Header Ads



கோட்டா, மைத்திரிக்கு என்ன நிகழ்ந்தது என ரணில் நினைவில்கொள்ள வேண்டும்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறை இல்லை, தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


ஜனநாயகத்திற்கும்,அரசியலமைப்பிற்கும் எதிராக செயற்படும் போது ஏற்படும் விளைவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்.


அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டிப்பார்க்க வேண்டும்.


உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கத்திற்கு சார்பான நபர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை உயர்நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.


தனது அரசியல் தேவைகளுக்காக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம். அத்துடன் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்படுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்திற்கு செல்வோம்.


உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் பொய்யானது.


தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது ஏனெனில் நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்று குறிப்பிட்டு  நாட்டு மக்களின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளார்.


உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.


அவ்வாறாயின் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தி,வேட்பு மனுத்தாக்கல் செய்தது,இல்லாத தேர்தலுக்கு ஏன் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக வேண்டும்.


இல்லாத தேர்தலுக்கு தயாராகியுள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.


உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி இல்லை என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,ஏனெனில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தேர்தலை தான் பிற்போட முடியும்,ஆனால் மக்களாணையை அவரால் ஒருபோதும் வெற்றிக் கொள்ள முடியாது. அடுத்த முறை தேசிய பட்டியல் ஊடாக கூட பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலையே அவருக்கு ஏற்படும் என்றார். (வீரகேசரி)

No comments

Powered by Blogger.