ஐஸ் விற்பனையிலும், விநியோகத்திலும் முஸ்லிம் கிராமங்கள், பல திடுக்கிடும் தகவல்கள் - அடிமையான இளைஞனின் சோகக் கதை
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
நாட்டில் பரவலாக பயன்பாட்டிலுள்ள போதைப்பொருட்களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்கொண்டு முன்னணியில் பயணிக்கிறது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்மைக்காலமாக வலுவடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. போதைப்பொருட்கள் தொடர்பில் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எமது நாட்டில் ஒரு வருட கால எல்லைக்குள் ‘ஐஸ்’ எனும் போதைப்பொருள் 10 ஆயிரம் கிலோ அளவில் நுகரப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹெரோய்ன் மற்றும் கொகேன் என்றழைக்கப்படும் போதைப்பொருள்களின் பாவனையே எமது நாட்டில் அதிகரித்துக்காணப்பட்டது. இந்நிலையில் ‘ஐஸ்’ எனும் போதைப்பொருளின் பாவனை சிறியளவிலே இருந்தது. என்றாலும் கடந்த ஓரிரு வருடங்களாக இதன் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது.
எமது நாட்டின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த சிலரின் புதிய வர்த்தகப் பொருளாக ‘ஐஸ்’ (கிறிஸ்டல் மெதன்பெடமய்ன்) மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூட்சுமமாக ‘ஐஸ்’ போதைப்பொருள் விநியோகம் உட்புகுந்துள்ளது. நாடெங்குமுள்ள பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
‘ஐஸ்’க்கு அடிமையான
ஓர் இளைஞனின் கதை
“தம்பி நீ எங்கே போகிறாய்? சொட் ஒன்று அடிப்போமா? இதை ஒரு முறை அடித்துப்பாரும். உனக்கு நல்லவோர் ஆத்தல் (சுகம்) கிட்டும். வேறு எந்தப்பொருளிலிருந்தும் கிடைக்காத சுகம் ஒன்று இதிலிருந்து கிடைக்கும். இதை அடித்துப்பார். காசு வேண்டாம் என்று கூறி எனக்கு ‘ஐஸ்’ போதைப்பொருளை தந்தவர்கள் எனது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள அண்ணன்மார் குழுவொன்றாகும். இவர்களே முதன்முதல் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தந்தார்கள்.
‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையாகி பாதிக்கப்பட்ட ஓர் இளைஞரின் வேதனை மிகுந்த வார்த்தைகளே இவை.
இந்த இளைஞர் கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிப்பவர். அவர் தனது கதையைத் தொடர்ந்தார். ‘நான் மாநகர சபை எல்லைக்குள் பெற்றோருடன் வசிக்கிறேன். நான் பாடசாலைக்குச் செல்லும்போதும் டியுசன் வகுப்புகளுக்குச் செல்லும்போதும் வீட்டார் என்னை சாமான்கள் வாங்குவதற்கு கடைக்கு அனுப்பும்போதும் நான் வசிக்கும் பகுதியிலுள்ள சிறிய சந்தியைக் கடந்துதான் செல்ல வேண்டும். இந்தச் சந்தியில், போதைப்பொருளுக்கு அடிமையான அண்ணன்மார் குழுவொன்று இருக்கும். நான் மிகவும் அறிமுகமான, அறிந்தவர்கள் தான் அவ்விடத்தில் இருப்பார்கள். பிரபல்யமான பாடசாலைக்குச் செல்பவர்களும் இருப்பார்கள்.
அநேகமான சந்தர்ப்பங்களில் இவர்கள் அந்தச் சந்தியில்தான் ஒன்று கூடியிருப்பார்கள். இவ்வாறு இவர்கள் ஒன்று கூடி இருந்த சந்தர்ப்பத்தில்தான் ‘ஐஸ்’ இழுத்துப்பார்… சுவர்க்கத்துக்குப் போகலாம் என்றார்கள். அவர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளை மூக்கினால் இழுத்து உள்வாங்கிக் கொள்வதைப் பார்த்தபோது எனக்கும் ஆசையேற்பட்டது. நானும் அவர்கள்போல் ‘ஐஸ்’ஐ நுகர வேண்டும் என்று உந்தப்பட்டேன். அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஐஸை மூக்கினால் நுகர்ந்தேன்.
நான் முதன்முதல் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியபோது எனக்கு வயது 16. இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்பு ஐஸை நான் முதன்முதல் பயன்படுத்தியதிலிருந்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது.
முதன்முதல் இதனைப் பயன்படுத்தினால் நித்திரை குறையும். 4 அல்லது 5 நாட்கள் என்றாலும் தொடர்ந்து தூங்காது விழித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு எனக்குள் பெரும் பலம் ஏற்பட்டது.இவ்வாறு தூக்கம் வராமலிருந்ததால் படிப்பதற்கு இந்த ஐஸ் போதைப்பொருள் நல்லது என்று நினைத்தேன். நான்றாக வேலை செய்ய முடியுமாக இருந்தது. எவ்வித களைப்பும் ஏற்படவில்லை.
அதனால் தொடர்ந்தும் இதனை நான் உபயோகித்தேன். ஆரம்ப காலத்தில் நான் ஒரு பேயைப்போல் இருந்தேன். பின்பு எனது உடம்புக்குள் ஏதோ நடப்பதுபோல் உணர்ந்தேன். ஐஸ் பாவித்த ஆரம்ப காலத்தில் வீட்டார் அதுபற்றி அறிந்து கொள்ளவில்லை. எனக்கு போதை அதிகரிக்காததன் காரணமாக வீட்டார் இது பற்றி அறிந்து கொள்ளவில்லை.
பாவிக்க பாவிக்க எனது உடம்புக்குள்ளேயே ‘கிக்’ ஏற்படுவதை உணர்ந்தேன். தினம் இரவு நேரத்தில் கட்டாயமாக இதனை நான் உபயோகிப்பேன். ஒரு தடவை பாவித்தால் இரண்டு நாட்கள் தூங்காமல் இருக்கலாம். நான் தொடர்ந்து இந்த போதைப் பொருளை பயன்படுத்தியதால் எனது உடலின் நிறை படிப்படியாக குறைந்தது. சுமார் 15 கிலோ இழப்பு ஏற்பட்டது. எனது எலும்புகள் உக்கிப்போகும் நிலை ஏற்பட்டது. உடம்பிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டன. வாய் காய்ந்து போனது. அதிகமாக வியர்த்தது. சாப்பிடுவதற்கும் முடியாமற்போனது.
‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்வு காரணமாகவே எனக்குள் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நான் உணர்ந்து கொண்டதால் இந்த ஆபத்திலிருந்தும் நான் மீள வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஓரிரு வாரங்கள் மனதில் தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு ஐஸ் பாவிப்பதிலிருந்தும் தவிர்ந்திருந்தேன். என்றாலும் ஐஸ் மீதே எனது நாட்டம் சென்றது.
எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் நான் ‘ஐஸ்’ பாவனைக்கு அடிமையானேன். எனது முகம் எதிர்பாராத அளவுக்கு மெலிவுக்குட்பட்டது. கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்த போது நான் வெறுப்புக்குள்ளானேன். கண்களின் கீழே கருமை படர்ந்தது. எனது உடலின் நிறை வெகுவாகக் குறைந்தது. உடம்பில் விரைவாக படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டபோது எனக்கு என்னைப் பற்றியே கவலை ஏற்பட்டது.
வீட்டாரை நினைக்கும்போது எனக்குக் கவலையேற்பட்டது. எனது தாயும், தந்தையும் அரச ஊழியர்கள். அவர்கள் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுபவர்கள். பெற்றோர் அதிகமாக வீட்டில் இருப்பதில்லை. இதனாலே எனக்கு கூடுதல் சுதந்திரம் கிடைத்தது. இந்தச் சுதந்திரத்தை நான் இவ்வாறான தவறான செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்வேன் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.
நான் தவறான நண்பர்களுடன் பழகியதனாலே எனக்கு இந்நிலைமை ஏற்பட்டது. இவ்வாறான போதைப்பொருளை முன்பு நான் பார்த்திருக்கவேயில்லை. படிப்பிலும் விளையாட்டிலும் நான் முன்னிலையில் இருந்தவன். இன்று என்னால் 100 மீற்றர் தூரத்தைக்கூட நடந்து செல்ல முடியாத நிலைமையில் உள்ளேன். இந்தப் பழக்கத்துக்கு அடிமையானதாலே இன்று எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று கவலைப்படுகிறேன். எனக்கு நானே வெட்டிக்கொண்ட குழி இது. போதைப்பொருளை எவரும் நினைத்துக்கூட பார்க்கவேண்டாம் என்று ஒவ்வொருவரையும் வேண்டிக்கொள்கிறேன். போதைப்பொருள் பாவித்தால் நாம் சமூகத்தில் ஏளனமாக்கப்படுவோம். சமூகம், எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையே குற்றம் சுமத்தும், தூற்றும். என்மீது சமூகம் பலவாறு குற்றம் சுமத்துகிறது. ஏளனம் செய்கிறது. ஐஸா, குட்டா எனும் வார்த்தைகளால் என்னை அழைக்கிறார்கள்.
போதைப்பொருள் பாவனை எனும் ஆபத்திலிருந்து விடுபடவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டால் இதிலிருந்தும் நிச்சயமாக மீளமுடியும். எனது தாயார் சிந்தும் கண்ணீரை நான் தினமும் கண்டதிலிருந்து இதிலிருந்து மீளவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தேன். நான் எனது பெற்றோரை பல வகையில் நிந்தனை செய்திருக்கிறேன். பணம் கேட்டு சண்டை பிடித்திருக்கிறேன். போராட்டம் நடத்தியிருக்கிறேன்.இன்று அனைத்தையும் நினைத்து நான் கவலைப்படுகிறேன். என்னைப்போல் எவரும் இவ்வாறான நிலைமைக்குள்ளாக வேண்டாம்.
நான் தற்போது மனநிலை வைத்தியருடன் எனது நிலைமை தொடர்பில் கலந்துரையாடி தேவையான சிகிச்சைகளைப் பெற்று வருகிறேன். இரண்டு மாத காலமாக புனருத்தாபன ஆலோசனைகளையும், செயற்பாடுகளையும் பெற்று வருகிறேன். ஐஸ் போதைப் பொருள் பாவனை காரணமாக நான் பலவற்றை இழந்து விட்டேன். குறிப்பாக எனது க.பொ.த உயர்தர பரீட்சைக்கு கூட என்னால் உரிய காலத்தில் தோற்ற முடியாது போய்விட்டது. இப்போதுதான் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன்’’ என்றார்.
‘ஐஸ்’ போதைப்பொருள்
‘ஐஸ்’ போதைப்பொருள் நாடெங்கும் வியாபித்து விட்டது. கிராமங்கள், நகரங்கள் என்ற வேறுபாடின்றி சந்து பொந்துகளுக்குள்ளும் நுழைந்து விட்டது.
போதைப்பொருள் குறிப்பாக ‘ஐஸ்’ விற்பனையிலும், விநியோகத்திலும் முஸ்லிம் கிராமங்கள் முன்னணியில் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளன. முஸ்லிம்களின் முன்னணி வர்த்தகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகக் கூட இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிவாசல்கள் தோறும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடாத்தப்படவேண்டும். பெற்றோர்களும் தெளிவுபடுத்தப்படவேண்டும்.பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
மாணவர் மற்றும் இளைஞர் பரம்பரையினை போதைப்பொருள் பெருமளவு ஆட்கொண்டு விட்டது.
18க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் 75 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை காரணமாக மனநோய் வைத்தியசாலைக்கு வருகை தரும் இவ்வாறான நோயாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் மாதம் சுமார் 10 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அங்கொடை தேசிய மனநோய் சுகாதார நிலையம் தெரிவிக்கிறது. கடந்த இரு மாதங்களாக இவ்வாறான நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலம் எமது நாட்டில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் இருக்கவில்லையாயினும் கடந்த நவம்பர் 24 ஆம் திகதியிலிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘ஐஸ்’ போதைப் பொருளை தம்வசம் வைத்திருத்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
‘ஐஸ்’ போதைப்பொருள் 5 கிராம் அல்லது அதற்கு மேல் தம்வசம் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டாது. அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டணை வழங்கப்படும்.
போதைப்பொருளை ஒழிப்பதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும். இதனுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.- Vidivelli
Post a Comment