இஸ்ரேலியர் ஆயுதம் வைத்திருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்த அரசு திட்டம்
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் புதிய நடவடிக்கையில் தாக்குதல்தாரிகளின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமை மற்றும் சமூக பாதுகாப்பு உரிமையை பறிக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை ஆலோசிக்கவுள்ளது.
வலுவான மற்றும் விரைவான பதில் நடவடிக்கைக்கு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவையில் உறுதி அளித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் படைகளை அதிகரிப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ‘பொதுமக்களிடம் துப்பாக்கி இருக்கும்போது அவர்களால் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்’ என்று சர்ச்சைக்குரிய தீவிர வலதுசாரியான தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பயங்ரவாதிகளின் குடும்பங்களது சமூகப் பாதுகாப்பு உரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது. நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் முன்மொழிவுக்கு அமையவே இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கூட்டணி கடந்த மாதமே இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஜெரூசலத்தின் சில்வான் பகுதியில் 13 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (28) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேலிய தந்தை மற்றும் மகன் இருவரும் படுகாயத்திற்கு உள்ளானதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எழுவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிதாரி கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த பலஸ்தீனர் ஒருவர் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டது. எனினும் பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்புகளில் இந்த மாதத்தில் மாத்திரம் 32 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் 200க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் மற்றொரு மோதல் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
ஜெனின் சுற்றிவளைப்பை அடுத்து காசாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் இஸ்ரேல் பதிலுக்கு காசா மீது வான் தாக்குதல்கள் நடத்தியது.
Post a Comment