Header Ads



தேர்தலுக்கு நிதி வழங்காமை பற்றி 3 ஆம் திகதி பரிசீலிப்பு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்காமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனுவை மார்ச் 3ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம், திங்கட்கிழமை (27) தீர்மானித்தது.


எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதன்போது, குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளான பெயரிடப்பட்டுள்ளனர்.


2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க பிரதிவாதிகள் தவறிவிட்டனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(அ) பிரிவுகளின் மூலம் மனுதாரருக்கும் இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் மீறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று  மனுதாரர் கோரியுள்ளார்.


இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்துக்கு நகர்தல் பத்திரம் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.