Header Ads



10 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன


நாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில் 10 இலட்சத்து 94ஆயிரத்து 912 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 26 ஆயிரம் கைதிகள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும்  அவர் சபையில் தெரிவித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவதற்காகவே ஐஸ்ரக போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துறைமுகங்கள்,கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


கடந்த ஆறு மாத காலத்திற்குள் 27 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 17 சட்டங்கள் நீதியமைச்சுடன் தொடர்புடையவை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலும் நாடு போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.ஐஸ் போதைப்பொருளுக்கு எதிரான கடும் சட்டம் உருவாக்கப்பட்டு,ஐஸ் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகம் தொடர்பான குற்றங்களுக்காக அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


சட்டத்தை முறையாக செயற்படுத்தும் தரப்பினர் ஊடாக கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் நீதிமன்ற வழக்கு நிறைவடைவதற்கு முன்னர் சமூகமயப்படுத்தப்படுகின்றமை பரதூரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். நீதிமன்றங்களில் பல ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடைய பழமையான சட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.


காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறைவு செய்யப்பட்ட 1653 ஆவணங்கள் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அக் குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.


அதே வேளை மேலும்3520 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதுடன் 5246 குடும்பங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


யுத்த காலத்தில் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள 11,780 பேர் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு நடமாடும் சேவை ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் ஒழிப்புக்காக விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மாதங்களில் ஒன்பது மாகாணங்களிலும் போதைப்பொருள் ஒழிப்புக்காக விசேட செயலணியை ஸ்தாபிக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயலணி அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.


2023 ஆம் ஆண்டு நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக 2700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.