Header Ads



பிலிப்பைன்ஸிலும், பாகிஸ்தானிலும் ஆடம்பரப் பொருளாகியுள்ள வெங்காயம் - ஆட்சியாளர்களுக்கும் கடும் நெருக்கடி


“எங்குமே வெங்காய துண்டுகள் இல்லை. உணவகங்கள் அனைத்துமே வெங்காய பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. ”


அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயம் இந்திய மதிப்பில் ரூ.1,043க்கு விற்பனை செய்யப்பட்டது.  இது,  மாமிசத்தின் விலையை விட மட்டும் அதிகம் இல்லை, அந்நாட்டின் குறைந்தப்பட்ச தினசரி ஊதியத்தை விடவும் அதிகமானது. 


கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை குறைந்துவந்தாலும், தற்போதும் பலருக்கும் வெங்காயம் என்பது ஆடம்பரப் பொருளாகவே உள்ளது என்று கூறுகிறார் மத்திய செபு நகரில்  பீசா கடை நடத்திவரும்  ரிசால்டா மவுன்ஸ்.


“நாங்கள் தினமும் 3 முதல் 4 கிலோ வரை வெங்காயம் வாங்கி வந்தோம்.  தற்போது அரை கிலோ மட்டுமே வாங்குகிறோம். அதுதான் எங்களால் முடிகிறது” என்று பிபிசியிடம் தெரிவித்தார் மவுன்ஸ்


“உணவகங்கள் மட்டுமல்லாது வீட்டிலும் பல உணவு வகைகள் வெங்காயம் சேர்ப்பதன் மூலமே செய்யப்படுவதால் எங்களின் நிலையை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்கிறார்கள்.  ” என்று அவர் மேலும் கூறினார். 


ஃபிலிப்பினோ உணவு வகைகளில் உள்ள பிரதான மூலப்பொருளான வெங்காயம் தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதற்கான அடையாளமாக மாறியுள்ளது


பணவீக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. பணவீக்கத்தால், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு பிலிப்பைன்ஸில் உணவு முதல் எரிபொருள் வரை விலை ஏற்றமடைந்தன. 


அந்நாட்டின் அதிபரும் விவசாயத்துறை செயலாளருமான ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், உணவுப் பொருட்களின் விலை உயர்வை "அவசர நிலை" என்று கூறியுள்ளார்.  வெங்காய விநியோகத்தை துரிதப்படுத்தும் விதமாக மார்கோஸ் இம்மாத தொடக்கத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் வெங்காயம் இறக்குமதிக்கு ஒப்புதல் அளித்தார்.


பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவது தேவையை உண்டாக்குகிறது, அதே நேரத்தில் கடுமையான வானிலை வெங்காயம் உள்ளிட்ட உணவு உற்பத்தியை பாதித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


“ஆகஸ்ட் மாதத்தில், வெங்காயத்திற்கு பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியத்தை விவசாயத் துறை கணித்திருந்தது.  சில மாதங்கள் கழித்து, பிலிப்பைன்ஸை இரு பலம் வாய்ந்த புயல்கள் தாக்கியதால், கணிசமான பயிர் பற்றாக்குறை ஏற்பட்டது. ” என ஐஎன்ஜி வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் நிக்கோலஸ் மாபா கூறுகிறார்.


“பொருளாதாரம்  மீண்டு வருவதால் தொடர்ந்து தேவை  அதிகரித்து வருவதையும் நாம் பார்க்கிறோம்” என்றும் அவர் கூறினார். 


உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே புகழ்பெற்ற செபுவில் உள்ள தெருவோர உணவு கடைகளையும் இந்த விலை உயர்வு பாதித்தது. 


பொரித்த காய்கறிகள், மாமிசம் மற்றும் கடல் உணவுகள் போன்றவை வெங்காயம் மற்றும் வினிகர் கலந்த சாஸ் உடனேயே பரிமாறப்படுகின்றன. 


“வெங்காயம் எங்கள் உணவுகளில் ஒரு பெரிய பகுதியாகும். இது எங்கள் உணவின் உப்புத்தன்மையை வேறுபடுத்துவதற்கு ஒரு சுவையான மொறுமொறுப்பு[மற்றும்] இனிமையை சேர்க்கிறது,” என்று அலெக்ஸ் சுவா கூறுகிறார், அவர் தனது கடையில் வெங்காயத்தை குறைத்துள்ளார்.


“விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கத்திற்கு நன்றி. விலை மேலும் குறைவதற்கு, அவர்கள் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ” என்றும் அவர் தெரிவித்தார். 


இலோய்லோ நகரில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற  தனது திருமணத்தில் லைகா பயோரி வெங்காயத்தால் ஆன பூங்கொத்தை எடுத்துச் செல்ல தேர்வு செய்ததை தொடர்ந்து அது மிகவும் தேடப்பட்டது. 


“திருமணத்திற்குப் பிறகு பூக்கள் வாடி, தூக்கி எறியப்படும் என்பதால், பூக்களுக்குப் பதிலாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாமா என்று நான் என் மணமகனிடம் கேட்டேன்,” என்று  பயோரி உள்ளூர் செய்தித்தாளிடம் கூறினார்.


“திருமணம் முடிந்த பின்னரும், வெங்காயத்தை பயன்படுத்த முடியும் என்பதால், பூக்களுக்கு மாற்றாக அதனை ஏன் பயன்படுத்தக்கூடாது? ” என்று கிண்டலாக அவர் கூறினார். 


வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து பிலிப்பைன்ஸுக்குள் கடத்துவதன் மூலமும் சிலர் சிக்கலில் சிக்கியுள்ளனர். 


இந்த மாத தொடக்கத்தில், 40 கிலோ வெங்காயம் மற்றும் பழங்களை லக்கேஜ் பைகளில் கடத்த முயன்றதற்காக பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸின் 10 பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 


அவர்கள் மீது வழக்குப் பதியப்படாது என்றும் , அனுமதி இல்லாத பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று பயணிகளிடம் எச்சரித்ததாகவும் சுங்கத் துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். 


அதிகரிக்கும் நெருக்கடி

இந்த நெருக்கடி அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. உணவு உற்பத்தியை அதிகரிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.  ஒருசிலர்  அவருக்கான மாற்று நபரை நியமிக்கவேண்டும் என்றும்  மார்கோஸை வலியுறுத்தியுள்ளனர். 


நாட்டின் உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விசாரணையில் பேசிய பிலிப்பைன்ஸ் செனட்டர் கிரேஸ் போ, “முன்பு சர்க்கரை, இப்போது வெங்காயம். சமையலறையில் உள்ள அனைத்து குறித்த விசாரணையை நாங்கள் மேற்கொள்கிறோம்” என்றார். 


காந்தார் வேர்ல்ட் பேனல் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த மேரி-ஆன் லெசோரைன் கூறுகையில், பருவநிலை மாற்றம் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார். 


"ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கும் நிலையில் உள்ள பெரும்பாலான நுகர்வோருக்கு வாங்கும் திறன் இறுக்கமாக உள்ளது. காலநிலை மாற்றம் பற்றாக்குறையை ஏற்படுத்தினால், விலைகள் உயர்ந்தால், அது பிலிப்பைன்ஸில் உள்ள பெரும்பாலான நுகர்வோர் மீது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்," லெசோரைன் கூறுகிறார்.


ஆனால் அரசாங்கம் அதிகளவு பயிர்களை இறக்குமதி செய்வதால் வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும் என்று மாபா நம்புகிறார்.


எனினும், உள்ளூர் வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலமான பிப்ரவரியுடன்  ஒத்துப்போவதால் இது துரதிர்ஷ்டவசமான நேரமாக இருக்கக் கூடும் என்று அவர் கூறுகிறார்.  அறுவடை மற்றும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஏறக்குறைய ஒரே நேரத்தில் சந்தைக்கு வந்தவுடன்  விலைகள் அதிரடியாக குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.


பாகிஸ்தானிலும் உச்சத்தில் வெங்காயம் விலை

கடந்த சில மாதங்களாகவே கடுமையாக பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒருகிலோ வெங்காயம் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.250 முதல் ரூ.260 வரை (இந்திய மதிப்பில் ரூ.70-80) விற்கப்படுகிறது. 


தற்போது, பாகிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை வித்தியாசமாக உள்ளது.


பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில், வெங்காயம் தற்போது அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.250 முதல் 260 வரையிலான விலையில் கிடைக்கிறது. அதேசமயம் கைபர் பக்துன்க்வாவின் பெஷாவரில் இதன் விலை 230 முதல் 250 ரூபாய் வரை உள்ளது.


கராச்சியில் சின்ன வெங்காயம் ரூ.230க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.240க்கும் கிடைக்கிறது. அதேபோல், பஞ்சாப் மாநிலம் லாகூரில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 220 முதல் 240 ரூபாய் வரை உள்ளது. 

No comments

Powered by Blogger.