Header Ads



இஸ்லாத்தின் செல்வாக்கைப் பாருங்கள், முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி நிகழ்த்திய அதிரடி உரை (வீடியோ)

75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.


எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எந்த சமயமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சமயம் அல்ல எனவும் தெரிவித்தார்.



கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில்   இன்று (19) நடைபெற்ற  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்  100வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைத்  தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் றிஸ்வியினால்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு  நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரையொன்று வெளியிடப்பட்டதுடன் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அதனை  ஜனாதிபதியிடம் கையளித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,


நிகழ்ச்சி நிரலில் முந்திக் கொண்டமைக்காக முதலில் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.நான் இறுதியாக பேசுவதாகவே இருந்தது. எனினும் இன்று புதிதாக இரண்டு அமைச்சர்கள் பதவியேற்க இருப்பதனால் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாக நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன்.  முழுக்கூட்டமும் முடிவடைந்து  நான் செல்லும் வரை அவர்கள் காத்திருக்க மாட்டார்கள்.


இந்த அமைப்பினுடைய தலைவரது முழுமையான பேச்சை நான் செவிமடுத்ததுடன் அதில் அவர் முன்வைத்த யோசனைகள் தொடர்பில்   விசேடமாக கருத்துக்கூற விரும்புகின்றேன்.


உலமா சபை இன்று தனது 100வது ஆண்டு நிறைவைக்  கொண்டாடுகின்றது. இது அவர்களது நூற்றாண்டு விழாவாகும். இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தை நினைவுக்கூற வேண்டும். முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் உலகம் மிகப் பெரிய மாற்றத்துக்கு முகம்கொடுத்து வந்த காலகட்டமே1922 ஆம் ஆண்டாகும். இக்காலப்பகுதியில்  கலீபா ஆட்சி முறையை ஒழிக்கும் நடைமுறையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கலீபா ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்கு இந்தியா மிகப் பெரிய இயக்கமொன்றைக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் அதே காலப்பகுதியில் தான்  முஸ்லிம்களின் எண்ணங்களதும் சிந்தாந்தத்தினதும்  மையமாகச் செயற்படும் உலமா சபை எனும்  அமைப்பை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் அப்போதிருந்த சில பிரச்சினைகளுக்கு நாம் இன்றும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.


நாம் இப்போது வித்தியாசமானதொரு உலகத்தில் வசிக்கின்றோம். 1922 ஆம் ஆண்டில் 150  நாடுகளும் அப்போது   இருக்கவில்லை. நாம் புதிய நூற்றாண்டில் வசிக்கின்றோம். விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி, அரசியல் உரிமைகளின் முன்னேற்றம் என்ற இந்தப் பின்னணியில் நாம் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.


இஸ்லாம் மட்டுமன்றி  அனைத்து சமயங்களுமே தமது சமயத்தின்  அடிப்படைகளையே பார்க்கின்றன. சமயம் கூறும் தூய்மையான அர்த்தங்கள் எவை? அவற்றை எவ்வாறு நவீன உலகத்துடன் இணைப்பது? சமயத்தின் அடிப்படையை  நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு  பயன்படுத்த  வேண்டும். இதற்கு  மிகச் சிறந்த உதாரணம் பௌத்தம். புத்த பெருமான் கங்கைக் கரைகளில் இருந்து பௌத்த மதத்தைப் போதிக்கும்போது கரையோர நகரிகமே  இருந்தது. எனினும் அது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது பௌத்த சமயத்தில் ஓரளவு அடிப்படையைக் கொண்டிருந்த கரையோர நாகரீகத்தை கட்டியெழுப்ப எம்மால் முடிந்தது. அது கௌதம புத்தருடைய காலத்தில் இல்லை என்பதற்காக நாம் இந்த நாகரீகத்தை நிராகரிக்கவில்லை. எனினும் எம்மால் அந்த நாகரீகத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது.


அதுபோன்றே, நாம் அனைவரும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். எமது சமயத்தின்  அடிப்படையைப்   பார்ப்பதற்கு கடந்த காலம் எமக்கு உதவியாக அமையும். எந்தவொரு சமயமும் வெறுப்புச் சமயம் அல்ல. அது வெறுப்புச் சமயமாக இருக்கவும் முடியாது. அது நிச்சயமாக இரக்கமானதாகவே இருக்க வேண்டும்.  


மோசஸுக்கு அங்கீகாரம் வழங்கிய, கிறிஸ்துவுக்கு அங்கீகாரம் வழங்கிய, நபிகள் நாயகத்துக்கு அங்கீகாரம் வழங்கிய சமயம் வெறுப்புச் சமயம் என்ற அர்த்தத்தைக் கொள்ளாது. இது அன்பை அடிப்படையாகக் கொண்டதொரு சமயமாகும். இஸ்லாமும் முஹம்மது நபியும் அதனையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றனர்.


எனவே நாம் எந்தவொரு சமயத்தையும் வெறுப்புச் சமயமாக மாற்றக் கூடாது.எனினும் அதன் அடிப்படையைப் பாருங்கள். நாம் எவ்வாறு ஒன்றாக வாழ்வது? நாம் எவ்வாறு பிற சமையத்தையும் பிறரையும் பார்ப்பது?


ஒவ்வொரு சமயமும் தனது சமயத்தைப் பற்றி அனைவருக்கும் போதிக்க வேண்டும். ஆஸ்திகனுக்கும் நாஸ்திகனுக்கும். நாஸ்திகனுக்குப் போதிப்பதால் அவர்கள் எந்தவொரு சமயத்தினதும் எதிரிகள் ஆகிவிட மாட்டார்கள்.


சமயங்களும் பாரிய பிணக்குகளுக்கு முகம் கொடுத்துச் செல்கின்றன. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எதிர்காலம் என்றால் என்ன என்பது தொடர்பில் இஸ்லாத்திலும் பாரிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.


ஏனைய சமயங்களிலும் இந்நிலைமை  காணப்படுகிறது. நீங்கள் கத்தோலிக்க தேவாலயங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே அருட் தந்தையின் போதனைகள் கத்தோலிக்க தேவாலயத்திலுள்ள பழமைவாத உறுப்பினர்களால் பெரிதும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் இங்கிலாந்திலுள்ள தேவாலயங்களில் தற்போது ஆண் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதா அதனை எவ்வாறு நடத்துவது போன்ற விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.


அனைத்து சமயங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. அது இந்து சமயமாக இருந்தாலும் சரி பௌத்த சமயமாக இருந்தாலும் சரி.அவை என்ன என்பது பற்றியே நாம் கலந்துரையாடி வருகின்றோம். எனவே நாம் அனைவரும் அதற்கு முகம் கொடுத்துள்ளோம். எனினும் நாம் எமது அடிப்படை கொள்கையிலிருந்து விலகக்கூடாது. எனவே அது வெறுப்புக்குறிய சமயம் ஆகாது. அது அன்பு செலுத்த வேண்டிய சமயம் ஆகும்.


சமயத்தின் ஆகக்கூடிய நோக்கம் எங்கே முடிவடையும் என்பதை எவ்வாறு கண்டறிவது? எனவே, இஸ்லாம், பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த நம் அனைவரும் எமது சமயத்தின் அடிப்படைகளை  தேடும் கொள்கைகளில் குறியாக இருக்க வேண்டும். சமயம் வர்த்தகமயப்படுத்தப்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம். ஆம்! யுத்தத்தங்கள் உருவாகவும்  சமயம் காரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


இரண்டாவதாக சமயம் தனக்குத்தானே ஏற்றுக் கொள்வதுடன் நவீனத்துக்கு வழிகாட்ட வேண்டும். இஸ்லாமானது நபிகள் பிறந்த அரேபியாவுக்கே மீண்டும் செல்ல வேண்டும் என கூறுபவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலம் பக்தாதை தலைநகரமாகக் கொண்டிருந்தது.  அது வானியல், மருத்துவம்  என எம்மீது ஏற்படுத்தியுள்ள செல்வாக்கைப் பாருங்கள். ஸ்பெயினில் உள்ள ஐபீரியன் குடாநாட்டிலுள்ள முஸ்லிம் இராச்சியங்களைப் பாருங்கள். அவையே இன்று ஐரோப்பாவாக வளர்ச்சியடைந்துள்ளன. நாம் அவற்றைப் பற்றி பேசுகின்றோம். உஸ்மானிய சாம்ராச்சியத்தைச் சேர்ந்த   சுலைமான் நபியைப் பாருங்கள்.


எமது பிராந்தியத்தில் கூட அக்பார் பேரரசர் பிராந்தியங்களை ஒன்றிணைக்க முயற்சி செய்தார். அவர், இரண்டு சமுத்திரங்களின் சங்கமம் பற்றி பேசிய  தனது பேரனின் கருத்தியலைப் பின்தொடர்ந்தார். அதனையே நாம் இப்போது இந்து-பசுபிக் என்றழைக்கின்றோம்.எனினும் அவர் அதைப்பற்றிக் கூறவில்லை. இளவரசர் கூறிய இரண்டு சமுத்திரங்களின் சங்கமம் என்பது அக்காலப்பகுதிக்குரிய இந்து மற்றும் இஸ்லாம் சமயங்களின் சங்கமத்தையே குறிக்கின்றது. எனினும் நாளடைவில் அவர் கூறியது புவிசார் அரசியல் அடிப்படையில் மாற்றப்பட்டதுடன் அதுவே மோதலுக்கும் காரணமாக அமைந்தது. அதுவே சாராம்சம் என்பதாகும். நீங்கள் நவீனத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்லப்போகின்றீர்களா?  சமயங்கள் அதனை செய்ய வேண்டும். அதில் மாற்றம் செய்வதற்கு எதுவும் இல்லை. சமயத்தில் கூறப்பட்டுள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


இஸ்லாம் அரேபியாவில் ஆரம்பமானாலும்  பெரும்  எண்ணிக்கையானவர்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிலேயே உள்ளனர்.இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் மட்டுமன்றி சஹாராவின் தெற்குப் பகுதியிலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் இருக்கின்றனர். அடுத்ததாக கிழக்கே அமெரிக்காவிலும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். எனினும் தற்போது அவர்களிடையே வேறுபாடுகள் மட்டும் மோதல்கள் இடம்பெற்று வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது.


இந்திய உபகண்டத்தில் வாழும் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தற்போது மேலைத்தேய நாகரீகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பிரித்தானிய பிரதமராக இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரும் மேயராக முஸ்லிம் ஒருவருமே உள்ளனர். அவர்கள் மேற்கத்தேய கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றனரே தவிர இந்து மற்றும் இஸ்லாத்தை வளர்த்தெடுத்த கலாசாரத்தை பிரதிபலிக்கவில்லை.அது போன்ற விடயங்களையே நாம் இன்று கையாள்வதுடன் நவீனம் என்றால் என்ன? நவீன நிலை என்பது என்ன? நாம் எங்கே செல்கின்றோம் என்பவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.


எனவே நவீனமயமாதல் என்பது முக்கியம். இலங்கையில் முஸ்லிங்களுக்கிடையே நவீன சிந்தனையை ஏற்படுத்தும் நிலையங்களை உருவாக்க வேண்டுமென்றே நான் கூறுவேன். அதற்கு மிகச் சிறந்த இடம் தென்கிழக்கே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஆகும். இன்று திருமதி அஸ்ரப்ஆவரது சாதனைக்காக கௌரவிக்கப்பட்டார். பெண் என்ற வகையில் அது அவருக்கு உரித்தானதாகும். இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தமைக்காக மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.


இது நவீன சிந்தனைகளைக் கொண்ட நவீன பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். அப்போது அரசாங்கத்தின் ஆதரவும் அதற்கு கிடைக்கும். எனினும் இதனை நீங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த நினைத்தால் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திற்கூடாகவும் நீங்கள் இதே விளைவை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நவீனம் எனும் சாரம்சத்தையே நாம் ஏற்றுக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும். இங்கே கூட முஸ்லிம்கள் மாற்றங்களுக்கு முகம் கொடுத்திருப்பதையும் அது பற்றி கலந்துரையாடுவதையும் என்னால் பார்க்க முடிந்த்து.


அந்த வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பிரதான விடயமாக உள்ளது. அது மிகவும் நாகரீகமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அது முஸ்லிம் சமூகத்தினருடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் நான் அதில் தலையிட விரும்பவில்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்காதீர்கள் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.


அன்றொருநாள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துக்கு எதிராக சிறுவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைக் கண்டேன்.அது முறையானதல்ல. அது சிறுவர் பராமரிப்பை மீறும் வன்முறையாகும். வளர்ந்தவர்கள் அதனைச் செய்வது வேறு விடயம். ஆனால் கண்டிப்பாக சிறுவர்கள் அல்லர். அது முஸ்லிம்கள் பற்றிய மறைமுகமான மதிப்பீட்டைக் கொடுக்கும். எனவே அவர்களை அனுமதிக்காதீர்கள். அது மட்டுமே எனக்கு கூறவேண்டியுள்ளது.


தற்போது நீங்கள் உங்கள் 100வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளீர்கள். நாமும் 75வது ஆண்டை பூர்த்திசெய்யவுள்ளோம். எமது அதிகப்படியான நேரம் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதிலேயே கழிந்துள்ளது. எனினும் தற்போது இது நல்லிணக்கத்துக்கான நேரமாகும்.


எனவே தான் நாம் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்த ஆரம்பித்துள்ளோம். அதாவது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நல்லிணக்கத்துக்குப் பங்களிக்கப் போகின்றார்கள் என்பது பற்றி நாம் ஆராய்ந்தோம். முதற்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். இந்தக் கலந்துரையாடல் மூலமாக நாம் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.


மனோ கணேசன் என்னை ஏன் உற்றுப் பார்க்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. மலையகத் தமிழர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். அவர்கள் தாமதித்து வந்தாலும் அவர்களையும் சமூகத்துடன் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.


எமது சமூகத்தில் காலம் தாமதித்து பல இனங்களும் சமயங்களும் ஒன்றிணைக்கப்பட்டாலும் அவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்கவில்லை. எனவே அவர்களும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட வேண்டும்.


மூன்றாவதாக முஸ்லிம் இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்   குறித்தும் எனக்கு கலந்துரையாட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் திகன கலவரம் , 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படுவதுடன் அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் பேச வேண்டும். கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினையிலும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளையே இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள முஸ்லிம்களும் மன்னார் முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்றனர்.


இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் , சிங்களவர்கள் போன்று இவர்களிடமும் பேச்சுவார்த்தை  நடத்தி அவர்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், சமூக பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர வேண்டும். இது நல்லிணக்கம் தொடர்பான மூன்றாம் கட்ட நடவடிக்கையாக அமையும்.


அதேபோன்று  சிங்களவர்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அதிலும் பல குழுக்கள் உள்ளன. சிலர் சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதுபோன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே எனக்கு சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, ஏனைய முஸ்லிம் குழுக்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள்ள பிரச்சினைகளை எமது மூன்றாம் கட்ட சந்திப்பின்போது எமக்கு அறியத்தருமாறு நான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையைக் கேட்டுக் கொள்கின்றேன்.


ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சினை இருப்பதன் காரணமாகவே அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் நாம் அனைவரையும் ஒன்றாக இணைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்ப்போம். அப்போது 75வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழும் நிலை ஏற்படும்.


அடுத்த 25 வருடங்களில் வரலாற்றுக்கான நிறுவனமொன்றை ஸ்தாபிப்போம். அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிஆராய்வார்கள். எனவே நாம் பொது இடங்களில் இருந்து கொண்டு பழையதைப் பற்றி கூச்சலிடத் தேவையில்லை. மேலும் புதிய பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக அரச மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான ஏனைய நிறுவனங்களும் உருவாக்கப்படும். ஒரு தேசமாக நாம் உறுதியாக இருப்போம்.சமூக நீதி நிலவட்டும் . இனங்களுக்கிடையேயான ஒற்றுமை நிலவட்டும். எமக்குள் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் புதிய பொருளாதாரத்தை நாம் கொண்டிருப்போம். என்னை இந்த நிகழ்விற்கு அழைத்தமைக்கு நன்றி.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

19-01-2023

1 comment:

  1. 1.How Islamic is this Public Celebration by the ACJU of its 100 year existence with so much publicity and fanfare?

    2. Why have a Chief Guest? And the person chosen by the ACJU????

    3. Quite a tidy sum must have been spent on this publicity stunt by the ACJU. Is this the
    best or the most suitable way to spend the money at this very CRITICAL TIME in the
    country when millions of people including children and the elderly in the country are
    Starving without without food and undergoing so much other difficulties and pain?

    Needless to say, the ACJU has a LOT to answer, firstly to the people they are supposed to represent and to Allah (SWT) later. It is simply SHOCKING. I have no words to describe.

    ReplyDelete

Powered by Blogger.