Header Adsகாருக்குள்ளேயே உறைந்து உயிர் விடும் பரிதாபம் - அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்


அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.


கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 28 பேர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.


குறிப்பாக, பஃபல்லோ நகரை பனி மூடியதால் கடுங்குளிரில் உறைந்து இறந்து போனவர்கள் அதிகம். சிலர் கார்களில் இருந்தபடியே மரணத்தைத் தழுவியுள்ளனர்.


பஃபல்லோ நகரில் பனிப்பொழிவு இடைவிடாமல் தொடர்வதால் ஏராளமான வீடுகள் பனி மூடிக் காணப்படுகின்றன. சாலைகள் பனி மூடிக் கிடப்பதால் மீட்புப் பணியை முழு வீச்சில் தொடர முடியவில்லை.


தொலைதூர இடங்களை மீட்பு வாகனங்களோ, மருத்துவ அவசரப் பணியில் உள்ள வாகனங்களோ நெருங்கவே முடியவில்லை.


உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த கடந்த ஞாயிறன்று, அமெரிக்காவில் பனிப்பொழிவால் பயணத்தை தொடர முடியாமல் சாலையோரம் ஆங்காங்கே பலரும் குடும்பத்துடன் காருக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளனர்.


அவ்வாறு, பனிமழையில் சிக்கித் தவித்த, 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்று அவசர உதவி கேட்டு 11 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடக்க நேரிட்டுள்ளது. தடைகள் பல கடந்து அங்கு சென்ற மீட்புக் குழு அந்த குடும்பத்தை பத்திரமாக மீட்டு வந்துள்ளது.


சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்த குழந்தைகளின் தந்தை ஸிலா சான்டியாகோ, "நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன்" என்று கூறினார். கடுங்குளிரின் தாக்கத்தை தவிர்க்க, கார் என்ஜினை தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்திருந்ததாகவும், மன உளைச்சல் வராமல் இருக்க குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேபோல் மேலும் பல குடும்பங்களும் பனிப்பொழிவில் சிக்கி சாலையில் ஆங்காங்கே தவிக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்க தேசிய வானிலை மையம் கணிப்புப் படி, அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே நிலைமையில் மாற்றம் வரும்.


அவ்வாறான வேளையில், பனி சற்று விலகும் என்பதால் மீட்புக் குழுவினர் தடையின்றி பணியைத் தொடர்வார்கள். அந்த குழுவினர் தொலைதூர இடங்களுக்கும், சாலை நெடுகிலும் ஆய்வு செய்யும் போது மேலும் பலர் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பஃபல்லோ நகரை பூர்விகமாகக் கொண்ட நியூயார்க் மாகாண ஆளுநர் கேத் ஹோச்சுல், "பஃபல்லோ நகரின் மிக மோசமான பனிப்புயலாக இது வரலாற்றில் பதிவாகும்", என்று கூறுகிறார்.


"சாலையின் இருபுறமும் கார்கள் முடங்கிக் கிடப்பதை பார்க்கும் போது ஏதோ போர்க்களத்திற்குச் செல்வது போல இருக்கிறது" என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.


உயிருக்கே ஆபத்தான மிக மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


வெர்மாண்ட், ஒஹாயோ, மிசோரி, விஸ்கான்சின், கான்சாஸ், கொலராடோ ஆகிய மாகாணங்களிலும் பனிப்புயல் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. தெற்கு ஃபுளோரிடாவில் பல்லி இனங்களில் ஒன்றான இகுவானாக்கள் உறைந்து, மரங்களில் இருந்து கீழே விழும் அளவுக்கு வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.


அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மொன்டனா குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை -50F (-45C) என்னும் அளவுக்கு சரிந்துள்ளது.


அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 லட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது ஒரு கட்டத்தில் 17 லட்சம் என்கிற அளவில் உச்சத்தில் இருந்தது.

No comments

Powered by Blogger.