Header Ads



கல்முனை மாநகர முதன்மை, வேட்பாளராக களமிறங்கும் AM. ஜெமீல்


முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.


அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட இவர், அக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகவும் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


அத்துடன் கட்சியின் புத்திஜீவிகள் அமைப்பான United Professional Forum எனும் ஐக்கிய தொழில்வாண்மை பேரவையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 2006ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு,  உறுப்பினராக தெரிவாகியிருந்த ஏ.எம்.ஜெமீல், 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, இரு தடவைகள் மாகாண சபை உறுப்பினராகவும் 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரை மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.


இக்காலப்பகுதியில் அக்கட்சியின் உயர் பீட உறுப்பினராக, இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக, சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வசித்திருந்தார்.


2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட இவர், அக்கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்றிருந்தார்


அதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகவும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தவிசாளராகவும் பதவிகளை வகித்திருந்தார்.


தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து, கல்முனை மாநகர சபைக்கு அக்கட்சி சார்பில் பலமான அணியொன்றுடன் முதன்மை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெமீல், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.


 -- முஹம்மட் கலீல் -

No comments

Powered by Blogger.