Header Ads



1000 முறை பெனால்ட்டி பயிற்சி எடுத்த ஸ்பெயின், மொறோக்கவிடம் தோற்றது எப்படி..?


உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்குச் செல்லும் முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெறக்கூடும்.


காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியை பெனால்ட்டி ஷுட் அவுட் மூலம் வீழ்த்தியிருக்கிறது மொரோக்கோ. ஸ்பெயின் அணி பெனால்ட்டி ஷுட் அவுட் மூலம் தோற்கும் நான்காவது உலகக் கோப்பை போட்டி இது.


ஸ்பெயின் வீரர்கள் அடித்த பெனால்ட்டிகளை கோலுக்குள் செல்ல விடாமல் தடுத்த கோல்கீப்பர் யாசின் பௌனு மொரோக்கோவின் தேசிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறார். முதல் பெனால்டியை ஸ்பெயின் வீரர் பேப்லோ சரபியா கம்பத்தில் அடித்தார். அந்தப் பந்தையும்கூட, கோலுக்குள் வருமாறு அடிக்கப்பட்டிருந்தால் யாசின் தடுத்திருப்பார்.


மொரோக்கோவுக்காக வெற்றிக்கான கோலை அஷ்ரப் ஹக்கிமி அடித்தபோது அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருந்தது. ஹக்கியிமியின் தாயார் அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகப் பரவியது.


ஒரு பெனால்டியைகூட கோலாக்க முடியாமல் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியிருக்கிறது 12 ஆண்டுகளுக்கு முன்பு கோப்பையை வென்ற ஸ்பெயின்.


நாக் அவுட் சுற்றுக்கு வந்துவிட்டதால், தனது அணி வீரர்களுக்கு ஆயிரம் முறை பெனால்ட்டி பயிற்சியை எடுத்துக் கொள்ளுமாறு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயி என்ரிக் கூறியிருந்தார். ஆனால் அந்தப் பயிற்சியில் ஒன்றைக்கூட ஆட்டத்தில் அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.


லீக் போட்டிகளில் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணியை நாக் அவுட் போட்டியில் வாய்ப்பே வழங்காமல் கட்டிப் போட்டது மொரோக்கோ அணி. தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் மொரோக்கோ அணியின் பாதுகாப்பு அரணைத் தடுக்க முடியாமல் அந்த அணியின் வீரர்கள் திணறினார்கள்.


25-ஆவது நிமிடத்தில் மொரோக்கோ கோல் கீப்பர் யாசின் ஒரு தவறான பாஸை அடித்ததால் அதை கோலாக்கும் வாய்ப்பு ஸ்பெயின் வீரர் கேவிக்குக் கிடைத்தது. ஆனால் அவர் அடித்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பிவிட்டது.


முதல்பாதி ஆட்டத்தில் 67 சதவிகிதம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் ஸ்பெயின் அணியின் தாக்குதல் ஆட்டம் வீரியமாக இல்லை. ஒன்றிரண்டு வாய்ப்புகளை மொரோக்கோ பாதுகாப்பு அரண் தடுத்துவிட்டது.


ஆட்ட நேரம் முடியும்போது ஸ்பெயின் அணி 77 சதவிகிதம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1000-க்குமே மேற்பட்ட பாஸ்களை செய்திருந்தது. அவற்றில் 926 பாஸ்கள் துல்லியமானவை. மொரோக்கோவால் வெறும் 304 பாஸ்களை மட்டுமே துல்லியமாகச் செய்ய முடிந்தது. ஆனாலும் பாதுகாப்பில் அவர்கள் திறமையைக் காட்டினார்கள்.


அதனால் ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் வழங்கப்பட்டபோதும் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலைக்கு போட்டி சென்றது.


போட்டி முழுவதுமே மொரோக்கோ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். மொரோக்கோ தேசியக் கொடி மாத்திரமல்லாமல் பாலஸ்தீனக் கொடிகளையும் அங்கே பார்க்க முடிந்தது.


பெனால்ட்டி ஷூட் அவுட் நிலைக்குச் சென்ற பிறகு மொரோக்கோ அணிக்கு கூடுதலாக உற்சாகக் குரல்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு முறை ஸ்பெயினின் கால்கலுக்குப் பந்து செல்லும்போதெல்லாம் மொரோக்கோ ரசிகர்களின் குரல் உச்சத்தை எட்டியது.


முதல் பெனால்ட்டியை மொரோக்கோவின் சாபிரி அடித்தார். ஸ்பெயினின் கோல் கீப்பர் ஒரு பக்கமாகச் செல்ல மற்றொருபுறமாகப் பந்து சென்று கோலை அடைந்தது.


ஸ்பெயின் அணிக்காக முதல் பெனால்டியை அடித்த சரபியா கோல் கீப்பரின் இடதுபுறக் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிது. ஆனாலும் பந்துக்கு மிக அருகிலேயே யாசினின் கைகள் இருந்தன.


மொரோக்கோவின் இரண்டாவது பெனால்ட்டியை ஹக்கிம் ஸியேச் அடித்து கோலாக்கினார். 


ஸ்பெயினின் இரண்டாவது பெனால்டியை கார்லோஸ் சோலெர் அடித்தார். ஆனால் பந்து வரும் திசையை மிகத் துல்லியமாகக் கணித்து பாய்ந்து தடுத்துவிட்டார் யாசின். ஸ்பெயினின் மூன்றாவது பெனால்ட்டியும் இப்படியே தடுக்கப்பட்டது.


அதே நேரத்தில் மொரோக்கோவின் மூன்றாவது பெனால்ட்டியும் ஸ்பெயின் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.


கடைசியாக வெற்றிக்கான பெனால்ட்டியை துல்லியமாக அடித்தார் மொரோக்கோவின் அஷ்ரப் ஹக்கிமி. கோல்கீப்பரை ஒரு புறமாக நகரவைத்துவிட்டு நடுவே பந்தை அடித்து கோலாக்கினார். 


இதன் மூலம் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கணக்கில் மொரோக்கோ வெற்றி பெற்றது. உலகக் கோப்பை பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.


இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளின் காலுறுதிக்குச் செல்லும் நான்காவது ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது மொரோக்கோ. 


இதற்கு முன்னதாக 1990-இல் கேமரூனும், 2002-இல் செனகலும், 2010-இல் கானாவும் காலிறுதிப் போட்டி வரை சென்றிருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஆப்பிரிக்க அணியும் அரையிறுதிப் போட்டிக்குச் சென்றதில்லை. 


ஸ்பெயின் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். போட்டிக்குப் பிறகு அவரது தாய் அவரை முத்தமிட்ட காட்சி வைரலானது.

No comments

Powered by Blogger.