Header Ads



எனக்கு நேர்ந்தது போலேவே, கோட்டாபயவுக்கு ஏற்பட்டது - மைத்திரிபால

 


கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட தவறான புலனாய்வு தகவல்களே அவர் நாட்டில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று -24- வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தி,படைகளுக்கு வசதிகளை வழங்கி,அவற்றுக்கு கட்டடங்களை வழங்குவதன் மூலம் நாட்டில் இருக்கும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. இதனை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.


2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு என்ற பிரதான கோஷத்தை முன்வைத்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என்று என்னை கடுமையாக விமர்சித்தனர்.



நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்கள் எனக்கூறினர். தேசிய பாதுகாப்பு என்பதே அனைவரதும் கோஷமாக இருந்தது. ஈஸ்டர் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற சர்வதேச அமைப்பு செய்தது.


அரசியல் ரீதியான அதற்கான பொறுப்பை என் மீது சுமத்தினர். அதனை விடுத்து எவரும் எனக்கு அது பற்றிய தகவல்களையோ, கடிதங்களையோ முன்கூடியே வழங்கவில்லை. எனினும் அதனை என் மீது சுமத்தி பேசினர்.தற்போதும் பேசுகின்றனர்.



ஈஸ்டர் தாக்குதல் என்பது நாங்கள் மிகவும் கவலைக்கும் வருத்தத்திற்கும் உள்ளான சந்தர்ப்பம். அப்போது வந்த தகவல்கள், கடிதங்கள் அதிகாரிகள் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.


அவர்கள் இடையில் பரிமாறிக்கொண்டார்களே அன்றி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் என்னிடம் எந்த தகவல்களையும் வாய்மொழி மூலமோ, கடிதங்கள் மூலமோ வழங்கவில்லை.


கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்தது. எனக்கு நேர்ந்தது போலேவோ கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்டது. எனக்கு கிடைத்த தகவல்களின்படி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற நேரிட்ட நாளில் கொழும்புக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே வருவார்கள் என அவருக்கு புலனாய்வு தகவல்களை வழங்கி இருந்தனர்.


இதனால், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே வருகின்றனர், அவர்களை கண்ணீர் புகை, தண்ணீர் தாக்குதல்களை நடத்தி கட்டுப்படுத்தி விடலாம் என கோட்டாபய ராஜபக்ச நினைத்தார்.


எனினும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொழும்புக்கு வந்தனர். இதனை பொலிஸாரும், இராணுவத்தினரும், கோட்டாபய ராஜபக்சவும் எதிர்பார்க்கவில்லை. நான்கு லட்சம் பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்படுத்த முடியுமா?.


ஆனால், நடந்தது என்ன?நாட்டின் ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேற நேரிட்டது. பிரதமருக்கு ஒழிந்துக்கொள்ள நேரிட்டது. அமைச்சர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனது.


ஆளும் கட்சியில் உள்ள எனது நண்பர்களான அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருந்து என்னை தொடர்புக்கொண்டு தாம் இந்த நாடுகளில் இருப்பதாக கூறினர். 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே வருகின்றனர் என்று கோட்டாபய ராஜபக்சவுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.



நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என அனைத்தையும் பிடித்துக்கொண்டனர். இதனால், பாதுகாப்பு படையினருக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக அவற்றை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.   tamilw  


1 comment:

  1. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தனக்கு அறவே தெரியாது. பங்கு இல்லை என தமக்குத் தாமாகவே நிறுவுவதற்கு ஏகப்பட்ட முயற்சிகளை எடுக்கின்றார், பொய்யுக்கு மேல் சொல்லி பொதுமக்களை எமாற்றிய காலம் மலையேறிவிட்டது. பொதுமக்கள் கேட்பது ஒன்றுதான். மைத்திரி நியமித்த சனாதிபதி கமிசனின் சிபார்சுகளை அமுல்நடாத்துங்கள் என்பதுதான். அவருடைய கமிசனே மைத்திரிக்கு இந்த தாக்குதலில் அதிக பங்கிருக்கின்றது. அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கூறும் போது கோத்தபாய மௌனமாக இருந்தார். மைத்திரிக்கு பின்னால் இ்ருப்பது கோத்தபாய என்பது உலகறிந்த உண்மை. உண்மைகளை மறைக்க எடுக்கும் எந்த முயற்சிகளும் இறுதியில் அதுவே உண்மையை நிரூபிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.