கண்டி தமிழ் முஸ்லிம் வர்த்தக சங்கங்கள் இணைந்து நடாத்தும் கலாநிதி ஸாதியாவின் நூல்கள் வெளியீடும், பாராட்டும்
கண்டி தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தக சங்கங்கள் இணைந்து நடாத்தும் தென்கிழக்குப் பல்லைக்கழக தமிழ் மொழித் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி எம். ஏ. எஸ். எப். ஸாதியா பௌஸர் எழுதிய மலையகம் பற்றிய இரு நூல்கள் வெளியீடும் மற்றும் அவர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றமையிட்டு நடத்தும் பாராட்டு விழாவும் இன்று இடம்பெறுகின்றது.
பேராசிரியர் கலாநிதி எம். ஏ. எஸ். எப். ஸாதியா பௌஸர்
முஹம்மது அப்துல் சலாம் - சபீனத்தும்மா ஆகியோரின் புதல்வியான இவர், கண்டி மாவட்டத்தில் உள்ள கெலிஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
களுகமுவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கம்பளை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான இவர், தனது பட்டக் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். அங்கேயே முதுகலைமாணி (2001), முதுதத்துவமாணி (2008), கலாநிதி (2018) ஆகிய பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
மலையகக் கவிதைகள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பன இவரது பிரதான ஆய்வுத் துறைகளாக இருப்பதோடு மொழியியல், நவீன தமிழ், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்பவற்றில் ஆர்வம் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார். இவரது ஆய்வுகள் பலவும் தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்களில் பிரசுரம் கண்டுள்ளன.
1999 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்ற இவர், 2003 இல் நிரந்தர விரிவுரையாளரானார். பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக் காப்பாளராகவும், மாணவர் வழிப்படுத்துநராகவும் கடமையாற்றியுள்ளதோடு, தற்போது மொழித்துறையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனைகள், பாரம்பரிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் போக்குகள், ஆய்வடங்கல் (இஸ்லாமிய தமிழ் இலக்கியம்), புதுகு~hம் : வரலாறும் புனைவும், சீறாப்புராணம் : வரலாறும் புனைவும், மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும், மலையகக் கவிதைகளும் மக்களும் என்பன இவரது நூல்களாகும். தவிர பல்வேறு நூல்களின் பதிப்பாசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும், நூற்தொகுதிகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வரிசையில் முதல் முஸ்லிம் பெண் பேராசிரியை என்ற பெருமையைப் பெறும் இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பெண் பேராசிரியை ஆவார்.இவரது முயற்சிக்கு தமிழ்மொழி ஆசிரியர்களான பெற்றோர் ஊக்குவிப்பு வழங்கியதைப் போல இவரது கணவரான ஏ.எல். பௌஸர் அவர்களும் பக்க துணையாக இருந்து வருகின்றார்.
2021.02.09 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்ற இவரை பல்கலைக்கழக சமூகம் மனமுவந்து வாழ்த்துகிறது.
கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் மற்றும் தமிழ் வர்த்தக சங்கம் இணைந்து நடாத்தும் தென்கிழக்குப் பல்லைக்கழக தமிழ் மொழித் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி எம். ஏ. எஸ். எப். ஸாதியா பௌஸர் எழுதிய “மலையகக் கவிதைகளில் மக்களும்” மற்றும் “மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும் ”எனும் இரு நூல்களின் வெளியீடும், அவர் அண்மையில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் 27-11-2022 பி.ப. 3.00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வின் முதல் அரங்கில் வரவேற்புரையினை கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆர். அன்பழகன் அவர்களும் வாழ்த்துரையினை கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் திரு என். எம். எம். மன்சூர் அவர்களும், தமிழ் வர்த்தக சங்கத்தின் திரு. முத்தையாப் பிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். நூல் அறிமுகவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை முன்னாள் தலைவர் செ. யோகராசா அவர்களும் உரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில் இரண்டாவது அரங்கில் பாராட்டுரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்களும் ஏற்புரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் தொழித் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம். ஏ. எஸ். எப். ஸாதியா பௌஸர் அவர்களும் நன்றியுரையினை கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ. சி. எம். ரஹ்மான் ஆகியோர்கள் உரையாற்றவுள்ளனர்.
கண்டியில் முதல் முறையாக கண்டி தமிழ் வர்த்தக சங்கமும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கமும் இணைந்து இவ்விழாவை நடத்துவது என்பது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க விழாவாகக் குறிப்பிடலாம்.
இக்பால் அலி
22-11-2022
Post a Comment