Header Ads



'சண்டை செய்வோம்' - எம்பாப்பேவின் உணர்ச்சிமிகு உரை


கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின்போது, ஆட்ட இடைவேளையில் எம்பாப்பே அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசிய காணொளி வெளிவந்துள்ளது.


அந்தப் போட்டியின் 80வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் தொடங்கி பிரான்ஸ் அர்ஜென்டினாவுக்கு பெரும் சவால் விடுத்தது. முதல் பாதி முடிந்தபோது லியோனெல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றியின் விளிம்பில் இருந்தது. அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை விட முன்னிலையில் இருந்தது.


அதுவரை பிரான்ஸால் எதிரணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மெஸ்ஸியின் அணிக்குக் கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிலியன் எம்பாப்பே, அதுவரை பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தியிருக்கவில்லை.


அந்த நேரத்தில், ஆட்ட இடைவேளையின்போது அவர் தனது அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார். அப்போது, அவர்களால் மீண்டும் போட்டியைத் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்பதையும் ஃபிஃபா உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்பதையும் நினைவூட்டினார்.


மேலும், “இது உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி. நம்முடைய வாழ்நாள் போட்டி,” என்று உடை மாற்றும் அறையில் வீரர்களிடம் எம்பாப்பே கூறினார்.


“எப்படி இருந்தாலும், இதைவிட நாம் மோசமாகிவிட முடியாது. ஆகவே, நாம் மீண்டும் களத்திற்குச் செல்வோம். அவர்களை விளையாட விடுவோம் அல்லது கொஞ்சம் தீவிரம் காட்டி சண்டையில் இறங்கி, வேறு ஏதாவது செய்வோம் நண்பர்களே!


ஏனென்றால், இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி” எம்பாப்பே கூறுவதை அந்தக் காணொளி காட்டுகிறது.


மேலும், “அவர்கள் இரண்டு கோல்களை அடித்துவிட்டார்கள். நாம் இரண்டு கோல்கள் பின் தங்கியுள்ளோம். ஆனால், மீண்டுவரலாம். நண்பர்களே, இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடியது,” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.


பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்சாம்ப்ஸ், “உங்களுக்கு ஒரு வித்தியாசத்தைச் சொல்கிறேன். அவர்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை விளையாடுகிறார்கள். ஆனால், நாம் அப்படி விளையாடவில்லை,” என்று கூறுகிறார்.


டிசம்பர் 18ஆம் தேதியன்று லுசைல் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைத் தொடர்ந்து கோப்பை வழங்கும் விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், கிலியன் எம்பாப்பேவுக்கு ஆறுதல் கூறினார்.


இரண்டாம் பாதியில் அணியால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தது என்றால் அதற்குக் காரணம் எம்பாப்பே உடை மாற்றும் அறையில் நிகழ்த்திய அந்த உரையாக இருக்கலாம். அதோடு, அவர் 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்ததும் அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோல் அடித்ததும் அணிக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.


பிறகு, மெஸ்ஸி மூன்றாவது கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னிலைக்குக் கொண்டுவந்தபோது, 97வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டுமொரு கோல் அடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார்.


பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் நட்சத்திர வீரரான அவர், மூன்று கோல்களை அடித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாதனை செய்தார்.


எம்பாப்பே, 1966ஆம் ஆண்டில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஜெஃப் ஹர்ஸ்டின் செய்ததற்குப் பிறகு, உலககோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது நபர் என்ற சாதனையை எம்பாப்பே சாதித்தார்.


ஆனால், ஆட்டம் இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டினா லுசைல் மைதானத்தில் கோப்பையை வென்றது.


எம்பாப்பேயின் சாதனைகள்

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. 


அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது.


போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார்.


போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.


23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். 


இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13. bbc

No comments

Powered by Blogger.