Header Ads



முஸ்லிம் தரப்பையும் ஜனாதிபதி இணைத்துக்கொள்ள வேண்டும் - ஹக்கீம்


இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில்  முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.


அத்துடன் இந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாகவும் ஜனாதிபதி  தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.


இது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயம்.  இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்ட விடயங்களாக இருக்கின்றபோது, தேவையற்ற சந்தேகங்களை குழப்பி ஒட்டுமொத்த  இனப்பிச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைக்க முயற்சிக்கப்படுகின்ற விடயமாக உணர்கிறேன்.


அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக ஆக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பிலே நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்ட விடயமாக இருந்தபோதிலும் அதிலே முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை தமிழ் தரப்பு புரிந்துகொண்டிருக்கும் என நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கின்றோம்


அந்த அடிப்படையிலே இந்த விவகாரத்திலே தேவையற்ற விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்ளாமல், அரசாங்கமோ தமிழ் தரப்போ இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றபோது இந்த விவகாரத்தில் கரிசனை உடைய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வுகளை காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.


அதனால் பிரச்சினைக்கான தீர்வு வருகின்றபோது அதனை இவ்வாறான விஷமத்தனமான பிரசாரங்கள் மூலம் குழப்பியடிக்க முனையாமல் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நம்பிக்கையுன் இருக்கின்றன.


எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக எடுப்பாரானால்  முஸ்லிம் தரப்பையும் இதில் இணைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வை காண்பார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்றார்.


வீரகேசரி 


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


No comments

Powered by Blogger.