Header Ads



எமது நாட்டின் பெண்களை அடிமைகளாக மாற்ற அபுதாபியும், ஒமானும் முயற்சிக்கின்றனவா..?


 ஊழல், மோசடி, வீண் விரயம், உரிய நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமை போன்ற காரணங்களால் நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.


எனினும், நாட்டையும் வீட்டையும் கட்டியெழுப்புவதற்காக டொலர்களை அனுப்புவதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக எமது நாட்டுப் பெண்கள் கடினமாக உழைக்கின்றனர்.


டொலரை கொண்டுவர பெரும்பாடுபடுகின்ற பெண்களை பணத்திற்காக விற்கும் சிலர் தொடர்பாக சில நாட்களாக நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வௌிக்கொணர்ந்து வருகிறது. 


சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகருக்கு அழைத்துச்செல்லப்பட்ட பெண்களை அவர்களின் விருப்பமின்றி ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக நியூஸ்ஃபெஸ்ட் தகவல் வௌியிட்டிருந்தது. 


இலங்கை பெண்கள் 12 பேர் அந்த குழுவில் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


இவர்கள் நேற்று ஓமானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்களது தொலைபேசிகள் இயங்கவில்லை.


இந்த 12 பெண்களில் ஒருவரான சசிகலாவின் கணவர் இன்று நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவித்தார்.


அங்கு சென்று அலுவலகம் ஒன்றில் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர். அந்த முதலாளியுடன் நான் கதைத்தேன். திங்கட்கிழமை அவர்களுக்கு தொழில் கிடைக்கும் என கூறினார். அது தொடர்பில் மேலதிக தகவல் எனக்கு தெரியாது.  எனது தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவ பரிசோதனையில் சித்திபெறாததால், மனைவியை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தேன். அவர்களுக்கு தொழில் விசா வழங்கப்படவில்லை. சுற்றுலா விசாவே வழங்கப்பட்டுள்ளது. அவர் பயந்துள்ளதால். தன்னை இலங்கைக்கு அழைக்குமாறு கூறினார். பின்னர் நான் அவர்களுடன் கதைத்த போது, நான்கு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை கேட்டனர். அவர்களுக்கு செலவு செய்துள்ளோம். அந்த பணம் வேண்டும் என கூறுகின்றனர். அவர்களுக்கு இப்போதைக்கு பிரச்சினை இல்லை


என அவர் கூறினார். 


இந்த பெண்கள் சுற்றுலா விசா மூலம் அபுதாபிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவர்களது கடவுச்சீட்டுகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர், வேலைவாய்ப்பு முகவர் நிறுவன தரகர்களால் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 


அபுதாபியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, தூதரகத்தின் தொழில் பிரிவு அதிகாரிகள் கடந்த 13 ஆம் திகதி அந்த வீட்டிற்கு சென்றிருந்தனர்.


தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அனைவரும் வேலை செய்வதற்கு விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்ட கடிதமொன்றில் குறித்த பெண்களிடமிருந்து அதிகாரிகள் கையொப்பங்களை பெற்றிருந்தனர்.


எனினும், இந்த கடிதத்தில் இடப்பட்டுள்ள  சசிகலாவின் கையொப்பத்திற்கும் அவர்  கடவுச்சீட்டில் இட்டிருந்த கையொப்பத்திற்கும் இடையே தௌிவான வேறுபாட்டினை காண முடிகிறது. 


இந்த கடிதம் பெறப்பட்டு இரண்டு நாட்களின் பின்னரே இவர்கள் ஓமானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


தூதரகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித விற்பனை மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டா குறிப்பிட்டார். 


இந்த ஆட்கடத்தல் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.


இந்த கடத்தலில் சிக்கிய பெண்கள் பாதுகாப்பு தேடிச்சென்ற ஓமான் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் வைத்து மீண்டும் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இலங்கை பெண்கள் ஓமானில் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏதேனும் ஒரு ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாடுபடுகின்ற எமது நாட்டின் பெண்களை இவ்வாறு நவீன உலகின் அடிமைகளாக மாற்றும் இந்த குற்றச்செயலை உடனடியாக தடுத்து நிறுவத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முக்கியத்துவம் வழங்கி தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

No comments

Powered by Blogger.