Header Ads



இலங்கையில் இருந்து வேலைக்காக செல்லவிருந்த பெண்களுக்கு ஏமாற்றம் - 3 இடங்களில் ஏமாற்றம்


வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜப்பானில் வேலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் அதிகளவிலானவர்கள் இன்று -28- அங்கு  சென்றிருந்தனர்.


எனினும், 20 வெற்றிடங்களுக்காக மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை பின்னர் தெரிய வந்தது. 


பத்தரமுல்லையில் உள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அருகில் இன்று காலை  நீண்ட வரிசை காணப்பட்டது. 


தூர இடங்களில் இருந்து வருகை தந்தவர்களும் இதன்போது வரிசையில் நின்றனர்.


கடந்த 20 ஆம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தமது பேஸ்புக் பக்கத்தில் வௌியிட்டிருந்த விளம்பரத்திற்கு அமைய அவர்கள் சென்றிருந்தனர்.


ஜப்பானில்  உள்ள  மோட்டார் வாகன நிறுவனத்தில் பெண்களை வேலைக்கு சேர்ப்பதற்கான பதிவு மற்றும் தௌிவூட்டல் நிகழ்வு  இன்று நடைபெறவுள்ளதாக அந்த விளம்பரத்தில்  குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜப்பானில் வழங்கப்படவுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இருபது பெண்களுக்கே ஜப்பானில்  தொழில் வாய்ப்பை வழங்க முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


எனினும், இது நியாயமற்ற செயற்பாடு என வரிசையில் காத்திருந்தவர்கள் முறையிட்டனர். 


இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தௌிவூட்டும் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது, இன்று அழைக்கப்பட்ட நேர்காணலுக்கு ஜப்பான் மொழி அவசியமில்லை எனவும் மொழி பயிற்றுவிக்கப்படும் எனவும் 4 மாத பயிற்சியுடன் 20 பேர் வேலைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார். 


இதேவேளை, இஸ்ரேலில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பயிற்சிகளை பெற்றுக்கொண்டவர்கள் சிலர் இன்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இஸ்ரேலின் தொழில் கோட்டா தன்னிச்சையாக மாற்றியமைக்கப்பட்டதால், பயிற்சிகளை நிறைவு செய்த பலருக்கு அந்த தொழில் வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் பதிலளித்தது.


கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய லொத்தர் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. தகைமைகளை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தொழில் ஒப்பந்தங்கள் கிடைப்பதில் ஓரளவு பின்னடைவு உள்ளது. இலங்கையர்களுக்கு எவ்வாறான கேள்வி இருக்கின்றதோ அதற்கமைவாக நாம் விநியோகித்தால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என அறிவித்துள்ளனர்


என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் காமினி செனரத் யாப்பா கூறினார். 


இதேவேளை, நுகேகொடையில் அமைந்துள்ள தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினால் ரஷ்யாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து இடம்பெறும் பண மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


இதன்போது  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது.


எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர் துபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷங்க பிரியதர்ஷன, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் 37 ஆவது பிரிவை மீறிய குற்றச்சாட்டில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.


பின்னர் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 comment:

  1. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் செயலைப் பாருங்கள். பொதுமக்கள் மத்தியில் வீணான நம்பிக்ைகயை ஏற்படுத்தி யப்பானில் வேலை, ரஷ்யாவில் வேலை, என பொதுமக்களை ஏன் ஏமாற்றுகின்றார்கள். இறுதியில் அவர்களுடைய சொந்த கையாட்களுக்கு மேசைக்கு அடியில் கைமாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்குத்தான் அந்த ​இருபது பேருக்குடைய தொழில்களும் கிடைக்கும். அரசாங்கம் செய்யும் அதே தொழிலை இப்போது அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களும் செய்து பொதுமக்களை ஏமாற்றுவதை ஒரு தொழிலாக நடாத்தி வருகின்றனர். இது பெரிய பாவம் இதன் விளைவு மிகவும ஆபத்தானது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யத்தான் பொதுமக்கள் அரசாங்கத்தைத் தெரிவுசெய்துள்ளனர். எனவே அரச அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யாது இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றுவது அவர்களு்க்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் இது நிச்சியம் கடுமையாகப் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.