனின் அருளைச்சேர்க்கின்றான். ஹறாம் கலந்த செல்வத்தில் அல்லாஹ்வின் சாபமேயன்றி அருளில்லை என்பதை முஸ்லிம் வியாபாரிகள் உணரவேண்டும்.


AKBAR RAFEEK

2 comments:

  1. சகோதரர் அக்பர் ரபீக் அவர்களின் ஆக்கம் அருமையானது. மிகச் சிறந்த ஒரு மனிதரின் முயற்சியை விளக்கி அதன் மூலமந்திரமான அல்லாஹ்வையும் கடைசிப் பங்காளராக சேர்த்துக் கொண்டதன் இரகசியம் தான் மிக முக்கியமானது. இந்த பண்ணை, வியாபாரங்கள் தொடர்ந்தும் வளர்ந்து செல்ல மிக முக்கியமான இரகசியம் அதுதான் அந்த உண்மையை விளக்கும் சகோதரர் அக்பர் இறுதியில் வியாபரத்தின் அடிப்படையான வட்டியற்ற கொடுக்கல் வாங்கலுடன் உண்மையும் நேர்மையும் ஊழலற்ற வியாபாரம் நிச்சியம் பரக்கத்தையும் இறையருளையும் கொண்டுவரும் என்ற ஆழமான இரகசியத்தை வாசகர்களுக்கு முன்வைக்கின்றார். இதுபோன்ற ஆக்கங்களை நாம் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம். மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. Dear Akbar, thank you very much for writing this article., Why dont you try to start like this in your area.

    ReplyDelete

Powered by Blogger.