Header Adsவிராட் கோலியிடம் இருந்து..!


 நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வருவது இயல்பு தான். காலத்தை விட வலுவானது எதுவுமில்லை. காலம் தலைகீழாக மாறவும் அதிக நேரம் பிடிக்காது. இந்த சொலவடை பழையது தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் உண்மை தான் இது.


இந்திய கிரிக்கெட்டில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. விராட் கோலி தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


2022 ஜனவரியில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


"இது ஒரு கடினமான முடிவு தான். ஆனால் இத்தனை நாட்களில் நான் ஒரு கேப்டனாக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தேன்" என்று அவர் கூறியிருந்தார்.


இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஒரு நாள் கேப்டன் பொறுப்பையும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தார்.


முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், "கோலி சற்று தன்னை மறந்த நிலையில் இருக்கிறார். அவர் மௌனமாகிவிட்டார், பேட்டிங் செய்யும் போது இருக்கும் அவரது ஆக்ரோஷம் இப்போது இல்லை.


ஆட்டத்தின் போக்கைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் துடிக்கும் அந்தப் பழைய விராட் கோலியை காணவில்லை. அவரிடம் இன்னும் ஐந்து-ஆறு ஆண்டுகள் கிரிக்கெட்டில் நிலைக்க வாய்ப்பு உள்ளது," என்று குறிப்பிட்டார்.


முன்னாள் கேப்டன் கபில்தேவும் கோலிக்கு "ஓய்வு எடுங்கள்" என்று அறிவுறுத்தினார்.


பின்னர் ஆசிய கோப்பையில், விராட் கோலி நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு சதம் அடித்தார். ஆனால் சிறிது காலத்திற்கு முன், மெல்போர்னில் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருந்த அந்த ஷாட்கள் இப்போது இல்லை.


டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில், பாகிஸ்தானை தோற்கடிக்கும் பணியை கோலி தனது தோளில் சுமந்தார்.


அன்றிரவு ஹாரிஸ் ரவுஃப் வீசிய பந்துகளில் கோலியின் இரண்டு சிக்ஸர்களைப் பார்த்தவர், விராட் கோலியின் பெயருக்கு நடுவில் 'கிங்' என்ற பட்டப்பெயர் மீண்டும் திரும்ப வேண்டும் என்று உறுதியாக நம்பியிருப்பார்கள்.


1986ஆம் ஆண்டு, அன்று மாலை ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட ஜாவேத் மியான்டத்தின் சிக்ஸரை ஒரு தலைமுறை இந்திய ரசிகர்கள் டிவி திரையில் பார்த்தனர். விராட்டின் சிக்ஸர் அதை நினைவு படுத்துவதாக இருந்தது.


அதன்பிறகு, இந்தியா பாகிஸ்தானை பலமுறை தோற்கடித்தது, ஆனால் மியான்டத்தின் சிக்ஸருக்கு இணையாக ஒரு சில சிக்ஸர்களே கருதப்பட்டன.


1996 உலகக் கோப்பையில் வக்கார் யூனிஸின் ஒரு ஓவரில் அஜய் ஜடேஜாவின் 22 ரன்கள், பின்னர் 2003 உலகக் கோப்பையில் செஞ்சூரியன் மைதானத்தில் ஷோயப் அக்தரின் பந்தில் அப்பர் கட் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சிக்ஸர் என ஒரு சில குறிப்பிடத்தக்க சிக்ஸர்களுக்குப் பிறகு, கோலியின் இந்த சிக்ஸர்கள் எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் ஒரு பெரிய ஆறுதல் தான்.


இப்போது விராட் மெல்போர்னில் அந்த அந்தஸ்தை அடைந்தது மட்டுமின்றி மறு பிறவி எடுத்தும் வந்துள்ளார்.


பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து விட்டு, தனது மன உறுதியை அதிகரிக்க கோலி இப்போது எதிரணி பந்துவீச்சாளர் அல்லது ரசிகர்களை நோக்கி அல்லாமல், தனக்குத்தானே பேசிக்கொள்வதை கவனித்தீர்களா?


கோலி கடந்த சில போட்டிகளில் வெற்றிக்குப் பிறகோ சிறப்பான இன்னிங்ஸுக்குப் பிறகோ வானத்தை நோக்கி விரலை உயர்த்தி தனக்குத்தானே பேசுவதையும் கவனித்தீர்களா?


அரை சதம் அல்லது வெற்றியின் போது மற்றவர்களுக்கு மட்டையைக் காட்டுவதற்குப் பதிலாக, கோலி இப்போது தனது முஷ்டிகளை மடக்கித் தரையில் குத்துவதை கவனித்தீர்களா?


உளவியலாளர்கள் ஆர் ஜி கௌடென் மற்றும் எல் கிரஸ்ட் ஆகியோர் தென்னாப்பிரிக்க ஜர்னல் ஆஃப் சயின்ஸில் " த மீடியேட்டிங்க் ரோல் ஆஃப் மென்டல் டஃப்னஸ்" என்ற கட்டுரையில், "விளையாட்டில் சவால்கள், வெற்றிகள் மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் ஒரு வீரரின் போராட்ட அணுகுமுறையிலிருந்து தான் மன உறுதி வருகிறது. அந்த உறுதி பெற்ற பின் அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபடுகிறது" என்று எழுதியுள்ளனர்.


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோலி, "எனது இறுதி நோக்கம் அணியை வெற்றியடையச் செய்வது; அணிக்காக விளையாட வேண்டியது அவசியம்; அதற்காக நான் கடினமாக உழைத்து என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். அது நடக்காத போது, என்னை நானே ஊக்குவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது." என்றார்.


விராட் கோலி பொறுமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியதற்கும், குடும்பத்துடன் விடுமுறை எடுத்துக்கொண்டதற்கும், கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் விலகியதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.


ஆசிய கோப்பையில் 276 ரன்கள் எடுத்து, அந்தப் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவரானார் கோலி. இதன் மூலம் அவரது ஐசிசி தரவரிசையும் உயர்ந்தது.


தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக், "கோலியின் கவனம் ஒருபோதும் சிதறவில்லை" என்று கருதுகிறார்.


பொல்லாக் கூறுகையில், "போட்டி விரைவில் முடிந்தால், ஹோட்டல் அறைக்கு பதிலாக ஜிம்மிற்குள் பயிற்சி பெற வரும் வீரர் கோலி. அடுத்த போட்டிக்கு அவர் தயாராக வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. ஓரிரு தொடரில் விளையாட முடியவில்லை, அல்லது இரண்டு சீசன்களுக்கு சதம் அடிக்க முடியாமல் போனது ஒருவரின் பெருமையை குறைக்காது, மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அதிக நேரம் எடுக்காது." என்று குறிப்பிட்டார்.


ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு கோலி மீது அதிக நம்பிக்கை இருந்தது, ஆனால் அவர் முன்பு போல் இப்போது ஒரு மேட்ச் வின்னராக இருப்பாரா ஐயம் பலருக்கு இருந்தது.


ஆனால் எப்போதும் போல விராட் கோலி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுவர் போல் நின்றார்.


வாய்ப்பு இருந்தது, அதைத் தவற விடாத உறுதியும் இருந்தது.


160 ரன்கள் என்ற இலக்குடன் துவங்கிய இந்திய அணியில், கோஹ்லி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், அதாவது மொத்த ஸ்கோரில் பாதிக்கு மேல் இவர் எடுத்தார்.


போட்டிக்குப் பிறகு, "இது போன்ற ஒரு ஆட்டத்திற்காகத் தான் ஒரு வீரர் கிரிக்கெட் விளையாடுவது. அப்படிப் பட்ட ஒரு ஆட்டம் அது. 14-15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை மீண்டும் ஒருமுறை உசுப்பி எழுப்ப இதுபோன்ற சவால்கள் தேவை." என்று அவர் கூறினார்.


இந்த சுற்றுப்பயணம் கோலியின் ரன்களைக் குவிக்கும் தாகத்துக்கு மட்டுமல்ல, அவரது இயல்பில் சிறப்பான மாற்றத்தை கொண்டு வருவதற்கான நேர்மையான முயற்சிக்கும் வழி வகுத்தது.


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு, விருப்பத்தின் பேரில் இரண்டு நாட்கள் நெட் பிராக்டீஸ் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, வீரருக்குத் தேவை என்றால் மட்டும் செய்யலாம்.


இரண்டு நாட்களிலும் விராட் பயிற்சிக்கு வந்து அதிக பேட்டிங் செய்தார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார், பின்னர் அவர்களுக்கிடையில் ஆட்டம் குறித்த நீண்ட விவாதம் நடந்தது.


இந்நாட்களில் களத்தில் கூட கோலியின் முந்தைய 'கோப குணம்' வெளிப்படுவதில்லை. அவர் சாதாரணமாகவே சிரித்துக்கொண்டே காணப்படுகிறார். பெர்த்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஒரு கேட்சைத் தவறவிட்டார். தன்னைத் தானே திட்டிக்கொள்வதற்குப் பதில், அவர் விரக்தியிலும் சிரித்துக்கொண்டார்.


நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டூயல், "விராட் கோலி போன்ற ஒரு வீரர் அந்த நிலையை அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார், அதன் பிறகு அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார். பெரிய வீரர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை, ஆனால் சிறிது நேரம் ஆகிவிட்டால், விமர்சனங்கள் ஆரம்பமாகின்றன. கோலியின் மறுபிறவி ஒரு பெரிய வீரரின் அடையாளம்." என்கிறார். BBC

No comments

Powered by Blogger.