Header Ads

கத்தார் உலகக் கோப்பையில் 'ஷாக்' கொடுத்த 8 சம்பவங்கள்


அனல்பறந்த ஆட்டங்கள்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. எதிர்பாராத திருப்பங்கள்.. சொல்லில் அடங்காத உணர்வுகள் என நாளுக்கு நாள் பல சுவாரஸ்யங்களையும் ஆச்சரியங்களையும் தந்து கொண்டிருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களிலேயே இதுதான் ஆகச் சிறந்தது என வர்ணிக்கின்றனர் கால்பந்து பிரியர்கள். அதற்கு மிக முக்கிய காரணம். 90 நிமிடங்களில் நடந்த அதிரடி திருப்பங்கள்தான். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டங்கள் மட்டுமே விறுவிறுப்பாக இருக்கும் என்கிற நிலைப்பாட்டை மாற்றி எழுதியிருக்கிறது இந்த தொடர்.


பலம் வாய்ந்த முன்னணி அணிகளை பெரிய அனுபவம் ஏதுமில்லாத சிறிய அணிகள் வீழ்த்தியிருக்கின்றன. அந்த வகையில் நடப்பு தொடரில் நிகழ்ந்த 7 சுவாரஸ்யமான திருப்பங்களை இங்கே காணலாம்.

1. அர்ஜென்டினாவை அதிர வைத்த செளதி

அர்ஜென்டினா - செளதி அரேபியா போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதி கோல் கணக்கு எப்படியிருக்கும் என்று கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். உடனிருந்த இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இன்னொருபடி மேலே போய் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். அவர்கள் மாத்திரமல்ல போட்டிக்கு முன்பு யாருமே அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி வெற்றி பெறும் என்று கருதியிருக்க மாட்டார்கள். காரணம், சௌதி அரேபியா தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கிறது.


அர்ஜென்டினா தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒரு புள்ளி விவரமே கணிப்புகள் எப்படியிருக்கும் என்று கூறிவிடும். ஆனால் மெஸ்ஸியின் அணிக்கு 1 - 2 கோல் கணக்கில் அதிர்ச்சியளித்தது சௌதி அரேபியா. அது செளதியின் கால்பந்து வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது. எந்த அளவுக்கு எனில், தேசிய விடுமுறை அறிவித்து கொண்டாடும் அளவுக்கு ஆனந்தத்தில் திளைத்தது செளதி அரேபியா.


2. ஜப்பானிடம் ஏமாந்த ஜெர்மனி

டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது. தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான், ஜெர்மன் ரசிகர்களை அந்த கோலின் மூலமாகத் திகைக்க வைத்திருந்தது. ஆனால், ஜப்பானிய மக்களிடையே அந்த கோல் ஆஃப்சைட் இல்லை என்று உறுதியானவுடன் கரகோஷங்கள் பறந்தன.


ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தத் தொடங்கினார்கள். கலீஃபா மைதானமே ஜப்பானிய ரசிகர்களின் உற்சாகக் கூச்சல்களால் நிறைந்திருந்தது. சௌதி அரேபியாவின் ஆச்சர்யமளிக்கக்கூடிய வெற்றியைத் தொடர்ந்து, 1 - 2 கோல் கணக்கில் ஜப்பானும் ஜெர்மனியை வீழ்த்தி உலக கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.


3. பிரான்சுக்கு கசப்பு மருந்து கொடுத்த துனீசியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 92 ஆண்டுகால வரலாற்றில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை துனிசீயா அணி வீழ்த்தியதை யாருமே துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரான்ஸ் அணி முன்னணி வீரர்களை பெஞ்சில் அமரவைத்துவிட்டு குரூப் சுற்றின் கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத வீரர்களைக் கொண்டே விளையாடியது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை போட்டியின் முடிவில் அந்த அணி உணர்ந்திருக்கும்.


58வது நிமிடத்தில் கோல் அடித்து, 1 - 0 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது துனீசியா. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் துனீசியாவால் அடுத்த சுற்றுக்கு நுழைய முடியவில்லை. அரங்கில் இருந்த துனிசிய ரசிகர்கள் பலர் கண்ணீர் வடித்து அழுததை தொலைக்காட்சித் திரைகளில் காண முடிந்தது.


4. ஸ்பெயின் தோல்வியும் 4 முறை சாம்பியனுக்கு நேர்ந்த கதியும்


ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புல்லின் நுனி அளவிலான கால்பந்தின் வளைவு கத்தார் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜெர்மனிக்கு அதிரவைக்கும் முடிவுகளைத் தந்தது.


எல்லைக் கோட்டை தாண்டிய பிறகு கிடைத்த பாஸில் ஜப்பான் கோல் அடித்ததாக கருதப்பட்டது. ஆனால் நடுவர் VAR உதவியுடன் அதனை கோலாக அறிவிக்க ஸ்பெயினுக்கு 2 - 1 கோல் கணக்கில் தோல்வியைத் தந்து அதிர்ச்சியளித்த கையோடு 4 முறை சாம்பியனான ஜெர்மனியையும் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய விடாமல் செய்தது ஜப்பான்.


5. உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்திய கேமரூன்

யாருமே எதிர்பார்த்திராத மற்றொரு திருப்பம் பிரேசில் - கேமரூன் குரூப் ஆட்டத்தில் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் பிரேசிலால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கூடுதலாக கிடைத்த 2 நிமிடத்தில் கேமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் அடித்த கோல் கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.


உலகின் நம்பர் 1 அணியான பிரேசில் கேமரூனிடம் வீழ்ந்தது. இருந்தபோதிலும் அது நாக் அவுட் வாய்ப்புக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கோல் அடித்த மகிழ்ச்சியில் கேமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் தனது சட்டையை கழற்றி கொண்டாடினார்.


ஏற்கனவே மஞ்சள் அட்டை வாங்கியிருந்த அவருக்கு 2வது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டையையும் கள நடுவர் காட்டினார்.


வின்செண்ட் அபுபக்கருக்கு கைக்கொடுத்து கள நடுவர் வழியனுப்பி வைத்த காட்சி பலரையும் கவனிக்க வைத்தது. சமூக ஊடகங்களிலும் வைரலானது.


6. போர்ச்சுகலை புரட்டியெடுத்த தென் கொரியா

போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில், தென்கொரிய வீரர் தங்களது கோல் பகுதியில் இருந்து எதிரணியின் கோல் பகுதி வரைக்கும் பந்தைக் கடத்திக் கொண்டு வந்து கோலடிக்க உதவியது அந்நாட்டு ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தது.


இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி வெற்றி பெற்றது. தென் கொரிய அணியினரை கோல் அடிக்க விடாமல் தடுக்க முயன்ற ரொனால்டோ தவறுதலாக கோலை நோக்கியே பந்தைத் திருப்பியதால், அந்த வாய்ப்பை தென்கொரியா பயன்படுத்திக்கொண்டது.


ரொனால்டோவின் தவறைத் தொடர்ந்து அவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் எளிமையாக வெல்லும் எனக் கருதப்பட்ட போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் தென் கொரிய கேப்டன் சன் களத்தில் அழுத காட்சி பலரையும் நெகிழ வைத்தது.


7. ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோவும் கண்ணீரும்


போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் உலகக் கோப்பையில் சந்தித்தார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ். அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 6 கோல்களை அடித்தது. அதில் மூன்று கோல்களை ரொனால்டோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ராமோஸ் அடித்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.


இதுமட்டுமின்றி மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 11 வீரர்களில் ரொனால்டோ இடம்பெறவில்லை. மாற்று வீரராக களமிறக்கப்பட்டாலும் குறைவான அளவிலேயே அவருக்கு பந்தை தொடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்தில் மொராக்கோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் களத்தைவிட்டு கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ.


8 வரலாறு படைத்த மொராக்கோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்த்திராத ஓர் அணி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியது என்றால் அந்த பெருமை மொராக்கோவையே சாரும்.


சிறப்பான தடுப்பாட்டம், எதிர்பாராத தருணங்களில் கோல் ஸ்கோர் செய்வது, கொண்டாட்டத்தின்போது தங்களது தாய் மற்றும் குடும்பத்தினருடன் நடனமாடுவது, களத்திலேயே மண்டியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவது என பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது மொராக்கோ.


நாக் அவுட் சுற்றில் முதலில் ஸ்பெயினை வீழ்த்தி அதிர்ச்சி தந்தது. பிறகு காலிறுதியில் போர்ச்சுகலையும் வென்றது. உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்கிற பெருமையை படைத்தது. இணையத்தில் பலரது மனங்களையும் வென்றிருக்கிறது மொராக்கோ அணி. bbc

No comments

Powered by Blogger.