Header Ads



கற்பிட்டியில் கரையொதுங்கும் டொல்பின்கள் (படங்கள்)


- ரஸீன் ரஸ்மின் -


கற்பிட்டி - கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


வழமைக்கு மாறாக நேற்றிரவு டொல்பின் ஒன்று கரையொதுங்கியதை அவதானித்த மீனவர் ஒருவர் இதுபற்றி ஏனைய மீனவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், கடற்படையினருக்கும் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் இன்று காலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் , கடற்படையினரும், பொலிஸாரும் அந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு 15 இற்கும் மேற்பட்ட டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.


இதனையடுத்து, கரையொதுங்கிய டொல்பின் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியுடன் கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


இவ்வாறு கரையொதுங்கிய டொல்பின்களில் மூன்று டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.


மேலும், கரையொதுங்கிய டொல்பின்களை தொடர்ந்தும் கடலுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கூறினர்.


இவ்வாறு கரையொதுங்கும் டொல்பின்களை பார்வையிடுவதற்காக கற்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், சுற்றுலா வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இன்று காலை முதல் கண்டல்குழி - குடாவ பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.


காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இவ்வாறு கடலுக்குள் இருக்கும் டொல்பின்கள் கரையை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.


இதேவேளை, உயிரிழந்த டால்பின்களை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.