Header Ads



உங்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கின்றேன் - கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ரணில்


இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.


2023 புத்தாண்டில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுடன் இணைந்து இன்று (02) காலை தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்க முன்னர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன்பின்னர் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து, அரச பணிக்கான சத்தியப் பிரமாணத்தை செய்துகொண்டனர்.


பின்னர் அனைத்து ஊழியர்களுடனும் ஜனாதிபதி, தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டார்.


ஜனாதிபதி பணிக்குழாமின் ஊழியர்களுக்கு, ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்க முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி, 


''அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!


ஐந்தரை மாதங்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் ஒரு வரலாற்றுப் பணியை நாங்கள் ஆரம்பித்தோம். அரசாங்கம் வீழ்ச்சியடைந்து, பொருளாதாரம் உடைந்து வீழ்ந்திருந்த சந்தர்ப்பத்தில், நாட்டை வழமைக்குக் கொண்டுவர இந்த ஐந்தரை மாதங்களில் நடவடிக்கை எடுத்தோம். நமது பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. ஆனால் இன்று தேவைக்கேற்ப எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள், உரங்கள் ஆகியவற்றை வழங்கும் திறனைப் பெற்றுள்ளோம்.


இந்த ஐந்தரை மாதங்களில் இதற்காக நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு எனது நன்றிகள். எங்கள் திட்டம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 2023ஆம் ஆண்டு மிக முக்கியமானது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி, நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவித்து நாம் முன்னேற வேண்டும்.


நவீன உலகத்துடன் போட்டியிடக்கூடிய பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் அரசியல் முறைமையில் மாற்றம் தேவை என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். இந்த இரண்டு விடயங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும்.


தற்போதுள்ள அரசியல் முறைமையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இதற்காக கடந்த ஆண்டைவிட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.


இந்த அரசாங்கத்தை ஒரே இயந்திரமாகவே பார்க்கிறோம். அமைச்சுக்களுக்கு பல திட்டங்கள் தனியாக பிரிக்கப்படவில்லை. வேலைத் திட்டங்கள் அனைத்தும் ஒரு இயந்திரத்தின் துணைப் பகுதிகளாக முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, யாருக்கும் இடையில் போட்டியோ, கயிறிழுத்தலோ இருக்கக் கூடாது.


தங்களின் பொறுப்புக்களை வரையறுத்துக் கொள்ளக் கூடாது. நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நீங்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். இந்தப் பணிகளின் போது ஜனாதிபதி அலுவலகம் மையப் பகுதியாக இருக்கும். அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றினால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும். 


உங்களின் பணிகள் வாரத்தில் 05 நாட்களுக்கோ, நாளொன்றுக்கு 08 மணித்தியாலங்களுக்கோ  மட்டுப்படுத்தப்படக் கூடாது.  அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற  வேண்டும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த நாட்டில் சாதாரண சூழ்நிலையை உருவாக்கி, உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த நாட்டை முன்னோக்கி வழிநடத்த நான் எதிர்பார்க்கின்றேன்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02.01.2023

No comments

Powered by Blogger.