Header Ads



இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஒன்றுகூடலும், சிறுவர்களுக்கான அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சியும் (படங்கள்)


தகவல்: ரியாஸ் சவாஹிர் (தலைவர் SLMC - ITALY)


இத்தாலி வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில்  சிறுவர்களுக்கான அல் குர்ஆன் போட்டியும் இலங்கை முஸ்லிம்களின் ஒன்று கூடலும்  கடந்த ஞாயிற்றுக்கிழமை 08/01/2023 மிலான் (சரோனா)  நகரில்  நடைபெற்றது.


அல் குர்ஆனை அழகாகவும் தெளிவாகவும் நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக என்ற இறை வசனத்தை கருப்பொருளாக வைத்து  இரண்டாம் வருடமாக நடைபெறும்  அல்குர் ஆன் போட்டியில் சிறுவர்களும் சிறுமிகளும் தமது பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் சகிதம் இத்தாலி நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் ஆர்வத்தோடு சமூகம் தந்திருந்தார்கள்.


 அல் குர்ஆனை மனனம் செய்வதும் அதனை  அழகாக ஓதுவதும் இந்தப் போட்டியின் பிரதான நோக்கமாக இருந்தாலும் 

வளரும் பிள்ளைகளிடத்தில் நம்பிக்கையை கட்டி எழுப்புவதும்   இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை பலப்படுத்துவதும் 

இந்த வருடாந்த போட்டியின் ஏனைய சில நோக்கங்களாகும்.


ஐரோப்பிய நேரம் காலை பத்து மணிக்கு ஷெய்க்  ஹாபிஸ் யாகூப் மாறே  அவர்களின் அழகிய கிராத்தைத் தொடர்ந்து இத்தாலி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவர் ரியாஸ் சவாஹிர் அவர்களின் வரவேற்புரையம் தலைமையுரையும் இடம் பெற்றது. உலமாக்களையும் அதிதிகளையும் இத்தாலி நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும்  கலந்து கொண்ட அனைத்து மக்களையும் வருக வருக என வரவேற்றதோடு அல்லாஹ்வின் உதவியோடும் மக்களின் ஒத்துழைப்போடும் கடந்த  வருடத்தில் ஆரம்பமான   குர்ஆன் போட்டியின் வெற்றியின் அடையாளமாக இந்த வருடம் அதிகமான பிள்ளைகள் போட்டியில் பங்கேற்றிருப்பதை சுட்டிக் காட்டினார்.


வருடாந்த அல் குர்ஆன் போட்டியில் 5 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட மாணவ மாணவிகள் நாடளாவிய ரீதியில் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் 

ஐந்து குழுக்களாக போட்டியில்  பங்கு பற்றியதோடு  இளம் சிறார்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களின் விருப்புக்குரிய சூராக்களை ஒதுவதற்கான விஷேட ஏற்பாடும் ஏற்பாடாகியிருந்தது.மொத்தமாக 70 பிள்ளைகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இத்தாலியைச்சேர்ந்த  உலமாக்களான ஷெய்க் மாஸூம், ஷெய்க் யூனுஸ் அலீ, ஷெய்க் உஸாமா அல் சாந்தவி  ஆகியோர் போட்டியின் நடுவர்களாக கடமை ஆற்றியதோடு இத்தாலிய மொழியில் கால சூழலுக்கேற்ற இரு சிறு உரைகளையும் ஷெய்க் யூனுஸ் அலீ, ஷெய்க் உஸாமா அல் சாந்தவி  ஆகியோர் நிகழ்த்தினார்கள்.


இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் இயங்கும் அல்பாயான் அரபிக் பவுண்டேஷனின் இஸ்தாபக முதல்வர் ஷெய்க் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உரை நிகழ்த்தினார். அல்  குர் ஆனின் முக்கியத்துவம், தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் பிள்ளைகளின் அறிவு ஆற்றல் வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.


மஃக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட சகல போட்டியாளர்களுக்கும்  சான்றிதழ்களும் கிண்ணங்களும் சிறப்பு அதிதிகளாலும் இத்தாலி  இலங்கை முஸ்லீம் சங்கத்தின் நிர்வாக அங்கத்தவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டன. போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு விஷேட கிண்ணங்களும் வழங்கப்பட்டன. இவற்றுக்கான பூரண அனுசரணையை  Milan Sports Club வழங்கியிருந்தமை இந்த வருட அல் குர்ஆன் போட்டி நிகழ்ச்சி குறித்து  மிகவும் சிறப்பாக ஞாபகப் படுத்தவும் பாராட்டவும் வேண்டிய அம்சமாகும். 


இந்த நிகழ்ச்சியில் விஷேட அதிதிகளாக கலந்து கொண்ட நான்கு  உலமாக்களுக்கும் சமூகத்துக்கான தொடர் சேவையைப் பாராட்டி சகோதரர் முஹம்மது ரிகாஸ் முஹம்மது ராசிக் அவர்களுக்கும் விஷேட ஞாபக சின்னங்களை SLMC-ITALY நிர்வாக சபை சார்பாக அதன் தலைவர் ரியாஸ் சவாஹிர் கையளித்தார்.  


இந்த வருட போட்டியும் ஒன்று கூடலும் சகல வசதிகளும் கொண்ட மொரோக்கோ மக்களின் நிர்வாகத்தில் உள்ள ஸரோனா பெரிய பள்ளிவாசலில் நடந்தமை இந்த நிகழ்வின் சிறப்புக்கான  காரணங்களில் ஒன்றாகும். (Centro Culturale Islamico Di Saronno - islamsaronno-02 9628 0618)  https://g.co/kgs/s1rcef 

இந்த நிகழ்வுக்கு பள்ளிவாசலின் இமாம் ஷெய்க் நஜீப், நிர்வாகத்தினர், ஊழியர்கள் என சகலரின் முழு ஒத்துழைப்பும்  பாராட்டும்  பக்க பலமாக இருந்தது. 


நிகழ்வின் முடிவில்  நன்றியுரையை SLMC -ITALY யின் செயலாளர் முஹம்மது ஷஹீத் முஹம்மது மின்ஹாஜ் அவர்கள் நிகழ்த்தினார்.

2ம் வருட அல் குர்ஆன் போட்டி மற்றும்  ஒன்று கூடலின் வெற்றிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே சகல நன்றியும் உரியது. மற்றும்  மத்தியஸ்தர்களாகக்   கடமையாற்றிய  உலமாக்கள், மேலும் உரை நிகழ்த்திய உளலமாக்களுக்கும், மஸ்ஜித்தையும் அதன் சகல வளங்களையும் தந்துதவிய ஸரோனா பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும்  மேலும் அதிதிகளுக்கும் SLMC-ITALY நிர்வாகத்தினரின் தொடரான திட்டமிடல் அயராத முயற்சிக்காக நிர்வாக அங்கத்தினருக்கும்  தமது பிள்ளைகளை போட்டிக்காக சிறந்த முறையில் தயார் படுத்திய தாய் தந்தையருக்கும் கலந்து கொண்ட சகலரும் மெச்சும் வகையில் மிகவும் சுவையான மதிய உணவைத்த தயாரித்து பகிர்ந்தளித்த  சகல தொண்டர்களுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருக்கும்  உடலாலும் பொருளாலும் தமது பிரார்த்தனைகளாலும் உதவிகள்  புரிந்த சகலருக்கும் அல்லாஹ் அவனது அருளையும் கூலியையும் வழங்குவானாக என்றும் இவர்கள் அத்தனை பேருக்கும் SLMC-ITALY நிர்வாக சபை சார்பாக தனது  மனப் பூர்வமான நன்றியறிதலை சபையில் சமர்ப்பித்து விடை பெற்றார்.


காலை முதல் மாலை வரை நடைபெற்ற நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ச்சியை சகோதரர் நாளிர்  நியாஸ் அவர்கள்  மிக சிறப்பாக தமிழிலும் இத்தாலி மொழியிலும் தொகுத்து வழங்கினார்.


அல்லாஹ்வின் அருளால் அல் குர்ஆன் போட்டியும் ஒன்று கூடலும் ஷெய்க் உஸாமா அல் சாந்தவியின்  துவா பிராத்தனையோடு இரவு ஆறு முப்பது மணிக்கு இனிதே நிறைவு பெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது. அல்ஹம்து லில்லாஹ்.












No comments

Powered by Blogger.