Header Ads



ஹெலிகொப்டரில் இருந்து இறங்குவது பற்றி யோசனை - மைத்திரிக்கு எதிராக மிகப்பெரும் எதிர்ப்பலை


2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பிரபல  நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க தவறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கட்சிக்குள் சிறிசேன எதிர்ப்பாளர்கள் உருவாகியுள்ளதுடன் அவரை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருவதாக அறியமுடிகிறது.


அதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர மக்கள் கூட்டணியின் ஓர் அங்கமாக ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.


கூட்டணியுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் ஆட்சேபனைகளுக்கு அமைய கூட்டணியில் இருந்து வெளியேறுவதா என்பது குறித்து கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


கடந்த புதன்கிழமையன்று (11) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோர் இணைந்து சுதந்திர மக்கள் கூட்டணி என்ற புதிய கூட்டணியை ஹெலிகொப்டர் சின்னத்தில் உருவாக்கி அங்குரார்ப்பணம் செய்திருந்தனர்.


இந்நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் குறித்த மனுக்களின் பிரதிவாதிகளான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரே மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 100 மில்லியன் ரூபாயையும் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாயையும் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயையும் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை தமது சொந்த நிதியில் இருந்து நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனையடுத்தே மைத்திரிக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் உருவாகி அவரை பதவி விலகுமாறு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Tm

No comments

Powered by Blogger.