Header Ads



சவூதியில் அசத்தும் ரொனால்டோ, தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிப்பு


ரொனால்டோ, கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்திருந்தார், அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது.


இப்போது அல் நாசர் அணிக்காக கடந்த 6 ஆட்டங்களில் 8 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது மட்டுமின்றி 2 கோல்கள் அடிக்க உதவி செய்தும்(அசிஸ்ட்-Assit) அசத்தி இருக்கிறார் இந்த நட்சத்திர வீரர்.


சௌதி அரேபியாவில் நடக்கும் கால்பந்து போட்டியான, 'சௌதி புரோ லீக்' தொடரில் நேற்று (பிப். 25) நடந்த போட்டியில் நட்சத்திர வீரரான ரொனால்டோ விளையாடும் அல் நாசர் அணி, டமக் அணியை எதிர்கொண்டது.


இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சௌதி லீக் போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்ற நம்பிக்கையுடன் அல் நாசர் அணி களம் கண்டது.


அந்த அணியின் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நல்ல ஃபார்மில் இருந்தது அல் நாசர் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியிருந்தது.


டமக் அணியுடனான முதல் பாதியிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி முன்னிலை பெற்று இருந்தது.


அந்த முன்னிலையுடன் இரண்டாவது பாதியில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை தக்க வைத்தது.


இதன் காரணமாக டமக் அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட போட முடியவில்லை.


இரண்டாவது பாதியிலும் ரொனால்டோ தனது ஆதிக்கத்தை செலுத்தி வலைக்குள் மீண்டும் பந்தை அனுப்பினார். ஆனால் நடுவர் அதை ஆஃப் சைடு என அறிவித்ததால் அது கோலாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.


இறுதியில் அல் நாசர் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் டமக் அணியை வீழ்த்தியது.


அல் நாசர் அணி 13 வெற்றிகளுடன் 43 புள்ளிகள் பெற்று, அல் இட்டிஹாத் அணியை விட 2 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் இருக்கிறது


இந்த வெற்றியின் மூலம் சௌதி புரோ லீக்கில் அல் நாசர் அணி முதலிடம் பெற்றது.


போட்டிக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது அணியுடன் நான் மிகவும் இணக்கமாக இருக்கிறேன். எனது சக வீரர்களின் நகர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஏற்ப நானும் களத்தில் நகர்கிறேன். இது அணிக்கு மிக முக்கியமானது."


சௌதி புரோ லீக்கில் தற்போது அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 கோல்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் அல் நாசர் அணிக்காக ஜனவரி மாதம் களமிறங்கிய அவர், 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார்.


இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இன்னும் 5 கோல்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.


தற்போது இந்த பட்டியலில் ரொனால்டோவின் சக அணி வீரரான ஆண்டர்சன் டலிஸ்கா 14 போட்டிகளில் விளையாடி 13 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

No comments

Powered by Blogger.