Header Ads



அமைச்சரவையின் அடாவடியால், ஆணைக்குழுவில் மன்னிப்பு கோரிய பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மன்னிப்பு கோரியதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் ஏற்பதை தவிர்க்குமாறு அமைச்சரவை தீர்மானித்ததாகக் கூறி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் வினவுவதற்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று -13- அழைக்கப்பட்டிருந்தார்.


அமைச்சரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அந்த கடிதத்தை அனுப்பியதாகவும் அது ஏற்புடையது அல்லவென்பதால், சுமார் ஒரு மணித்தியாலத்தில் கடிதத்தை மீளப் பெற நடவடிக்கை எடுத்ததாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.


குறுகிய காலத்தில் கடிதம் மீள பெறப்பட்டதால்,  கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மறுநாள் அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் 131 இடங்களில் கட்டுப்பணம் செலுத்தியமை ஊடாக அந்த விடயம் உறுதியாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், அரசியலமைப்பின் பிரகாரம் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு  இதன்போது அறிவுறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த கடிதத்தை அனுப்பியதன் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமாயின், அதற்காக மன்னிப்பு கோரிய பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அத்தகைய நிலைமை இனிவரும் காலங்களில் ஏற்படுவதை தவிர்ப்பதாக உறுதியளித்ததாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.