Header Ads



ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமே இனி ஜும்ஆத் தொழுகை - பதிவு செய்வதற்கான விதிமுறைகள் அறிவிப்பு


இலங்கை வக்ப் சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU), தரீக்காக்களின் உச்ச பீடம் (SCOT), தேசிய ஷூரா கவுன்சில் மற்றும் ஷரியா கவுன்சில் ஆகியவற்றின் இணக்கத்துடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய காலப்பகுதியில் ஜும்ஆத் தொழுகை இடம்பெற்ற ஜும்ஆப் பள்ளிவாசல்களில் மாத்திரம் ஜும்ஆவை நடாத்த முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, பொது மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பாக, சுகாதார அமைச்சு அதிகாரிகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக அனைத்து பள்ளிவாசல்கள்/தக்கியாக்கள்/ஷாவியாக்களில் ஜும்ஆத் தொழுகையை நடத்துவதற்கு எமது MRCA/A/06/Covid/19 ம் இலக்க மற்றும் 17.06.2021 ம் திகதிய சுற்றுநிரூபத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை தாங்கள் அறிந்ததே.


தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால், கொரோனா தொற்றுக்கு முந்தைய நடைமுறையின் பிரகாரம், ஜும்ஆப் பள்ளிவாசல்களில் மாத்திரம் ஜும்ஆத் தொழுகை நடத்த வேண்டும் என பல சமய அமைப்புகள் மற்றும் சில பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


எனவே, கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதற்கு முன்பு ஜும்ஆத் தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல்களில் மாத்திரம் ஜும்ஆத் தொழுகையை நடத்துமாறு  அனைத்து பள்ளிவாசல்கள்/தக்கியாக்கள்/ஷாவியாக்களின் நம்பிக்கையாளர்களும், பொறுப்பாளர்களும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


எந்தவொரு பள்ளிவாசல் நிருவாகமும் தமது பள்ளிவாசல்கள்/ தக்கியாக்கள்/ ஷாவியாக்களை ஜும்ஆப் பள்ளிவாசலாக தரமுயர்த்த விரும்பினால், இத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப அவர்கள் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும். (விதிமுறைகளின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).


எவ்வாறாயினும், பள்ளிவாசல்கள்/தக்கியாக்கள்/ஷாவியாக்களை ஜும்ஆப் பள்ளிவாசலாக தரமுயர்த்துவது கவனமாக மதிப்பிடப்பட்டு, அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான காரணங்கள் இருந்தால் மாத்திரம் முறையான ஆய்வுக்குப் பின்னரே இத் திணைக்களத்தினால் முடிவெடுக்கப்படும். என *இப்ராஹிம் அன்சார்* பணிப்பாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடக அறிக்கை ஊடாக இத் தகவல்களைத் தெரிவித்துள்ளாா்.




No comments

Powered by Blogger.