Header Ads



இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை - அதிலுள்ள விசேட அம்சங்கள் என்ன


ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case)  இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 


இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த சிறப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.


உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும்.


இந்த உலக பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவ்வாறான பை ஒன்றை உருவாக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.


இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய, இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் விவரக்குறிப்புகளின்படி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் தலைமையிலான துறைசார் நிபுணர்கள் குழு, சிறப்பு தொழில்நுட்பத்துடன் தனித்துவமான வடிவமைப்பாக இந்த பையை உருவாக்கியது. .


இது ஒரு ஜனாதிபதிக்கு பின்னர் மற்றுமொரு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடிய நீடித்து நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததுடன், அதற்கமைய பாதுகாப்பான மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் உயர்தர தோலைப் பயன்படுத்தி இந்தப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் கையொப்பத்தைப் பெறுவதற்காக, அமைச்சுகள் நாளாந்தம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கோப்புகளை அனுப்புகின்றன, மேலும் ஆவண கோப்புறைகளுக்காக செலவிடப்படும் பணத்தை குறைக்க அனைத்து அமைச்சுகளுக்கும் இத்தகைய பையை பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், தேவையான பைகளை இராணுவம்  தயாரிக்கும் என்றும் தெரிவித்தார்.


இவ்வாறு உயர்தரத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கலைஞர்களையும் பாராட்டினார். 


இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான  சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02-12-2022




No comments

Powered by Blogger.