Header Ads



திரும்பும் இடமெல்லாம் பேரழிவின் கோலம் - உயிரிழப்பு 17,000 ஆயிரமாகியது, விமர்சனங்களுக்கு எர்துவான் பதிலடி


துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதால், காணாமல் போன மேலும் பலர் உயிருடன் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.


துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்கேண்டிருன் நகரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், அங்கே நிலநடுக்கத்தால் சரிந்து கிடந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்தனர். இதையடுத்து, அங்கு சுற்றிலும் குழுமியிருந்த மக்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய அவர்கள், கிரேன் போன்ற தங்களது இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்தினர்.


சில நிமிட அமைதிக்குப் பின்னர், அங்கு பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக் குழுவினர், ஆம்புலன்சை வரவழைத்தனர்.


நிலநடுக்கம் தாக்கிய 3 நாட்களுக்குப் பிறகு பெண் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்டதும் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


பிபிசியிடம் பேசிய உள்ளூர் மருத்துவர் மெஹ்மத் ரியாத், திங்கட்கிழமை முதல் மருத்துவ ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என்று கூறினார்.


"இடிபாடுகளில் சிக்கி நசுங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். எலும்பு முறிவு, உடைந்த கழுத்துகள், தலையில் காயங்களுடன் ஏராளமானோரை கண்டிருக்கிறோம். அதிக உயிரிழப்புகளையும் கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.


"மருத்துவர்களாக நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய வேண்டும். ஆனால் உதவிக் குழுக்கள் பொறுப்பேற்கும் போது, நாங்கள் சொந்த குடும்பங்களைப் பற்றி சிந்திக்கிறோம்." என்றார் அவர்.


இஸ்கேண்டிருன் நகரில் திரும்பும் இடமெல்லாம் பேரழிவின் கோரத்தை பார்க்க முடிகிறது. பரபரப்பான மருத்துவமனைகள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து கிடக்கின்றன.


நிலநடுக்க பாதிப்புகளை அரசு எதிர்கொண்ட விதம் குறித்து அதிருப்தி அதிகரித்துள்ள சூழலில், விமர்சனங்களுக்கு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் பதிலடி கொடுத்துள்ளார்.


"இவ்வளவு பெரிய பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது இயலாத காரியம்," என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.