Header Adsஅரபு நாடுகளுக்கு ரொனால்டோ செய்யும் 'மாபெரும் உதவி'


- முகமது அமீன் -


கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில், மத்திய கிழக்கின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அது அவருக்கு ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம்.


செளதி அரேபிய கால்பந்து கிளப் அன் நாசருடன் ரொனால்டோவின் ஒப்பந்தம், ஆண்டுக்கு 20 கோடி யூரோ மதிப்புடையது. கால்பந்து வரலாற்றில் மிக அதிக ஊதியம் பெறும் வீரராக இந்த ஒப்பந்தம் அவரை மாற்றியுள்ளது.


பொதுவாக 37 வயதில் தொழில்முறை கால்பந்து வீரர்களின் மதிப்பு குறையத் தொடங்குகிறது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பிராண்ட் மதிப்பைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது எப்படி என்பதும் அவருக்குத் தெரியும்.


கத்தாரில் நடந்த பிஃபா உலகக் கோப்பை போட்டியில் அவர் தனது அணிக்காக பிரமாதமாக விளையாடினார் என்று சொல்லமுடியாது. ஆனாலும் மிக அதிக மதிப்பிலான ஒப்பந்தத்தை பெறுவதில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.


செளதி அரேபியாவின் கால்பந்து கிளப்புடனான ரொனால்டோவின் ஒப்பந்தம், ஒரு விரிவான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் செளதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள், உலகின் முன்னணி கால்பந்து வீரர்களுடன் இணைவதற்கான வழியை திறந்துள்ளது என்று மத்திய கிழக்கு விளையாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


இந்த நாடுகளில் பணத் தட்டுப்பாடு இல்லை. மேலும் இந்தப்பெரிய வீரர்களுக்கு பணத்தை கொட்டிக்கொடுக்கும் அவர்களது உத்தியையும் பார்க்கமுடிகிறது.


மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ் போன்ற கிளப்புகளில் விளையாடிய ரொனால்டோ, கால்பந்தாட்டத்துக்கு குட்பை சொல்லும் முன் செளதி அரேபியாவுக்கு இடம் பெயர்வார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


1970களில் செளதி அரேபியா இதேபோல உலகெங்கிலும் இருந்து எண்ணெய் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஈர்த்தது.


அப்போது வளைகுடா நாடுகளில் கால்பந்தாட்டம் ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால் அந்த நேரத்திலும் செளதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப், உலக கால்பந்து பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


1970 இல், பிரேசில் அணி மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. பீலேவுடன் இணைந்து இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற ரிவெலினோ, தனது 16 ஆண்டு கால கால்பந்தாட்ட வாழ்க்கைக்குப் பிறகு செளதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப்பில் சேர்ந்தார்.


மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற பிரேசில் அணிக்கு ட்ரீம் டீம் என்று பெயர். இந்த அணியின் நட்சத்திரமான ரிவெலினோ 1978 இல், அல் ஹிலாலுடன் மூன்று வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


பிரேசில் அணியில் அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடிய ரிவெலினோ, இடது காலால் ஆங்கிள்களை உருவாக்கி ஷாட்களை விளையாடும் போது அதை நிறுத்துவது கடினமாக இருந்தது. வளைகுடா நாடுகளிலும் இவருக்கு அபார வெற்றி கிடைத்தது.


அவர் தனது அணிக்காக செளதி புரொஃபஷனல் லீக் பட்டத்தையும் வென்றார். அவர் மொத்தம் 39 கோல்களை அடித்தார். எனவே ரொனால்டோவை வசீகரித்த இந்தக்கவர்ச்சிகரமான சலுகை அவருக்கு முன்பே பல வீரர்களை ஈர்த்துள்ளது என்பதே உண்மை.


2012 இல் நான் இந்தியாவில் இருந்து கத்தாருக்கு இடம்மாறியபோது, அந்தநேரத்தில் கத்தாரின் மிகவும் பிரபலமான கிளப் அல் சாத், ரவுல் கோன்சலஸை ஒப்பந்தம் செய்தது. ஸ்பெயினின் கால்பந்து வரலாற்றில் ரவுல் மிகவும் பிரபலமான வீரர்களில் ஒருவர்.


ரவுல் விளையாட வந்த இடத்தில் கால்பந்து திடீரென முக்கியத்துவம் பெற்றது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு கத்தார் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது.


வளைகுடா நாடுகள் மக்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற ஒப்பந்தங்களைச் செய்கின்றன. கத்தார், செளதி அரேபியா போன்ற நாடுகள் விளையாட்டு வசதிகளை மட்டும் மேம்படுத்தவில்லை, மாறாக உலகத் தரம் வாய்ந்த வீரர்களை தங்கள் கிளப்பில் ஒப்பந்தம் செய்கின்றன. மேலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துகின்றன என்பதே உண்மை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


செளதி அரேபியாவில் எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டபோது மத்திய கிழக்கில் உள்ள இந்த நாடு செல்வம் நிறைந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் கத்தார் தன் வடகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டுபிடித்தபோது, அதன் செல்வமும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.


இதற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு எல்என்ஜி எரிவாயுவை விற்று கத்தார் உலகப் பொருளாதார வல்லரசுகளுடன் இணைந்தது. கத்தாரின் தற்போதைய ஆட்சியாளர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஒரு கால்பந்து பிரியர்.


நவீன கால்பந்தின் ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோர் விளையாடும் பிரெஞ்சு கிளப் ’பாரிஸ் செயின்ட் ஜெர்மைனின்’ (பிஎஸ்ஜி) உரிமையையும் கத்தார் வாங்கியதற்கு இதுவே காரணம்.


மறுபுறம், ஐந்து முறை பலோன் டி'ஓர் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ தரத்தை விட பணத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளார். ஐரோப்பாவில் உள்ள சிறந்த கிளப்களின் ஆஃபர்களை பெரும் தொகைக்காக நிராகரித்துள்ளார்.


செளதி அரேபிய கால்பந்து வரலாற்றில் பிரகாசமான நட்சத்திரமாக அவர் இணைந்துள்ளார். ஆயினும் அவரது இந்த இணைப்பு, செளதி கால்பந்து அல்லது பிராந்தியத்தின் கால்பந்திற்கு பெரிதும் பயனளிக்கும் என்று சொல்ல முடியாது.


இவருக்கு முன், 1994 உலக சாம்பியன் ரொமாரியோ மற்றும் பிரேசிலின் பெபெட்டோ ஜோடியும் பெரும் பணத்திற்காக செளதி அரேபியாவை அடைந்தனர். ஆனால் அவர்கள் இங்கு நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. ஆனால் நிச்சயமாக சில நன்மைகள் ஏற்படத்தான் செய்கின்றன.


பெரிய வீரர்கள் கிளப்பில் சேரும்போது பிராண்டிங் மற்றும் விளம்பரங்களின் விளையாட்டு பெரிதாகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் கிளப்கள் பெரிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதன் மூலம் மேற்கு நாடுகளுடன் வணிக நெட்வொர்க்குகளை அதிகரிக்க முயற்சி செய்கின்றன.


ஒரு பிராண்ட் என்ற வகையில் பார்க்கும்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் நாசர் கிளப்பை விட மிகப் பெரிய பிராண்ட். அவர் கிளப்பில் சேர்ந்த பிறகுதான் அந்த கிளப் பற்றி பரவலாக அனைவருக்கும் தெரியவந்தது.


2017ல் பார்சிலோனாவில் இருந்து பிஎஸ்ஜி-க்கு நெய்மர் மாறியதும், கடந்த சீசனில் மெஸ்ஸி லீக் 1 கிளப்பில் சேர்ந்ததும் கத்தாரின் பிராண்டிங்கை பலப்படுத்தியது, அதேபோல் ரொனால்டோ செளதி அரேபிய கிளப்புக்கு மாறுவது செளதி அரேபியாவின் பிராண்டிங்கை வலுப்படுத்தும்.


உண்மையில், வளைகுடா நாடுகளின் ஆர்வம் இப்போது பெட்ரோலியக் கிணறுகளிலிருந்து மற்ற விஷயங்களுக்கு மாறுகிறது. மேலும் அவை ஐரோப்பிய கால்பந்து சந்தையை முதலீட்டிற்கு ஏற்றதாகக் கருதுகின்றன.


கடந்த 14 ஆண்டுகளில் கத்தார், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய கால்பந்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அபுதாபியின் அரச குடும்பம் 2008 இல் மான்செஸ்டர் சிட்டியை வாங்கியது.


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல், பிரெஞ்சு கிளப்பான பிஎஸ்ஜி-ஐ கத்தார் வாங்கியது. 2021 இல் செளதி அரேபிய தலைமையிலான கூட்டமைப்பு, பிரீமியர் லீக் கிளப் நியூகாஸில் யுனைடெட்டை 30 கோடி பவுண்டுகளுக்கும் அதிகமான தொகைக்கு வாங்கியது.


செளதி அரேபியாவின் அப்துல்லா பின் மொசாத் பின் அப்துல்லாஜிஸ் அல் செளத், இங்லிஷ் ஃபுட்பால் லீக் சாம்பியன்ஷிப் கிளப்பான ஷெஃபீல்ட் யுனைடெட்டை 2013 இல் வாங்கினார்.


உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் வேகம் அதிகரித்து வருவதால், வெறும் பெட்ரோலியம் சார்ந்த பொருளாதாரம் நிலையானதாக இருக்காது என்பதை வளைகுடா நாடுகள் உணர்ந்துள்ளன.


சமீபத்தில் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கால்பந்தில் அதிக முதலீடு செய்ததன் காரணமாக சர்வதேச அளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த நாடுகளின் பணம் பிஎஸ்ஜி, மான்செஸ்டர் சிட்டி மற்றும் நியூகாஸில் யுனைடெட் போன்ற கிளப்புகளை நிதி சிக்கலில் இருந்து வெளியே கொண்டுவரவும், ஐரோப்பிய கால்பந்து சுற்றுகளில் தங்கள் நிலையை மேம்படுத்தவும் உதவியது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சொந்தமான மான்செஸ்டர் சிட்டி மற்றும் கத்தாருக்கு சொந்தமான பிஎஸ்ஜி ஆகியவை கடந்த தசாப்தத்தில் தங்களுக்குள் ஒரு டஜன் பட்டங்களை வென்றுள்ளன.


வளைகுடா நாடுகள் ஐரோப்பிய கால்பந்தில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த சந்தையின் விரைவான வளர்ச்சியாகும். கோவிட் காலத்திற்கு முன்பு 2019 இல் ஐரோப்பாவின் 32 சிறந்த கிளப்புகள் ஒன்பது சதவிகித விகிதத்தில் வளர்ந்து வந்தன.


எட்டு ஆண்டுகளில் இந்த கிளப்புகளின் வருவாய் 65 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது தவிர வளைகுடா நாடுகளுக்கு சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மற்ற நன்மைகள் உள்ளன. ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளை வாங்குவது, வளைகுடா நாடுகளின் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைக்கு பயனளித்துள்ளது.


1998 இல், அல் நாசர், பல்கேரியாவின் மிகப்பெரிய வீரரான ஹர்சிட்டோ ஸ்டோய்ச்கோவை ஒப்பந்தம் செய்தது. அவர் அங்கு நீண்ட காலம் தங்கவில்லை என்றாலும் அந்த சீசனில் செளதி அரேபியாவை ஆசிய சாம்பியனாக்கினார் ஸ்டோய்ச்கோவ்.


1994 உலக சாம்பியன் அணியில் உறுப்பினரான பெபெட்டோ ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2002 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்த போட்டிகளில் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.


பெபெட்டோவுடன் சேர்ந்து பிரேசிலை உலக சாம்பியனாக்கிய ரொமாரியோ, 2003 ஆம் ஆண்டு கத்தாரின் முன்னணி கிளப்பான அல் சாத்துடன், 15 லட்சம் டாலர்களுக்கு 100 நாள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


இருப்பினும் அவர் விளையாட்டு சிறப்பாக அமையவில்லை. மூன்று போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அர்ஜென்டினாவின் ஸ்ட்ரைக்கர் கேப்ரியல் பாடிஸ்டுடாவும் கத்தாரின் ’அல் அரபி’ கிளப்பிற்காக இரண்டு சீசன்களில் விளையாடினார்.


2007 ஆம் ஆண்டில் பிரேசிலிய நட்சத்திரம் டேனியல்ஸனும் அல் நாசருக்கு வந்தார். அந்த நேரத்தில் அவர் மிகவும் விலையுயர்ந்த வீரராகக் கருதப்பட்டார். ஆனால் அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே கிளப்பில் இருந்தார்.


1995 Ballon d'Or வெற்றியாளரும் தற்போது லைபீரியாவின் அதிபருமான ஜார்ஜ் வெஹா, 2001 மற்றும் 2003 க்கு இடையில் இரண்டு சீசன்களில் அபுதாபியின் அல் ஜசீரா கிளப்பில் இணைந்தார். அதேசமயம் 2006 உலக சாம்பியன் இத்தாலி அணியில் இருந்த ஃபேபியோ கான்வாரோ, 2011ல் துபாயின் அல் அஹ்லி கிளப்பில் சேர்ந்தார்.


2003-04 இல், முன்னாள் ஸ்பெயின் கேப்டன் பெர்னாண்டோ ஹியர்ரோ உட்பட பல வெளிநாட்டு வீரர்கள் கத்தாரில் உள்ள பல கிளப்புகளுடன் இணைந்தனர்.


2015 இல், கத்தாரின் அல் சாத் கிளப் 2010 உலக சாம்பியன் மற்றும் பார்சிலோனா நட்சத்திரம் ஜாவி ஹெர்னாண்டஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.bbc

No comments

Powered by Blogger.