Header Ads



நெருக்கடியில் மன்னார் மாவட்ட விவசாயிகள்


-மன்னார் நிருபர்-


எரிபொருள்  மற்றும்  இயந்திர உதிரிப்பாகங்களின்  விலை அதிகரிப்பைக் காரணமாககொண்டு உழவு இயந்திர வாடகைக் கட்டணத்தை   உரிமையாளர்கள் அதிகரித்துள்ளதால் ஆரம்ப கட்ட உழவுப் பணிகளை மேற்கொள்ளமுடியாத  கையறு நிலைக்கு மன்னார் மாவட்ட விவசாயிகள் முகம் கொடுத்துள்ளதாக மாந்தை மேற்கு சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பிலிப்பு மடுத்தின்  ஜப்னா இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


மன்னார் மாவட்டத்தில்  தற்போது வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் விவசாயிகள்  பெரும்போக நெற் செய்கைக்கு தயாராகிவருகின்றனர். எனினும் எரிபொருள் மற்றும்   உதிரிப்பாகங்களின் விலையேற்றத்தினால் உழவு இயந்திர உரிமையாளர்கள் தமது வாடகை கட்டணத்தை முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதினால் மன்னார் மாவட்ட விவசாயிகள் தமது வயல் நிலங்களில் உழவுப்பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய  நிலையில்   மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள   பெரும்போக நெற்செய்கை பாதிப்பு அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பு மடுதீன் ஜப்னா முஸ்லிம் செய்தி தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.


மேலும்  அதிக கட்டணம் காரணமாக வாடகை  உழவு இயந்திரங்கள் மூலம் தமது வயல் நிலங்களில்  உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாத மன்னார் மாவட்ட விவசாயிகள், இவ்வருடம்  தாம் மேற்கொள்ளவுள்ள பெரும் போக நெற்செய்கைக்கான உழவுப் பணிகளைப்  பராம்பரிய முறையில் கால்நடைகள் மூலம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக பிலிப்பு மடுத்தீன் மேலும் தெரிவித்தார்.


மன்னார் மாவட்டத்தில் இவ்வருட பெரும்போக நெற்செய்கை சுமார் 57820 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் விவசாயிகள் தமது வயல் நிலங்களில் ஆரம்ப கட்ட உழவுப் பணிகளை இன்னும் சில தினங்களில் ஆரம்பித்தல் வேண்டும்.


இவ்வாறான நிலையில்  டீசல்  மற்றும் உழவு இயந்திர உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்புக்   காரணமாக மன்னார் மாவட்ட உழவு இயந்திரங்களின் உரிமையாளர்கள்  ஒரு ஏக்கர் வயற்காணியை உழுவதற்கு சுமார் 25 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரை தற்போது கட்டணமாக  அறவிடுதாக பிலிப்பு மடுத்தீன் குறிப்பிடுகிறார்.


மன்னார் மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையின் போது ஒரு ஏக்கர் பரப்புடைய வயற்காணியை உழுவதற்காக 7000 முதல் 9000 ஆயிரம் ரூபாய்களை உழவு இயந்திர உரிமையாளர்கள் கட்டணமாக

அறவிட்டனர். மேலும் குறித்த உழவுக் கட்டணம் கடந்த 2021ஆம் ஆண்டு 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. இந்த நிலையில்  இவ்வருட பெரும்போக நெற்செய்கைகான  உழவுக் கட்டணம்   ஒரு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரை உயர்ந்துள்ளதினால் ஏலவே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் விவசாயிகள் மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக

மாந்தை மேற்கு சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பிலிப்பு மடுத்தின்  ஜப்னா இணையத்தளத்திற்கு  மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.