Header Adsஅரசாங்கத்திற்கு விசுவாசமான 12 பேர் அமைச்சர்களாவதற்கு எதிர்பார்த்தபடி உள்ளனர்


தற்போது எமது நாட்டின் கல்வி முறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கல்வி முறையால் உலகை வெல்ல முடியாது எனவும்,புதிய உலகை நோக்கிய பயணத்தில் உலகை வெற்றி கொள்ள வேண்டுமானால் டிஜிட்டல்,கணினி மற்றும் ஆங்கில மொழிக் கல்விப் புரட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகளின் ஆங்கில மொழிப் புலமையை உலகில் மிக உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ஆங்கில மொழியை சரளமாகப் பயன்படுத்தும் திறனை விரிவுபடுத்த வேண்டும் எனக் கூறும்போது கிணற்றுத் தவளை எண்ணப்போக்கில் உள்ள சிலர் சிரிக்கிறார்கள் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மரபான கல்வி முறையை ஒழித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும், சர்வதேச தொழிலாளர் சந்தையை மையமாகக் கொண்ட கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


தேசப்பற்று எனக் கூறி இவ்வாறான கல்வி முறையை எதிர்ப்பது எமது நாட்டை மேலும் வங்குரோத்து செய்வதாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்,கணினி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக் கல்வியை இந்நாட்டில் யதார்த்தமாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.


நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 47 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை பொலன்னறுவை தோபாவெவ தேசிய பாடசாலைக்கு இன்று (21) அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அரசாங்கத்திற்கு விசுவாசமான 12 பேர் அமைச்சர்களாவதற்கு எதிர்பார்த்த வண்ணம் இருப்பதாகவும், 220 இலட்சம் பேருக்கும் நலவு நாடுவதற்காக அல்லாது,தமது குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களுக்கும் பதவிகளையும் சலுகைகளையும் வழங்குவதற்காகவே அமைச்சுப் பதவிகளைப் அவர்கள் பெற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நிலையை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக மாற்றியுள்ளதாக தெரிவித்த

எதிர்க்கட்சித் தலைவர்,பல்வேறு தரப்பினரின் போலி குற்றச்சாட்டுகளை கேளாது அரச ஒதுக்கீட்டின்றி எதிர்க்கட்சியில் இருந்தவாறு அரச பாடசாலைகளுக்கு பேருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


இத்தகைய வெற்று குற்றச்சாட்டுகள் எதற்கும் தானும் எதிர்க்கட்சியும் சளைக்கப்போவதில்லை என்றும், தூய்மை,நேர்மை,வெளிப்படத்தன்மையோடு குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தி கிராமத்துக்கும்,நகரத்துக்கும்,

நாட்டுக்கும் நன்மை பயப்பதால் குறித்த பணியை தொடருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்நாட்டில் கல்வி அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கூட நினைத்தார் எனவும்,அன்றிருந்த கல்விப் பாகுபாடுகள் நீக்கப்பட்டு உத்தியோகபூர்வ சீருடைகள் வழங்கப்பட்டதோடு,பாடசாலை மாணவர்களின் முறையான போசாக்குக்கான இலவச உணவுவேளைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பாடசாலைக்கு பேருந்து வழங்குவது இலவசக் கல்விக்கான ஒரு முதலீடாகும் எனவும், கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கும் போலவே தொலைதூர பிரதேச பாடசாலைகளுக்கும் பேருந்து வசதிகளை வழங்குவதன் மூலம் கல்விப்பாகுபாட்டை இல்லாதாக்குவதாகவும்,இலவசக் கல்வி என்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி அதன் இரண்டாவது புரட்சியை இதன் மூலம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.